விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மார்க் ஆண்டனி' படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி வெளியானது. வினோத் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தை எஸ்.ஜே. சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழு முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் திரையரங்கில் வந்து பார்த்து ரசித்தனர். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பை பலரும் பாராட்டினர். இதையடுத்து விஷாலும், எஸ்.ஜே. சூர்யாவும் படத்தின் வரவேற்புக்கு அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றுள்ளது. அதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர். அப்போது ஆதிக் ரவிச்சந்திரன் பேசுகையில், "முதலில் விஷால் அண்ணாவுக்கு நன்றி. இரண்டாவது என்னுடைய தயாரிப்பாளருக்கு பெரிய நன்றி. ஒரு தோல்வி படம் கொடுத்த இயக்குநரை நம்பி 55 கோடி ரூபாய் படம் பண்ண முன்வந்ததே பெரிய விஷயம். இது என்னைப் போன்ற சக இயக்குநர்களுக்கு பயங்கர ஊக்கம் கொடுக்கும். மூன்றாவதாக எஸ்.ஜே. சூர்யாவுக்கு நன்றி. படத்துக்கான வெற்றியை இத்தனை பேருக்கு அர்ப்பணித்தேன்.
ஆனால் என்னுடைய தனிப்பட்ட வெற்றிக்கு, அஜித் சாரை இந்த தருணத்தில் நினைவு கூர்கிறேன். கண்டிப்பாக எங்க அப்பா, அம்மாவுக்கு எப்போதுமே நன்றி கூறுவேன். நேர்கொண்ட பார்வையில் அஜித் சாரை நான் மீட் பண்ணும்போது எனக்கிருந்த ஒரு புரிதலும் அதுக்கப்புறம் ஏற்பட்ட ஒரு புரிதலும் முற்றிலுமாக வேறு மாதிரி இருந்தது. வேறு ஜானரை இயக்க பெரிய நம்பிக்கை கொடுத்தார். உன்னால் முடியும் போய் பெரிய படம் பண்ணு என நம்பிக்கை அளித்தார். அதனால் எனக்கான வெற்றியை அஜித் சாருக்கு நான் அர்ப்பணிக்கிறேன்" என்றார்.