Skip to main content

மலத்தை அள்ளி முகத்தில் பூசும் நேபாள மன்னரின் வாரிசு - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 83

Published on 04/10/2024 | Edited on 04/10/2024
thilagavathi-ips-rtd-thadayam-83

உலக நாடுகளை உலுக்கிய நேபாள அரச குடும்பத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

நேபாள அரச குடும்பத்தில் நடந்த படுகொலை சம்பவம் தொடர்பான வழக்கு இது. இந்த சம்பவத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு நேபாளத்தின் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். 1768-ல் நேபாள நாட்டின் தலைநகராக காத்மாண்டு நகரை பிரித்விராஜ் ஷா என்ற அரசர் நியமித்தார். அதன் பிறகு அந்த அரசர் காட்டுக்குள் பயணம் செய்யும்போது ஒரு சன்னியாசியைப் பார்த்துள்ளார். அப்போது பிரித்விராஜ் ஷா  தான் கொண்டு வந்த தயிரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அந்த சன்னியாசிக்கு கொடுத்துள்ளார். அதை வாங்கிக் குடித்த சன்னியாசி மீண்டும் அதைப் பாத்திரத்தில் கக்கி பிரித்விராஜ் ஷாவை குடிக்க சொல்லியுள்ளார். இது அரசருக்குக் கோபம் ஏற்பட அந்தப் பாத்திரத்தைத் தூக்கிப் போட்டுள்ளார். அந்த பாத்திரத்தில் இருந்த தயிர் வடிந்து பிரித்விராஜ் ஷாவின் கால் விரல்களில் பட்டுள்ளது. இதைப் பார்த்த அந்த சன்னியாசி உன்னுடைய பத்து கால் விரல்களில் தயிர் பட்டதால் இன்னும் பத்து தலைமுறைக்கு பிரித்விராஜ் ஷா கட்டமைத்த ராஜ்ஜியம் இருக்குமென்றும் பதினொறாவது தலைமுறை வரும்போது சிதறிப் போகும் என்று சாபம் விட்டுள்ளார். 

பிரித்விராஜ் ஷா இறந்த பிறகு ராஜேந்திர ஷா என்ற அரசர் வருகிறார். ராஜேந்திர ஷாவுக்கு யாரையாவது பிடிக்கவில்லையென்றால் மலத்தை அள்ளி அவர்களின் முகத்தில் பூசி விடுவார். மேலும் இவர் சம அந்தஸ்த்துடன் பல பட்டத்து ராணிகளை வைத்துள்ளார். அதில் லஷ்மி தேவி என்ற இளையராணி, ஆற்றல் மிகுந்தவர்களை தன் பக்கம் வைத்துக்கொண்டு அரசராக தன் மகனை அமர வைக்க பல சூழ்ச்சிகளைச் செய்து வருகிறார். இதையெல்லாம் பார்த்து அப்போது அமைச்சராக இருந்த ராணா என்பவர் ராஜ்ஜியத்தை தானே ஆளத்தொடக்குகிறார். அதன் பிறகு ராணாவின் வம்சம் 100 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. இதைப்பார்த்து ஷா வம்சத்தை சேர்ந்த ஒரு அரசரும் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கிறார். இந்த ஷா மற்றும் ராணா வம்சங்களுக்கு இடையில் ஒரு பகை தொடர்ந்துகொண்டே இருந்துள்ளது. இதுதான் நேபாள வரலாற்றின் பின்னணி தகவல்.          

இப்போது நேபாளத்தில் மகேந்திர ஷா என்பவர் அரசராக இருக்கும்போது அவருடைய மகன் பிரேந்திர ஷாவை துருக்கி, ஈட்டன், ஜப்பான் போன்ற வெளி நாடுகளுக்கு அனுப்பி படிக்க வைக்கிறார். பிரேந்திர ஷா அங்கு படித்து ஜனநாயத்தை கற்றுக்கொண்டு மன்னராக நேபாளத்தில் அமர்கிறார். அதன் பின்பு ஐஸ்வர்யா ராஜலஷ்மி என்ற பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இவர்களுக்கு மூன்று குழந்தை பிறந்துள்ளது. அதில் முதல் குழந்தை தீபேந்திர ஷா தான் இந்த கதையின் கதாநாயகன். இவர் மன்னராக முடிசூட்டப்படும் போது 3 வயது குழந்தையாக இருந்தார். 8 வயதிலேயே தீபேந்திர ஷாவுக்கு துப்பாக்கி மீது ஆர்வம் அதிகமாக இருந்ததால், அதையெல்லாம் கற்றுக்கொடுக்க அவரின் அப்பா பிரேந்திர ஷா அனுமதி கொடுக்கிறார். 

