ஆஹா.... கூடுவிட்டு கூடுபாயுறதுன்னா மந்திரதந்திரம் சம்பந்தப்பட்ட ஏவாரங் கெடயாது. பழய சினிமாவுக்குள்ள... அதுல வர்ற கேரக்டர்களுக்கு உள்ள புகுந்து அத அலசி ஆராயிறதுதான். நடிகர்திலகம் ஒரு நடிப்பு பல்கலைக்கழகம். "சில பேரு சொல்லுவாங்க... ‘எம்.ஜி.ஆருக்கு நடிக்கத் தெரியாது'ன்னு. அப்புடி சொல்றது முட்டாத்தனம். மக்கள் திலகம் எவ்வளவோ படங்கள்ல குணச்சித்திரமா பிரமாதமா நடிச்சிருப்பாரு. தெனமும் ராத்திரியில பழய படங்கள போட்டுப் பாப்பேன். பள்ளிக்கொடத்து புள்ளைகளுக்கு லீவு விட்டா குடும்பத்தோட ஊட்டி, கொடைக்கானலு போவாக. நமக்கு ரவயில ஒக்காந்து நடுச்சாமம் வரைக்கும் பழய படங்கள பாத்து அதுல வர்ற ஒவ்வொரு கேரக்டராவும் என்னய கற்பன பண்ணி கதைக்குள்ள டூர் போவேன்.
அரசகட்டளை, ஆண்டவன் கட்டளை, பாசம், பாசமலர், அன்பே வா, புதிய பறவை, பணத்தோட்டம், பாகப்பிரிவினை, மன்னாதி மன்னன், மனோகரா, மகாதேவி, பராசக்தி, மலைக்கள்ளன்..... இப்புடி எம்புட்டோ காவியங்கள குடும்பத்தோட ஒக்காந்து பாப்போம். எப்பேர்பட்ட நடிகர்கள், என்ன மாதிரி நடிப்பு? இதெல்லாம் நாம செஞ்ச பாக்கியம்னுதான் சொல்லணும். ஜெய்சங்கர், முத்துராமன், எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர்.ராதா, தேங்கா சீனிவாசன், வீ.கே.ராமசாமி, வி.எஸ்.ராகவன், நாகேஷ், சிவகுமார், சோ, பாலையா, தங்கவேலு, சந்திரபாபு, என்.எஸ்.கே, மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.வி.சுப்பையா, ரெங்காராவ், சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, தேவிகா, பத்மினி... இப்புடி இவங்ககிட்ட இருந்து கத்துக்கிற எவ்வளவோ இருக்கு. இவுங்க நடிச்ச படங்கள்ல இவுங்க வச்ச நடிப்பு பந்தியில ரசிகனா ஒக்காந்து சாப்பிட்டவன் நான். "மாயாபஜார்'ல ரெங்காராவ் வருவாரே.... ஆஹஹ்ஹஆஹா... நான் ‘"இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படத்துல ‘"மன்... தருமன்.... எமதருமன்...'னு பண்ற ஸீன்கள்ல ரெங்காராவத்தான் நெனச்சுக்கிட்டேன். இப்படி பழய படங்கள பாக்குறதுனாலதான் வரலாற்று படமா ‘"இம்சை அரச'னையும், புராண படமா "இந்திரலோகத்தில் அழகப்ப'னயும் பண்ண முடிஞ்சது.
