Skip to main content

நிறம் மாறும் செங்கொடி தேசம்! பகுதி - 10

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
vietnam-travel-series-part-10

இன்று, நேற்றல்ல பல நூற்றாண்டுகாலமாக வியட்நாம் பெண்கள் சுதந்திரத்திற்காகவும், தங்களின் உரிமைக்கான போராட்ட போர்க்களத்திலும் முன் நின்றவர்கள். வியட்நாம் வரலாற்றில் அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக முதல் கலகம் செய்தது பெண்கள் தான்.

ட்ரங் ட்ரக் - ட்ரங் நஹி

வியட்நாம் பகுதிகள் சீன ஹான் வம்சத்தின் பேரரசரான, ‘குவாங் வூ’ ஆட்சியின் கீழ் இருந்தபோது, வியட்நாமின் ஜியோஜி மாகாணத்தின் ஆளுநராக, ‘சு டிங்’ என்பவர் அதிகாரத்தில் இருந்தார். அதேசமயம் ஜியோஜி மாகாணத்தின் மி லிங்க் மாவட்டத்தின் ‘லாக்’ இன மக்களின் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவருக்கு,  ட்ரங் ட்ரக், ட்ரங் நஹி என இரு மகள்கள் இருந்தனர். இதில், ட்ரங் ட்ரக் எனும் மகளுக்கு மற்றொரு மாவட்டத்தின் தலைவராக இருந்த ஷி சுவே என்பவருடன் திருமணம் நடக்கிறது. 

vietnam-travel-series-part-10

இந்த சமயத்தில், ஷி சுவே, ஆளுநர், ‘சு டிங்’-வால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார். தனது கணவரை படுகொலை செய்த ஆளுநர் சு டிங்குவை பழிவாங்க உறுதி எடுத்த ட்ரங் ட்ரக், தனது சகோதரி ட்ரங் நஹியுடன் இணைந்து ஜியோஜி மாகாணத்தில், ஆளுநர் சு டிங்குவுகு எதிராக இருந்த பிரபுக்களை ஒன்று திரட்டி, சீன படைகள் மீது போர் தொடுத்தார். ட்ரங் ட்ரக் தொடுத்த போரை தாக்குப்பிடிக்க முடியாமல், சீனர் சு டிங் ஜியோஜி மாகாணத்தைவிட்டு தப்பி ஓடினார். சீன ஆளுநருக்கு எதிராக வியட்நாம் பெண்களான ட்ரங் ட்ரக், ட்ரங் நஹி போர் தொடுத்து வெற்றி பெற, அந்த மாகாணத்தில் இருந்த 60 நகரங்கள் மற்றும் நூற்றுக் கணக்கான கிராமங்கள் மற்றும் மலைகளுக்கு மன்னராக பதவியேற்றார் ட்ரங் ட்ரக். இவர் தான் வியட்நாமின் முதல் பெண் மன்னர். ட்ரங் ட்ரக் மன்னரானதும், அவரது சகோதரி நஹிவுக்கு துணை மன்னர் பதவியை தந்தார். இவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகள் அப்பதவியில் இருந்தனர். 

தம் ஆளுகைக்குள் இருக்கும் வியட்நாமின் இரு பெண்கள் தன் ஆளுநரை மாகாணத்தில் இருந்து ஓடவிட்டதால் சினம் அடைந்த சீன பேரரசர் குவாங் வூ, ட்ரங் ட்ரக், ட்ரங் நஹி எதிராக போரிட்டு அவர்களை வீழ்த்த கி.பி. 46ம் ஆண்டு வாக்கில் தனது தளபதியான, ‘ம யுவான்’ தலைமையில் 20 ஆயிரம் படை வீரர்களை அனுப்பினார். இந்த பெரும் படையினருடன் போரிட்டு ட்ரங் ட்ரக் மற்றும் ட்ரங் நஹி வீரமரணம் அடைகின்றனர். அவர்களின் தலையும் வெட்டி எடுக்கப்பட்டது. 

vietnam-travel-series-part-10

சீனர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக, மக்களின் சுதந்திரத்துக்காக, தங்களின் உரிமைக்காக உயிரை தந்த சகோதரிகளின் வீரத்தை நினைவுகூறும் விதமாகவும், அவர்களை போற்றும் விதமாகவும், இன்றளவும் அவர்கள் இறந்ததாக கருதப்படும் பிப்ரவரி மாதம் விடுமுறை அளிக்கப்பட்டு சகோதரிகள் தினமும் வியட்நாமில் அனுசரிக்கப்படுகிறது. 

சீனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடி கி.பி. 46ல் உயிரை விட்ட ட்ரங் ட்ரக் - ட்ரங் நஹி சகோதிரிகளுடன் வியட்நாம் பெண்களின் வீரம் முடிந்துவிடவில்லை. இவர்கள் மறைவடைந்து 200 ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய லேடி ட்ரியூவின் பின் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு வியட்நாம் சுதந்திரத்திற்காக போராடினர். சீன வூ வம்சத்தின் படை, லேடி ட்ரியூ மீது 30க்கும் மேற்பட்ட முறை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் யார் வென்றது? லேடி ட்ரியூ என்ன செய்தார்?

பயணம் தொடரும்...

நிறம் மாறும் செங்கொடி தேசம் – வியட்நாம் பயணத் தொடர் பகுதி – 9