
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அந்த வகையில் இப்போது ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். மேலும் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படங்களைத் தவிர்த்து 'தி ஐ' (The Eye) என்ற ஹாலிவுட் படத்தை கைவசம் வைத்துள்ளார். டாப்னே ஷ்மோன் என்ற பெண் இயக்குநர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மார்க் ரௌலி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் லிண்டா மார்லோவ், பெரு கவாலியேரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். டேவிட் ஸ்விட்சர் இசையமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் டயானா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு கதாபாத்திர போஸ்டரை படத்தின் இயக்குநரான டாட்னே ஷ்மோன் அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுருந்தார். சைக்காலஜிக்கல் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படம் கிரேக்க நாட்டில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் மற்றும் லண்டனில் நடைபெற்ற சுயாதீன படைப்புகளுக்கான திரைப்பட விழாவிலும் கலந்து கொண்டு பலரது கவனத்தை பெற்றது.
இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் காதலனை பிரிந்து ஸ்ருதிஹாசன் இருப்பதாகவும் பின்பு அவரை தேடும் முயற்சியில் இறங்கும் அவருக்கு மர்மமான சில விஷயங்கள் புலப்படுவது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ரிலீஸ் குறித்த அப்டேட் ட்ரெய்லரில் இடம் பெறவில்லை. அது குறித்து அப்டேட் அடுத்ததாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.