நடிகர் அஜித் நடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளிவர இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஹைதராபாத்தில் நடைபெற்றது. பொதுவாகவே அஜித்துடன் நடிக்கும் இளம் நடிகர்கள் படப்பிடிப்பின் போது தாங்கள் பெற்ற அனுபவங்கள் குறித்து சிலாகித்துப் பேசுவதுண்டு. அஜித், தங்களை எப்படி வரவேற்றார், பேசினார், உத்வேகம் தந்தார் என மகிழ்ச்சியுடன் பகிர்வார்கள். அர்ஜுன், வைபவ், பிரேம்ஜி, அஷ்வின், விதார்த் என அந்த வரிசையில் பல நடிகர்களும் நடிகைகளும் உண்டு. அதுபோல, தனது படங்களின் படப்பிடிப்பு முடியும்போது குழுவினருக்கு தன் கையால் பிரியாணி செய்து பரிமாறி இருக்கிறார் அஜித். இது குறித்தும் பல இயக்குனர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அவ்வப்போது பகிர்ந்துள்ளனர்.
த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய படங்களின் இயக்குனராக, சர்ச்சைக்குரிய ஒருவராக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர், 'நேர்கொண்ட பார்வை' படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அஜித்துடன் தான் சென்ற பைக் ரைட் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் நம்மிடம் பகிர்ந்தது.
“முதல் நாள் அஜித் சாருடன் இவர்களெல்லாம் பைக்ஸ் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு பைக் பற்றி எதுவும் தெரியாது என்பதால் அமைதியாக அஜித் சாரை கவனித்துக்கொண்டிருந்தேன். அவர் ஏன் எதுவும் பேசாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டார். 'எனக்கு அவ்வளவாக பைக் பற்றி தெரியாது' என்று கூறினேன். 'சரி பைக் பற்றித்தான் தெரியாது, பைக்கில் பின்னாடி உட்கார்ந்து வர தெரியுமா?' என்றார். 'தெரியும் சார்' என்று அன்றைக்கு சொன்னேன். அதன் பின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பு ஒரு நாள் அஜித் சாரின் ஸ்டாஃப் ஒருவர் என்னிடம் வந்து ஹெல்மெட்டை கொடுத்தார். பின் அவர் என்னை ஒரு ரைட் கூட்டிச் சென்றார். அந்தத் தருணம் எல்லாம் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒன்று."