அதே போல் படிப்பிலும் சிறந்து விளங்கக்கூடியவராக தீபேந்திர ஷா இருந்துள்ளார். இது அவரின் ஒருபக்கம்தான். ஆனால் இவரின் மறுபக்கத்தில் பயங்கர கோபம் கொண்டவராகவும் வீட்டில் இருக்கக்கூடிய பூனை மற்றும் புறாக்களை தீ வைத்து அதை கொன்று சந்தோஷப்படும் மனநிலையிலும் இருந்துள்ளார். தீபேந்திர ஷாவுக்கு 19 வயது ஆகும்போது தனது வம்சத்தில் இருக்கும் ஒரு பெண்ணை காதலிக்கிறார். இதை அறிந்து சின்ன வயதில் தீபேந்திர ஷாவுக்கு  திருமணம் வேண்டாம் என்று கூறி அவரை லண்டனுக்கு படிக்க அனுப்பியுள்ளனர். படிக்க போன இடத்தில் தேவயானி ராணா என்ற பெண்ணை சந்தித்து காதலில் விழுகிறார். இந்த தேவயாணி ராணா, ராணா வம்சத்தை சேர்ந்தவள். தீபேந்திர ஷா மற்றும் தேவயாணி ராணா இருவருக்கும் அங்கு லோக்கல் கார்டியனாக ஒரே நபர் இருந்ததால்தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

தேவயானி ராணா உடனான காதலை தீபேந்திர ஷா வீட்டில் சொல்லும்போது, ராணா வம்சத்தார்கள்தான் நம்முடைய ராஜ்ஜியத்தை பறித்துக் கொண்டார்கள் என காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிகின்றனர். மேலும் தேவயானி ராணா, தீபேந்திர ஷாவைவிட மூன்று வயது மூத்த பெண் என்ற காரணத்தை கூறி, இதற்கு முன்பு தனது வம்சத்தில் தீபேந்திர ஷா காதலித்த பெண்ணையே திருமணம் செய்துகொள் என்கின்றனர். இதற்கு தீபேந்திர ஷா மறுப்பு தெரிவித்துள்ளார். பின்பு தீபேந்திர ஷா கும்பத்தினர் கூடி பேசி தங்களது வம்சத்தில் முன்பு காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு தேவயானி ராணாவை காதலித்து கூடவே வைத்துக்கொள் என்று தீபேந்திர ஷாவிடம் கூறுகின்றனர். தேவயானி ராணா தங்களின் சாதிக்கு இணையானவள் இல்லை என்று இந்த முடிவை தீபேந்திர ஷாவின் குடும்பத்தினர் அவரிடம் சொல்லியிருக்கின்றனர். மேலும் தாங்கள் சொல்வதை கேட்கவில்லையென்றால் தீபேந்திர ஷாவை பட்டது இளவரசராக ஆக்காமல் அவரின் தம்பி நிராஜை பட்டது இளவரசராக முடிசூட்டுவோம் என்று தீபேந்திர ஷாவிடம் சொல்லியுள்ளனர். ஆனால் தீபேந்திர ஷாவுக்கு தேவயானி ராணாவை திருமணம் செய்துகொண்டு பட்டத்து இளவரசராக இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்துள்ளார்.

அதன் பின்பு தீபேந்திர ஷாவுக்கு 21வது பிறந்தநாள் வருகிறது. அதைக்கொண்டாட உறவினர்கள் அனைவரும் வந்துள்ளனர். அப்போது தனக்கு ஈடாக இருக்க கூடிய தன் உறவுக்காரர்களிடம், எனக்கு கல்யாணம் நடந்தால் அது தேவயானி ராணாவுடந்தான் அதேபோல் ராஜாவாக ஆனாலும் அது நானாகத்தான் இருக்க வேண்டும் அதற்கு இடையூராக யார் வந்தாலும் அவர்களை கொன்றுவிடுவேன் என்று அழுத்தம் திருத்தமாக தீபேந்திர ஷா கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த தீபேந்திர ஷாவின் கர்ப்பமான தங்கச்சி ஸ்ருதி இதற்கு எதிர்மறையாக பேச, தீபேந்திர ஷா தனது தங்கச்சியை அடித்துள்ளார். இந்த கசப்பான சம்பவம் அவரின் பிறந்த நாளில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே தேவயானி ராணாவும் தீபேந்திர ஷாவும் தொலைபேசி வாயிலாக தொடர்பில் இருந்து வருகின்றனர். 

