![vdbdgdg](http://image.nakkheeran.in/cdn/farfuture/KpDqgn6_lQbrZXOkGPt0JufpheRVK5PIiSLAShob2tg/1621323248/sites/default/files/inline-images/E1j_1APVoAI9Gas.jpg)
நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.
இதற்கிடையே கரோனா இரண்டாம் அலையால் சில மாதங்களாகவே திரை பிரபலங்களான விவேக், கே.வி. ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன், பவுன்ராஜ், அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்துஜா, நிதீஷ் வீரா உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் தொடர்ச்சியாக உயிரிழந்துவருவது மக்களிடையே கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகரும், பல வெற்றி திரைப்படங்களை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பு நிறுவனமான அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட், கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதுகுறித்து அவரது நண்பர், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "எனது 36 வருட நண்பன் அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் கரோனவால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். அவர் மீண்டு வர அனைவரும் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.