தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தடயம் என்ற தொடரின் வழியே பல்வேறு வழக்குகளை விளக்கி வருகிறார். அந்த வகையில் மாடல் ஜெசிகா லால் மரணம் குறித்து விளக்குகிறார்.
டெல்லி தெற்கு பகுதியில் இருக்கும் மெக்ராலி என்ற பகுதியில் டெமரிட் கோர்ட் என்ற இடத்தில் நடந்த பார்ட்டியின் போது மாடல் ஜெசிகா லால் என்பவர் மது தராததால் முன்னாள் ஒன்றிய அரசின் அமைச்சராகவும் இருந்தவரின் மகனான மனு ஷர்மாவால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து சம்பவத்தை நேரில் பார்த்த 30 பேர் காவல்துறையினரிடம் நடந்ததைக் கூறினார். ஆனால் நீதிமன்றத்தில் அதைச் சாட்சியாக சொல்லாததால் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை நீதிமன்றம் விடுவித்தவரை முந்தைய தொடரில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாகப் பின்வருமாறு...
மாடல் ஜெசிகா லால் குண்டடிபட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்டிக்கு வந்த அனைவரும் பார்த்திருந்திருக்கின்றனர். ஆனால் அந்த தீர்ப்புக்குப் பிறகு மறுநாள் காலையில் ஆங்கிலப் பத்திரிக்கைகளில் ஜெசிகா லாலை யாருமே கொல்லவில்லை என்று தலைப்பு செய்தியாக வெளியிடுகின்றனர். இந்த தலைப்பு செய்தியைப் பார்த்த பல மனித உரிமை அமைப்புகள் கொதித்தெழுந்தனர். மேலும் இந்த வழக்கைப்பற்றி கீதா என்ற பெண் பத்திரிக்கையாளர் விரிவாக விசாரிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். பத்திரிக்கையாளர் கீதா தான் வேலை செய்த நிறுவனத்துடன், இந்த வழக்கில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் ஏன் பிறழ் சாட்சியாக மாறினார்கள்? என்ற ரகசிய ஆப்ரேசன் செய்யத் தொடங்கினார்.
அந்த ஆப்ரேசனில் ஜெசிகா லாலுடன் சம்பவ இடத்தில் பணியாற்றிய முன்ஷி உள்ளிட்ட 30 பேரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நீதிமன்றத்தில் சாட்சி சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் சொல்லாவிட்டால் பணம் தருவதாகவும் கொலையாளி மனு ஷர்மா தரப்பிலிருந்து அவர்களுக்கு மிரட்டலுடன் சில சலுகைகளை சொல்லியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இந்த விஷயம் பொதுவெளிக்கு தெரிந்தவுடன் இந்த வழக்கில் பெரிய திருப்பம் ஏற்பட்டு வழக்கு மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்தது. இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கொலையாளி மனு ஷர்மாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவருடன் இருந்த நண்பர்கள் சூழ்ச்சி செய்ததாக அதற்கேற்ப தண்டனைகள் கொடுக்கப்பட்டது. டெமரிட் கோர்ட் இடத்தின் ஓனர் பினா ரமணிக்கு பார்ட்டியை லைசன்ஸ் இல்லாமல் நடத்தியது மற்றும் தடயங்களை மறைத்ததற்குத் தண்டனை வழங்கப்பட்டது. அதோடு இந்த வழக்கில் முன்பு அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து பல விவாதங்கள் எழுந்தது.
அதன் பிறகு மனு ஷர்மா 15 வருடம் சிறையில் இருந்தார். பின்பு நன்னடத்தை காரணமாக விடுவிக்கப்பட்டார். அந்த 15 ஆண்டு அவர் சிறை தண்டனை அனுபவித்தது குறித்து பல வதந்திகள் உலா வந்தது. மனுஷர்மா திகார் சிறையில் இருந்ததைக் காட்டிலும் அவருடைய அப்பா நடத்திய ஒரு ஹோட்டலில் இருந்ததாகவும் சிறை அதிகாரிகளை விலை கொடுத்து வாங்கியதாகவும் வதந்திகள் பரவியது. அதற்கேற்ப மனு ஷர்மா சிறையில் இருந்தபோது பாதுகாப்பில் இருந்த சிறை அதிகாரி ஒருவர் ஓய்வுக்குப் பிறகு இப்போது மனு ஷர்மாவிடம் நல்ல வருமானத்தில் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் நம்ம முடியாத சுவாரஷ்யமான வதந்தி என்னவென்றால் மாடல் ஜெசிகா லால் கொல்லப்பட்ட இடத்தில் இன்றும் அவர் ஆவியாக இருப்பதாக பலர் நம்புகின்றனர். ஜெசிகா லால் கதையை வைத்து நாவல்கள், திரைப்படம் வந்துள்ளது என்றார்.