![sibiraj](http://image.nakkheeran.in/cdn/farfuture/NitvE8vS04JaP5vQ9Wmm8DQ0MnjxWo7z_os3Yx1a-Yg/1611915062/sites/default/files/inline-images/10_36.jpg)
நடிகர் சிபிராஜ் நடிப்பில், இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கபடதாரி'. நேற்று (28.01.2021) வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்க, படம் திரையரங்கில் வெற்றிநடை போட்டு வருகிறது. படத்தின் நாயகன் சிபிராஜுடன் ‘நக்கீரன் ஸ்டூடியோ’ சார்பாக உரையாடினோம். அவர், நம்மிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவற்றுள் ஒரு பகுதி...
"சமீபத்தில் வெளியான ‘மாஸ்டர்’, ‘ஈஸ்வரன்’ திரைப்படங்கள் அனைவருக்குமே பெரிய நம்பிக்கை அளித்துள்ளது. கரோனா காரணமாக படங்கள் எல்லாம் ஓடிடி தளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கும்போது, இனி இதுதான் எதிர்காலமாக இருக்குமோ, மக்கள் இனி திரையரங்கிற்கு வருவார்களா என நாம் நினைத்துக்கொண்டிருந்தோம். மக்கள் திரையரங்கிற்கு தொடர்ந்து வருவார்கள் என்று நிரூபித்த படங்களாக இந்த இரு படங்களும் இருந்தன. ‘மாஸ்டர்’ படம் பார்ப்பதற்காக கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு திரையரங்கிற்குச் சென்றேன். உள்ளே நுழைகையில் பாப்கார்ன் வாசனை வரும்போது கண்ணில் ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது. அந்த இரு படக்குழுவினருக்கும் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். அது கொடுத்த நம்பிக்கையில்தான் நாங்கள் 'கபடதாரி' படத்தை வெளியிட்டுள்ளோம்.
அப்பாவிற்கு கவுண்டமணி எப்படியோ, அதுபோல யோகி பாபு எனக்குப் பொருத்தமாக இருக்கிறார். 'சத்யா', 'ஜாக்சன் துரை'யில் இணைந்து நடிச்சிருக்கோம். அவரோடு இணைந்து ஒரு முழு காமெடி படம் பண்ணனும்னு ஆசைப்படுகிறேன். அது நடந்தால், 'நடிகன்' படத்துல அப்பா - கவுண்டமணி காமெடி பேசப்பட்டது போல பேசப்படும். அதற்கான ஒரு திட்டமும் இருக்கிறது.
'வேலை கிடைச்சிருச்சு' படத்தின் படப்பிடிப்பு தளத்துல கவுண்டமணி சாரோட நடந்த ஒரு அனுபவத்தைப் பகிர்கிறேன். குற்றாலத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அங்க சாப்பிட்ட உணவு ஒத்துழைக்காததால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. அதனால், தயிர் சாதம் மட்டும் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அங்கு வந்த கவுண்டமணி சார், ‘சாப்பிடுற பையன்... என்ன இப்படி சாப்பிடுற... நல்ல சாப்பிடு’ன்னு சொல்லி அவர் தட்டுல இருந்த சிக்கன், மட்டன் எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டார். அதைச் சாப்பிட்டு வயிற்றுப்போக்கு இன்னும் அதிகமாகி விட்டது. அதை என்னால மறக்கவே முடியாது."