நேற்று மாலை நடிகர் அஜித் குமாரிடம் இருந்து யாரும் எதிர்பார்க்காத விதத்தில் ஒரு அறிக்கை வெளியாகி ஊடகங்களில் பொதுத்தளங்களில் பேசு பொருளாகியது, நியுஸ் டிவிகளில் டிபேட்களும், சோஹியல் மீடியாவில் பல பதிவுகளும், மீம்களுமாக இந்த விஷயம் உலா வந்தது. அரசியல்வாதிகளும் இந்த அறிக்கைக்கு தங்களின் கருத்தை பதிவு செய்தனர். அஜித்திடம் இருந்து சுமார் எட்டு ஆண்டுகள் கழித்து வந்திருக்கும் அறிக்கை இதுதான், ஒரு நீண்ட அறிக்கை. இதில் அஜித் அரசியலை பற்றி தெரிவித்த கருத்தை மட்டுமே அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதனுடன் அவர் சமூக வலைதளத்தில் உள்ள ரசிகர்களுக்கும் ஒருசில வரிகளில் அட்வைஸ் செய்திருக்கிறார்.
அதாவது, ‘சமூக வலைதளங்களில் தரமற்ற முறையில் மற்ற நடிகர்களை, விமர்சகர்களை வசை பாடுவதை நான் என்றுமே ஆதரிப்பதில்லை. நம்மை உற்று பார்க்கும் இந்த உலகம் இத்தகைய செயல்களை மன்னிப்பதில்லை’ என்ற வரிகள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் நடந்த சண்டைகளுக்கு பதில் சொல்வதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல அந்த அறிக்கையின் இறுதி பத்தியில் முழுவதும் ரசிகர்களுக்கு வேண்டுகோளாகவே உள்ளது. ‘எனது ரசிகர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கவனம் வைப்பதும், வேற்றுமை கலைத்து ஒற்றுமையுடன் இருப்பது, மற்றவர்களுக்கு பரபஸ்பர மரியாதை செலுத்துவதும், ஆகியவைதான். அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு. “வாழு வாழ விடு”.