அரச குடும்பத்தில் இருப்பவர்கள் மாதத்தில் இரண்டு வெள்ளிக்கிழமையை தேர்ந்தெடுத்து உறவினர்களுக்கு விருந்து வைக்கும் பழக்கம் அங்கு இருந்துள்ளது. இதே போல் 2001ஆம் ஆண்டு ஒரு விருந்துக்கு தனது உறவினர்களை தீபேந்திர ஷா அழைகிறார். விருந்துக்கு வரும் தனது உறவினர்களுக்கு விலையுயர்ந்த மதுவை கொடுத்துவிட்டு அவரும் குடிக்கிறார். மேலும் புகைப்பிடிக்கும் பழக்கதுடன் அவர் இருப்பதால், சிகரெட்டுடன் சில போதைப் பொருளை சேர்த்து அடித்து போதையில் மூழ்க ஆரம்பித்தார். இதையடுத்து  தீபேந்திர ஷாவின் சித்தப்பா பசங்க அவரை அழைத்துக்கொண்டு ஒரு ரூமில் சென்று விட்டுவிடுகின்றனர். அப்போது தேவயானி ராணா தீபேந்திர ஷாவுக்கு கால் செய்து தன்னுடன் விருந்துக்கு வா என்று அழைத்துள்ளார்.

அதற்கு தீபேந்திர ஷா, தானும் இங்கு விருந்து ஏற்பாடு செய்துள்ளேன் அதனால் வர முடியாது என்று மறுத்துள்ளார். அதற்கு தேவயானி உங்க குடும்பம்தான் முக்கியமா? என்று கோபத்துடன் அழைப்பை துண்டித்து அங்குள்ள காவலர்களுக்கு கால் செய்து தீபேந்திர ஷா என்னுடம் உடம்பு சரி இல்லாத தொனியில் பேசினார். அதனால் நர்ஸ் யாரவது இருந்தால்  தீபேந்திர ஷாவிடம் அனுப்புங்கள் என்றார். அதேபோல் அந்த காவலர்கள் ஒரு நர்ஸையும், உதவியாளரையும் அவர் ரூமிற்கு அனுப்பியுள்ளனர். அங்கு சென்ற நர்ஸ் மற்றும் உதவியாளர்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று விசாரிக்க, தான் நன்றாக இருப்பதாக கூறி அவர்களை  தீபேந்திர ஷா அனுப்பி விடுகிறார். இதற்கிடையில் விருந்துக்கு மன்னர் வரும் நேரத்தில் தீபேந்திர ஷா அவரை வரவேற்க வேண்டும் என்று அங்குள்ள பெரியவர்கள் சொல்கின்றனர்.  

தீபேந்திர ஷா மன்னர் வரும் நேரத்தில் இல்லாததால் தீபேந்திர ஷாவின் சித்தப்பா பசங்களில் ஒருவர் மன்னரையும் ராணியையும் வரவேற்று உட்காரவைக்கிறார். அந்த நேரத்தில் ரூமிலிருந்து வெளியே வந்த தீபேந்திர ஷா அலும்பல் செய்துகொண்டு இருந்திருக்கிறார். இதைப் பார்த்த ராணி இதற்கெல்லாம் காரணம் அந்த தேவயானி ராணாதான் என்று தீபேந்திர ஷாவை திட்டியுள்ளார். அதற்கு பின்பு தனது ரூமிற்கு சென்ற தீபேந்திர ஷா, மிலிட்டரி உடைகளை போட்டுக்கொண்டு அங்கிருந்து ஒரு மிஷின் கன்னை எடுத்துக்கொண்டு ராஜாவிடம் வருகிறார். 

இவ்வழக்கு குறித்த மேலும் விவரங்களை அடுத்த தொடரில் காணலாம்...