Skip to main content

பிரபல நடிகையிடம் தவறாக நடந்த வாலிபர்கள்... நடிகையின் வேதனை பதிவு

Published on 19/12/2020 | Edited on 19/12/2020

 

simbu

 

கும்பளாங்கி நைட்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் இளம் நடிகை அன்னா பென். இந்த படத்தை தொடர்ந்து அவர் நடித்த ஹெலன் மற்றும் கபேலா படங்களும் ஹிட் அடித்தது. தற்போது மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கியுள்ளார். இந்நிலையில் வாலிபர்கள் இருவர் அன்னாவிடம் கூட்டம் குறைவாக இருக்கும் மாலில் தவறாக நடந்துகொண்டதை வேதனையுடன் ஒரு பதிவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

அதில், “பொதுவாக சமூக ஊடகங்களில் கோபத்தை வெளிப்படுத்தும் வழக்கம் எனக்கு கிடையாது. ஆனால் நேற்று நடந்த ஒரு சம்பவத்தை என்னால் எளிதில் அப்படியே விட்டுவிட முடியவில்லை. ஒரு சூப்பர்மார்கெட்டில் மக்கள் நடமாட்டம் ஒரு குறைவாக இருந்த ஒரு இடத்தில் இரு ஆண்கள் என்னை கடந்து சென்றனர். அதில் ஒருவர் என்னை கடந்து செல்லும்போது வேண்டுமென்றே என் பின்பக்கத்தில் கைவைத்துச் சென்றார். அந்த தருணம் எனக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்ததால் என்னால் உடனடியாக எதிர்வினையாற்ற முடியவில்லை. ஆனால் அவர் வேண்டுமென்றே செய்தாரா என்று அப்போது உறுதியாக தெரியவில்லை. எனினும் ஏதோ ஒன்று தவறாக இருக்கிறது என்றால் நம்மால் அதை உணர முடியும். ஆனால் என்னிடமிருந்து சற்று தொலைவில் இருந்த என் சகோதரி இதை தெளிவாக பார்த்திருக்கிறார். அவர் என்னிடம் வந்து நான் சரியாக இருக்கிறேனா என்று கேட்டார். என்னால் எதையும் யோசிக்க கூட முடியவில்லை. நான் அவர்களை நோக்கி சென்றபோது அவர்கள் என்னை முற்றிலுமாக தவிர்த்தனர். அவர்கள் செய்தது எனக்கு தெரிந்துவிட்டது என்பதை அவர்களுக்கு புரியவைத்தேன்.

 

அவர்கள் இருவரும் உடனடியாக அங்கிருந்து நழுவி விட்டனர். அப்போதும் நான் மிகுந்த கோபத்துடன் இருந்தேன். ஏனெனில் அந்த தருணத்தில் என்னால் அவர்களை எதுவுமே சொல்லமுடியவில்லை. நானும் என் சகோதரியும் அங்கிருந்து கிளம்பி என் தாயும் சகோதரரும் இருந்த காய்கறிகள் பிரிவுக்கு சென்றோம். அந்த நபர்கள் இருவரும் வெளிப்படையாக எங்களை பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் எங்கள் அருகில் வந்து பேச முயற்சி செய்தனர். நான் நடித்த படங்களின் பெயரை தெரிந்து கொள்ள அவர்கள் விரும்பினர். நாங்கள் அவர்களுக்கு முகம் கொடுக்க வில்லை. தூரத்தில் என் அம்மா வந்து கொண்டிருப்பதை கண்ட அவர்கள் அங்கிருந்து நழுவிச் சென்று விட்டனர்.

 

இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களிடம் நான் சொல்லிருக்க வேண்டிய ஆயிரம் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் நான் சொல்லவில்லை. என்னால் சொல்ல முடியவில்லை. ஒரு சிறிய நிம்மதிக்காக இதை இங்கே பகிர்கிறேன். அவர்கள் எந்தவொரு குற்ற உணர்ச்சியும் இன்றி நடந்து சென்றதும், அதை பார்த்தும் என்னால் எதுவும் செய்யமுடியாமல் இருந்ததும் எனக்கு கோபத்தை ஏற்படுத்துகின்றன. இது எனக்கு முதல் முறை இல்லை என்றாலும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமாகவும், கடினமாகவும் இருக்கின்றது.

 

பெண்ணாக இருப்பது சோர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியே செல்லும்போதும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது, குனியும் போதும் நிமிரும்போதும் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனிக்க வேண்டியிருக்கிறது. இன்னும் பட்டியல் நீள்கிறது. வீட்டில் இருக்கும்போது வெளியே செல்லும் என் அம்மா, தங்கை, தோழிகள் குறித்து கவலைப்பட வேண்டியிருக்கிறது. காரணம் இது போன்ற மோசமான ஆண்கள்.

 

இதைப் படித்துக் கொண்டிருக்கும் பெண்கள், இது போன்ற ஆண்களின் முகத்தில் ஓங்கி அறைவிடுவதற்கான எனக்கில்லாத அந்த துணிச்சல் உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்