படம் பாக்கும்போது எனக்கு ரொம்ப புடிச்சவுங்க ஸீன்ல வரும்போது எந்துருச்சுப்போயி டிவியில தெரியிற அந்த உருவத்த கன்னத்தக் கிள்ளி "எப்பேர்பட்ட ஆளுய்யா நீ'ன்னு கொஞ்சுவேன். எம்.ஜி.ஆர டி.வி.யில பாத்து அழுதுருவேன். இந்த மாதிரி எம்புட்டோ ரசிகர்கள் இருக்காங்க. ஆனா ஒரு வி.ஐ.பி. ரசிகரும் இந்த மாதிரிச் செய்வாராம். அவரு யாருங்கிறீகளா? இப்பத்தேன்... கொஞ்சநாளக்கி முன்னாடி சீர்காழி கோவிந்தராஜனுக்காக ஒரு விழா நடந்துச்சு. அதுல பேசின அந்த வி.ஐ.பி. தன்னோட நண்பரான சிவாஜியப் பத்தி நெனவுபடுத்தி பேசினாரு. அப்பச் சொன்னாரு... ‘"தொலைக்காட்சிகளில் சிவாஜி நடித்த படங்களைப் பார்க்கும் போது எனது கண்கள் கலங்கிப்போகும். எழுந்துபோய் திரையில் தெரியும் சிவாஜியின் கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுப்பேன்'னு பேசீருந்தாரு. பேசுனவரு நம்ம கலைஞர் அய்யாதான். நல்ல படங்களயும், நல்ல கலைஞர்களயும் கொண்டாடணும்.
ஒரு சினிமான்னா ஆத்தா, புள்ள, தாத்தா, பேரன், புருஷன், பொண்டாட்டி, அண்ணன், தங்கச்சி... இப்புடி எல்லாருமே ஒக்காந்து கூச்சமில்லாம பாக்குற மாதிரி இருக்கணும். ஆபாச படமா இருந்துச்சுன்னு வைங்க... என்ன செய்வேன் தெரியுமா? டி.வி. மேல காறித்துப்பிட்டு ஆஃப் பண்ணிப்புட்டு போய் படுத்துருவேன். காலேல எந்துரிச்சதுமே டி.வி.ய தொடச்சு விட்றுவேன். விஜய் சொன்னாரு.... "வடிவேலண்ணே.... ஒங்களுக்குனு ஒரு ரூட்டப்புடுச்சு போய்க்கிட்டிருக்கீங்க'னு என்னய பெருமப் படுத்துற மாதிரி சொன்னாரு. இப்படி ராவும், பகலும் நான் எடுத்துக்கிற பயிற்சிகள்தான் எனக்குன்னு ஒரு பாணிய நான் உருவாக்கிக்கிற காரணம். என்னோட அறிமுகப்படமான "ராசாவின் மனசிலே' படத்துல எனக்கு சாப்பாட்டுராமன் கேரக்டர் மாதிரி. எப்பப் பாத்தாலும் பசிச்ச வயிறோட இருக்க மாதிரி வர்ற அந்த கேரக்டருக்கு வயித்த தடவிக்கிட்டே இருக்குற மாதிரி ஒரு மேனரிஸத்த சேத்தேன். அப்ப இருந்து இன்னக்கி வரைக்கும் அந்த ஈடுபாட்டோடதான் நடிச்சுக்கிட்டு வர்றேன்.
விஜய்கூட தொடர்ந்து நடிச்சுக்கிட்டு வந்தாலும் "ஃப்ரெண்ட்ஸ்' பட காமெடி செமத்தியா இருக்கும். அதுல காண்ட்ராக்ட்டரா வருவேன். என்கிட்ட விஜய், சூர்யா ரெண்டுபேரும் அப்ரண்டீஸா வேல பாப்பாங்க. பொதுவா காண்ட்ராக்ட்டு எடுத்து வேல செய்ற ஆளுகள பாத்தீகண்டா.... எப்பவும் டென்ஷனோடதான் இருப்பாக. அந்த எபெக்ட்ட கொண்டு வர்றதுக்காக நான் ஊர்ல இருக்கிறப்ப பாத்த ஒருத்தரோட ஆக்டிவிட்டீஸ அள்ளிப் போட்டுக்கிட்டேன். "என்னடா மூலச்சூட்டுக்காரன் மாதிரி எரிஞ்சு விழுற?'னு டென்ஷன் பார்ட்டிகள பாத்து கேப்பாங்க. அந்த மூலச்சூட்டுக்காரன் டென்ஷன அந்த கேரக்டருக்கு கொண்டு வந்தேன்.
