நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து, திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே நடிகர் விவேக் அப்துல் கலாமின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அதன் பலனாக இதுவரை 33 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை அவர் நட்ட நிலையில் திடீரெனெ காலமாகிவிட்டார். இதையடுத்து விவேக் விட்டுச் சென்ற பணியைத் தொடரவேண்டும் எனப் பல்வேறு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வலியுறுத்தி வரும் நிலையில், நடிகை ஆத்மிகா மறைந்த நடிகர் விவேக் நினைவாக தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அதில்...
"நடிகர் திரு.விவேக் அவர்களின் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன். என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்தப் பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரின் தேவை இதையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்து அன்றே மக்களுக்கு நன்மை சேர்க்கும் பணியைத் துவங்கியுள்ளார். அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தான கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்" என்றார்.