மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் பெண்களுக்கு தொடர்ந்து நடந்து வருவதாக சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்தியத் திரையுலகை உலுக்கியுள்ளது. பிரபல நடிகைக்கு கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தையடுத்து, படப்பிடிப்பில் நடிகைகள் மற்றும் பணி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை குழுவை அமைத்தது கேரள அரசு. இக்குழு கடந்த 2019ஆம் ஆண்டு அம்மாநில முதல்வரிடம் ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால் அந்த ஆய்வறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளித்து வருகின்றனர். இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும் நடிகைகளிடம் வாக்குமூலம் பெற்று சம்பந்தப்பட்ட திரை பிரபலங்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகிறது. இதுவரை இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், கொல்லம் எம்.எல்.ஏ முகேஷ், ஜெயசூர்யா, இடவேள பாபு, மணியம் பிள்ளை ராஜு, பாபுராஜ் உள்ளிட்டோர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜெயசூர்யா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் எதிரொலியாக தெலுங்கு திரையுலகில் பெண்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் பற்றிய அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அம்மாநில அரசுக்கு பெண்கள் அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். அதை தொடர்ந்து தமிழ் சினிமாலும் பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக உருவான SIAA-GSICC கமிட்டியிடம் கலந்தாலோசித்து 7 தீர்மானங்களை நடிகர் சங்கம் நிறைவேற்றியுள்ளது. இந்நிலையில் மலையாள நடிகை செளமியா, தமிழ் இயக்குநர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக பிரபல ஆங்கில ஊடகமான என்.டி.டி.வி.யில் பேசிய அவர், “என்னுடைய கல்லூரி பருவத்தின்போது தமிழ் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு வந்தது. அதனால் ஸ்கீரீன் டெஸ்ட்க்கு சென்றேன். என் வீட்டில் நான் நடிக்க பணம் கொடுத்தார்கள். அதனால் அவர்கள் என்னை நடிக்க சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் எனக்கு அந்த இயக்குநர் உடனான முதல் சந்திப்பிலேயே அசௌகரியமான அனுபவத்தை எதிர்கொண்டேன். இருப்பினும் வெறும் கடமைக்காக நடிக்க ஆரம்பித்தேன்.
அவர் இயக்கத்தில் நடிப்பதால் அவரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தேன். மற்ற ஆண்களைப்போல் என்னை மிகவும் பொறுமை இழக்க செய்தார். மேலும் ஆணாதிக்க செயல்பாடு காரணமாக பயந்திருந்தேன். ஒரு நாள் அவர் மனைவி இல்லாத நேரத்தில் என்னை மகள் என்று அழைத்து என்னை முத்தமிட்டார். அந்த நேரத்தில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இதை என் நண்பர்களிடம் சொல்ல நினைத்தேன், ஆனால் சொல்ல முடியவில்லை. அப்படி சொன்னால் அவமானமாக இருக்கும் என்று நினைத்தேன். அதே சமயம் தவறு செய்ததாக உணர்ந்து அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவரிடம் நடிக்க ஆரம்பித்தேன். அதை சாதகமாக பயன்படுத்தி என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். இது என் கல்லூரி பருவத்தில் ஒரு வருடமாக தொடர்ந்து நடந்தது” என்று கூறினார். மேலும் அவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த சக நடிகரின் பெயர் தற்போது ஹேமா கமிட்டி அறிக்கையில் உள்ளதாக தெரிவித்தார்.