தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் கவனம் செலுத்தி வரும் அமலா பால் கடைசியாக 'கடாவர்' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து 'அமலா பால் புரொடக்ஷன்' என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரித்தும் இருந்தார். இப்படம் அமலா பாலின் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து மலையாளத்தில் 'டீச்சர்', 'கிறிஸ்டோபர்' உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில் அமலா பால் தற்போது பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் 'கைதி'. இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இப்படத்தை 'போலா' என்ற தலைப்பில் அஜய் தேவ்கன் நடித்து அதை இயக்கியும் வருகிறார். இப்படத்தில் நடிகை தபு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது அமலா பால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
'கைதி' படம் ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாகியிருந்தது. அதே சமயம் இந்த படத்தில் கதாநாயகியும் பாட்டும் இல்லாமல் காட்சிகள் அமைந்திருக்கும். இப்படத்தில் அமலா பால் நடிப்பது உறுதியாகும் பட்சத்தில் ஹீரோயினே இல்லாத இந்த படத்தில் அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் எழுந்து வருகிறது.
ஏற்கனவே தமிழில் இருந்து இந்தியில் ரீமேக்கான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'காஞ்சனா', 'ராட்சசன்' உள்ளிட்ட பல படங்கள் தோல்வியடைந்து ரசிகர்களை சோதித்திருந்தது. அந்த வரிசையில் இப்போது லோகேஷ் படமும் வந்துவிடுமோ என்ற கவலையில் உள்ளனர் லோகேஷின் ரசிகர்கள். இதனிடையே லோகேஷின் முதல் படமான 'மாநகரம்' படமும் இந்தியில் 'மும்பைகார்' என்ற தலைப்பில் ரீமேக் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.