![actor simha speech at Vasantha Mullai Trailer launch](http://image.nakkheeran.in/cdn/farfuture/q2j3G8mGc0_shPHeRG_XrHJm4LHlqlB_O4rapsFeZeQ/1675685737/sites/default/files/inline-images/171_20.jpg)
முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக ரேஷ்மி சிம்ஹா தயாரிப்பில் நடிகர் சிம்ஹா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வசந்த முல்லை'. அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக கஷ்மீரா பர்தேசி நடிக்க ஆர்யா மற்றும் ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வருகிற 10 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.
நடிகர் சிம்ஹா பேசுகையில், ''கதைகளை தற்போது கவனமாக தேர்வு செய்து நடிக்கத் தொடங்கி இருக்கிறேன். இனி வலிமையான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பது எனத் தீர்மானித்திருக்கிறேன். கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினேன். உடனே வரச் சொல்லி, 'வசந்த கோகிலா' எனும் இந்தப் படத்தின் கன்னட பதிப்பின் முன்னோட்டத்தை வெளியிட்டு வாழ்த்தும் ஆசியும் வழங்கினார்.
தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவிக்கும் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினேன். அவரும் உடனே வரச் சொல்லி, 'வசந்த கோகிலா' எனும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பின் முன்னோட்டத்தை வெளியிட்டு வாழ்த்தும் ஆசியும் வழங்கினார். சிவராஜ்குமார், சிரஞ்சீவி ஆகியோர் இன்று இந்த உயரத்தில் இருந்தாலும் அவர்களுடைய எளிமை, விருந்தோம்பல் என்னை கவர்ந்தது.
மிகவும் அழுத்தமான திரைக்கதை கொண்ட படம் இது. படம் தொடங்கி 20 நிமிடத்திற்குப் பிறகு ஒரு காட்சியைக் காணத்தவறினாலும் குழப்பம் ஏற்படலாம். ஏனெனில், இந்த திரைப்படம் ஒரு புதுவித பரிட்சார்த்தமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது. ஆர்யாவின் மார்க்கெட் சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு உயர்ந்திருந்தாலும், என் மீதுள்ள நட்பிற்காகவும் கதை பிடித்ததாலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். அவரை பார்க்கையில் ‘இந்த மாதிரி மனுஷங்க இருப்பாங்களா..’ என்று நெகிழ்ந்து பார்த்தேன்" என்றார்.