அவரு துபாய் ரிட்டன். அவருக்கு மூலவியாதி. அதனால எப்ப நார்மலா இருப்பாரு... எப்ப கொலவெறி கோவத்தோட இருப்பாருன்னே தெரியாது. மூலவியாதி ரொம்ப மோசமானது. "நொங்கு தின்னவன் தப்புச்சிட்டான், நோண்டித்தின்னவன் சிக்கிக்கிட்டான்னு ஒரு சொலவட ஊர்ல சொல்லுவாங்க. வாய கட்ட முடியாம கண்டதுகடியதையும் மச்சக்கு மச்சக்குனு தின்னுபுடுறது. வாய் செஞ்ச தப்புக்கு பாவம்... காலேல வெளிக்கி போகும்போது குண்டிதான் வேதனய அனுபவிக்கும். ஆயிருக்கப் போகயில மூலம் வந்தவன் படுறபாடு இருக்கே... யாருக்குமே அந்த அவஸ்த வரக்கூடாது. வழக்கமா எல்லாரையும் மாதிரித்தான் ஆயி இருக்க குத்தவச்சு ஒக்காருவாக. அப்புடியே தம் கட்னா வலியில கண்ணுமுழி பிதுங்கி.... கதவ புடுச்சிக்கிட்டு எந்திருச்சு நின்னமானிக்கே போவாக. காலேல ஆயி போறதுல ஆரம்புச்ச அந்த வலி... சாயங்காலம் வரைக்கும் சடுகுடு ஆடீட்டுத்தான் விடும். ஒடம்புக்கு நல்லத மட்டும் சாப்புடணும்... கக்கூஸ் போகும்போது ‘"மகராசா... நல்லா இருடா'ன்னு குண்டி நம்மள கும்புடணும். இத மறக்காம மனசுல வச்சுக்கிட்டு சாப்பாடு தட்டு முன்னாடி ஒக்காருங்க.
ஓக்கே.... துபாய் ரிட்டனுக்கு வருவம். அப்புடியே அந்த ஜிகுஜிகு சட்ட வேஷ்டிய போட்டுக்கிட்டு சென்ட்ட அள்ளி அப்பிக்கிட்டு வீட்டு வாசப்படிய தாண்டுனாருன்னா வீதி முக்குக்கு வாசம் வந்துரும்.
"அலோ துபாயா?'னு ஒருத்தன் கோடுவேடு குடுத்திட்டான்னா எல்லாப் பயலுக்கும் கொண்டாட்டந்தான். அவர கூப்புட்டு வச்சு கும்மி அடுச்சிறுவாய்ங்க. கடசியில கலவரமாகி ரணகளமாகப் போகுதுன்னு அவருக்கு தெரியும். இருந்தாலும் அவரால தன்னோட துபாய் அனுபவங்கள ஒருநாளக்கி நாலு தடவயாவது சொல்லாம இருக்க முடியாது."துபாயி இருக்கே துபாயி'னு அதோட அருமபெருமய அள்ளி விடுவாரு. "யீங்... யீங்... அடடா... யீங்... அய்யய்யோ... அப்புறம்?.... அடடே... அதுதான பாத்தம்...' -இப்படி பலப்பல பாவனைகள் குடுத்து சுவராசியமா கேட்டுக்கிட்டிருப்பாய்ங்க. நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கும். அப்பப்பாத்து கேப்பாய்ங்க பாரு ஒரு கேள்விய... மூலத்துல மொளகாப் பொடிய தடவுன மாதிரி சூறாவளியே சுத்தி அடிக்கும். என்ன கேப்பான் தெரியும்ல?!
அடுத்த பகுதி - 6