தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தனது மக்கள் நல இயக்கம் மூலமாக பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். அந்த வகையில், சென்னை மணலி அருகில் உள்ள மாத்தூரில் 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய விஷால், "எனக்கு குடும்பம் பெரிதாகிவிட்டது. 11 தங்கைகள் கிடைத்துள்ளனர். அவர்களை மாப்பிள்ளைகள் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். என்னிடம் மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஒரு தங்கை ஒரு பெரிய கல்லூரியில் படிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அந்த தங்கச்சிக்காக ஒரு கல்லூரியில் சீட் கேட்டு மன்றாடிப் பெற்றுத் தந்தேன்.
பின்பு ஆறு மாதம் கழித்து அந்த தங்கை என்னிடம் தேர்வில் முதல் மாணவியாக வந்துள்ளேன் என்று தெரிவித்தார். அப்போது அவரிடம், இது போதும் தங்கச்சி. பட்டம் பெற்று வெளியில் வந்து, இதே போல் கஷ்டப்படுகிற மற்ற பெண்களுக்கு உதவுகிற இடத்திற்கு நீங்கள் வரவேண்டும். அது தான் என் ஆசை எனக் கூறினேன்" எனப் பேசினார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய விஷாலிடம், மோடிக்கு நன்றி கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஷால், "தாஜ்மகாலைப் பார்க்கும் போது ஷாஜகானை நினைத்து நாம் வியப்பது போல், காசி நகரைப் பார்த்த போது பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் எனத் தோன்றியது. அதன் காரணமாகவே ஒரு சாதாரண குடிமகனாக என் மனதில் தோன்றியதை பிரதமரிடம் தெரிவித்தேன். இதற்கு பின்னால் அரசியல் எதுவும் கிடையாது" என்று கூறினார்.