கோவை மாவட்டம் கொடிசியா வளாகத்தில் தொழில் அமைப்பினர் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்.எல்.ஏ சீனிவாசன் மற்றும் பாஜகவின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவரும், அன்னபூர்ணா உணவக உரிமையாளருமான சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கையுடன் கேள்விகளை முன்வைத்தார்.
'உங்கள் பக்கத்தில் இருக்கிற எம்எல்ஏ (வானதி ஸ்ரீனிவாசனை குறிப்பிட்டு) எங்கள் ரெகுலர் அன்னபூர்ணா கஸ்டமர். வரும் போதெல்லாம் சண்டை போடுகிறார்கள். ஸ்வீட்டுக்கு 5% ஜிஎஸ்டி வைத்திருக்கிறீர்கள் இன்புட் கொடுக்கிறீர்கள். உணவுக்கு 5% ஜிஎஸ்டி வைத்திருக்கிறீர்கள் இன்புட் கிடையாது. காரத்திற்கு 12% வைத்திருக்கிறீர்கள். பேக்கரியில் உள்ள பிரட், பன்னை விட்டுவிட்டு மற்ற எல்லாவற்றுக்கும் 28% ஜிஎஸ்டி வைத்திருக்கிறீர்கள். இந்த அம்மா வர வேண்டியது ஜிலேபி சாப்பிட வேண்டியது. அடுத்தது காபி கொடுக்கணும். காரம் வேண்டும் என்பது. காரத்திற்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி என்று சொன்னால் உடனே சண்டைக்கு வருவது. இது டெய்லி எங்களுக்கு நடக்கிறது. ஒரே பில்லில் ஒரு ஃபேமிலிக்கு டிஃபரண்ட் டிஃபரண்டாக ஜிஎஸ்டி போட்டு கொடுப்பது கஷ்டமாக இருக்கிறது. பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை. அதே நேரம் பன்னுக்குள்ள கிரீம் வைத்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி கொடுக்க வேண்டும். கஸ்டமர் என்ன சொல்கிறார்கள் என்றால் 'கிரீமையும் ஜாமையும் கொண்டு வா நானே பன்னுக்குள் வைத்துக் கொள்கிறேன்' என்கிறார்கள். கடை நடத்த முடியல மேடம். அதனால் ஒன்றாக எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரி ஜிஎஸ்டி ஜாஸ்தி செஞ்சுருங்க'' என கொங்கு தமிழில் கோரிக்கை தெரிவித்திருந்தார். இதனை கேட்டு அரங்கம் சிரித்தது.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து பேசியதோடு எம்.எல்.ஏ தன் உணவகத்திற்கு வந்து ஜிலேபி சாப்பிட்டு விட்டு சண்டை போடுவது குறித்தும் ஹோட்டல் சங்க நிர்வாகி பேசியது சர்ச்சையை ஏற்படுத்த, இது குறித்து அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோவும் வெளியாகி இருந்தது. ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பியதற்காக உணவக உரிமையாளர் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டிருக்கிறார் என எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுகவின் கனிமொழி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆகியோர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து விளக்கமளித்த வானதி ஸ்ரீனிவாசன், “நாங்கள் அண்ணபூர்ணா ஹோட்டல் உரிமையாளரை மிரட்டி கொண்டு வந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக சொல்கிறார்கள். ஆனால் அவரே தான் தவறாக பேசி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் நான் அமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் கேட்டதாக சொன்னார். இதையடுத்து சீதாராமனிடம்அண்ணபூர்ணா உணவக நிர்வாகி மன்னிப்பு கேட்ட வீடியோவை பாஜக நிர்வாகிகள் வெளியிட்டதற்கு பா.ஜ.க. மாநில தலைவர் மன்னிப்பு கேட்டார்.
இந்த சம்பவம் குறித்து தற்போது தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, கலைஞர் முன்பு அஜித் சொன்ன குற்றச்சாட்டு ஞாபகத்துக்கு வருவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “நடிகர் அஜித் ஒரு முறை தலைவர் கலைஞர் முன்பு எழுந்து ஒரு குற்றச்சாட்டை வைத்தார். அப்போது பலரும் அஜித்தின் வீரம் அது என்ற போது ‘கலைஞர் எனும் அரசர் தன் குடிமக்கள் யாரும் தைரியமாக தன் முன் குற்றச்சாட்டுகளை வைக்கலாம்’ என மக்களுக்கு ஏற்படுத்திய நம்பிக்கையது என நான் சொன்னேன். அண்ணபூர்ணா உரிமையாளர் கூனி குறுகி மன்னிப்பு கேட்கும் வீடியோ பார்க்கும் போது அதுதான் நினைவில் வந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
2010ஆம் ஆண்டு தமிழ் திரையுலகினர் சார்பில் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞருக்கு ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற பெயரில் விழா நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய அஜித், “இதுபோன்ற அரசியல் விழாக்களில் எங்களை சிலர் கட்டாயப்படுத்தி வர வைக்கிறாங்க” என கலைஞர் முன்பு பேசினார். இதற்கு ரஜினியும் எழுந்து நின்று கைதட்டினார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்த பின்பு கலைஞரை அஜித் நேரில் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.