
மடோன் அஸ்வின் இயக்கி இருக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மாவீரன் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், சிவகார்த்திகேயன் நடித்து கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக உருவாகி வந்த அயலான் திரைப்படம் நீண்ட நாட்களாக அப்டேட்கள் ஏதுமின்றி இருந்து வந்தது. இந்நிலையில் அப்படக்குழு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அயலான் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எங்களின் பிரம்மாண்ட படைப்பு 'அயலான்' பற்றிய புதிய அறிவிப்பை வெளியிடுவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த திரைப்படத்தை இடைவிடாத கடின உழைப்பை செலுத்தி படமாக்கியுள்ளோம். மேலும் பல தடைகளைத் தாண்டி நாளை ஏப்ரல் 24, 2023 காலை 11:04 மணிக்கு 'அயலான்' அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். "அயலான்' திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் CGI காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணிபுரிந்துள்ளோம்.
அயலான் ஒரு பான்-இந்தியன் திரைப்படத்திற்கு அதிக எண்ணிக்கையிலான CGI காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்கு போதிய நேரம் தேவைப்பட்டது. திரைப்படம் முழுவதும் வரும் வேற்றுகிரகவாசி கதாபாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், 4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக 'அயலான்' இருக்கும் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில் பல ஹாலிவுட் திரைப்படங்களின் CG-க்குப் பின்னால் உள்ள Phantom FX நிறுவனத்திற்கு அவர்களது அளப்பரிய CG பணிக்காக நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறோம்.
உங்களது பொறுமை மற்றும் இடைவிடாத ஆதரவிற்காக அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திரைப்படமாக அயலான் இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். நாளைய அயலான் அப்டேட் நிச்சயமாக உங்களை மகிழ்விக்கும். 'அயலான்' மூலம் கற்பனைக்கு அப்பாற்பட்ட அதிசயங்கள் நிறைந்த புதிய உலகத்திற்கு செல்ல தயாராகுங்கள்!” எனத் தெரிவித்துள்ளது.