![Anjali Patil 5 lakh scam issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/IENWIQUgT-sOGjCussrC41Z-Hfn_Vi_euKDhX9Qy_wc/1704195201/sites/default/files/inline-images/156_24.jpg)
இந்தி, மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கவனம் செலுத்தி வருபவர் அஞ்சலி பாட்டீல். தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான காலா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மும்பையில் வசித்து வரும் அவர், மோசடியால் 5 லட்சம் ரூபாய் இழந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் அஞ்சலி பாட்டீலுக்கு, கூரியர் அலுவலகத்தில் பணிபுரிவதாக மர்ம நபர் பேசியுள்ளார். அவர், அஞ்சலி பாட்டீல் பெயரில் வெளிநாட்டில் இருந்து ஒரு பார்சல் வந்ததாகவும் அதில் போதைப்பொருள் இருந்ததை சுங்க துறையினர் கைப்பற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசாரை தொடர்பு கொண்டு இது தொடர்பாக ஆலோசனை பெறுமாறும் கூறியுள்ளார்.
இதையடுத்து மும்பை சைபர் கிரைம் போலீஸ் என சொல்லிகொண்டு ஒருவர் ஸ்கைப் மூலமாக அஞ்சலி பாட்டீலை தொடர்பு கொண்டுள்ளார். அவர் 3 வங்கி கணக்குகளில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இதை சரி பார்க்க ரூ.96,525 கட்டணமாக செலுத்த வேண்டும் என கேட்டுள்ளார். அவரை உண்மையான அதிகாரி என நம்பிய அஞ்சலி பாட்டீல் உடனடியாக, அந்த நபர் கேட்ட பணத்தை ஜிபே மூலம் அனுப்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து வங்கியில் இருந்து முறைகேடு நடந்திருக்கலாம் என கூறி, அது குறித்து விசாரிக்க மேலும் ரூ.4 லட்சத்து 83 ஆயிரத்து 291ஐ செலுத்த வேண்டும் என்றும் கூற, அந்த பணத்தையும் அஞ்சலி பாட்டீல் அனுப்பி வைத்துள்ளார். மொத்தம் 5 லட்சத்து 79 ஆயிரத்து 816 ரூபாய் அனுப்பியுள்ளார். இதன் பிறகு இது மோசடியாக இருக்கலாம் என உணர்ந்த அவர், போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.