22 கொலைகளை ஒரே நாளில் செய்து, பின் நாளில் பாராளுமன்ற உறுப்பினரான பூலான் தேவியின் வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஜலாம் மாவட்டம், கோர்ஹகா புர்வா என்ற சிறிய கிராமத்தில் பூலான் தேவி இருக்கிறார். படகு ஓட்டுவது தான் இவரது குலத்தொழில். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் தான் பூலான் தேவி பிறந்திருக்கிறார். வறுமையின் பிடியில் இருந்த இவரோடு சேர்த்து ஐந்து பேர் சகோதர சகோதரிகள். பூலான் தேவியுடைய அக்கா ருக்மணி என்பவர் தான் இவரது வீட்டில் சமையல் செய்வார். அந்த சாப்பாட்டை முதலில் அப்பாவுக்கு கொடுத்துவிட்டு தான் ஒவ்வொருவரும் சாப்பிடுவார்கள். இதை அவரது குடும்ப வழக்கமாக பின்பற்றி வந்திருக்கிறார்கள். இதனால், பாதி குழந்தைகள் பட்னியாக இருக்கும்படியாக நேரிடும். வறுமையில் இருந்து தப்பிக்க, அந்த ஊரில் ஓரளவுக்கு வசதியாக இருக்கும் வீட்டில் வேலை செய்துவிட்டு அங்கிருந்து சாப்பாடு வாங்கி வருவார்கள். இல்லையென்றால், ஆறு, ஏரி இடங்களில்லேம் வற்றும்போது அந்த இடங்களில் விதைகளை போட்டு தர்பூசணி, வெள்ளரி இது மாதிரியான விளையவைத்து அதில் வரக்கூடிய பணத்தை கொண்டு சமாளிப்பார்கள்.
பூலான் தேவியின் தாத்தாவுக்கு இரண்டு மனைவிகள். அதில் மூத்த மனைவியினுடைய மகனும், பேரனும் பூலான் தேவி குடும்பத்தினரை அடிக்கடி தொல்லை கொடுத்து வருவார்கள். பூலான் தேவி குடும்பத்திற்கு சொந்தமான மரம், ஒரு இடம் மீது அவர்கள் குறியாக இருப்பதால் சண்டை போடுவார்கள். மேலும் இவர் இருந்த கிராமத்தில், பெண்களுக்கு சின்ன வயதிலேயே குழந்தை திருமணம் செய்துவிடுவார்கள். சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் குடும்பத்தில் அந்த குழந்தைகளை எப்படி வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைக்க முடியும் என அடிக்கடி பூலான் தேவியினுடைய அம்மா சொல்லிக்கொண்டே இருப்பாராம். மேலும், பூலான் தேவியினுடைய அப்பாவிடம் பணம் இல்லாமல் எப்படி இருப்பது, குழந்தைகளை கிணற்றில் போடப்போகிறேன் என அடிக்கடி சண்டை போடுவாராம்.
ஒரு நாள், வீட்டில் 9 வயதான பூலான் தேவியும், ருக்மணி இருப்பதை தெரிந்துகொண்டு பெரியப்பா வீட்டார், பூலான் தேவியினுடைய மரத்தை வெட்டி விற்பதற்காக மாட்டு வண்டியின் ஏற்ற தயாராகுகிறார்கள். இதை தெரிந்துகொண்ட பூலான், மரக்கட்டைகளை ஏற்றக்குடிய மாட்டு வண்டியை மறித்து தகராறு செய்கிறார். அப்போது பெரியப்பாவின் மகனான மாயாதீன், மாட்டை அடிப்பதற்காக வைத்திருந்த சாட்டையை வைத்து பூலான் தேவியை கடுமையாக அடிக்கிறான். மாயாதீன் பஞ்சாயத்து தலைவருக்கு நெருக்கமான நபராக இருந்ததால், அந்த ஊரில் உள்ளவர்கள் யாரும் அதை தட்டிக் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் மாயாதீன் ஒரு செங்கல்லை எடுத்து பூலான் தேவியை அடிக்கிறான். இதில் அவர் படுகாயமடைகிறார். அதன் பிறகு, மாயாதீன் அந்த மரக்கட்டைகளை ஏற்றிச் செல்கிறார். பூலான் தேவியினுடைய சிறு வயதிலேயே போராட்டக் குணம் இருந்திருக்கிறது.
பூலான் தேவிக்கு கோபம் தான் பலவீனம். இதற்கிடையில், மாயாதீன் இறந்துவிட பூலான் தேவியினுடைய அப்பாவிடம் வந்து சமாதானம் பேசிகிறான். மேலும், தன் மனைவியின் உறவினர் புட்டிலால் என்பவருக்கு இரண்டாம் மனைவியாக பூலான் தேவியை திருமணம் செய்து வைத்தால் வரதட்சணை அதிகமாக கேட்கமாட்டார்கள் என கூறுகிறான். இதை கேட்டு, பூலான் தேவியினுடைய அப்பாவும் சம்மதிக்க, பூலான் தேவியின் 11 வயதில் அந்த திருமணம் நடக்கிறது. பூலான் தேவியை தன் வீட்டிற்கு அழைத்த செல்ல புட்டிலான் நினைக்கிறான். ஆனால், பருவம் அடையாததால் உடனடியாக பூலான் தேவியை புட்டிலால் வீட்டுக்கு அனுப்ப மறுக்கிறார்கள். ஆனால், பிடிவாதமாக பூலான் தேவியை புட்டிலால் அழைத்து செல்கிறான். காலை முழுவதும் தொடர் வேலைகள், இரவில் புட்டிலாலினுடைய பாலியல் சீண்டல்கள் என பூலான் தேவியினுடைய திருமண வாழ்க்கை செல்கிறது.
இந்த பாலியல் சீண்டல்களால் பூலான் தேவியினுடைய உடம்பெல்லாம் காயமாகிறது. இதனால் புட்டிலால் உடைய அப்பா திட்ட, வெளியே கத்துவதால் தான் மற்றவர்கள் தன்னை திட்டுகிறார்கள் என்று கத்தியை எடுத்து மிரட்டி பாலியல் சீண்டல்கள் செய்கிறான். இவனுடைய வன்முறை ஒரு கட்டத்தில் சுத்தியல் போன்ற ஒரு ஆயுதத்தை கொண்டு பூலான் தேவியை அடித்ததில் அவர் படுகாயமடைகிறார். இவனுடைய கொடுமை தாங்காத பூலான் தேவி, அதிலிருந்து தப்பிக்க தன்னுடைய அம்மாவை பார்த்து வருவதாகக் கூறி அங்கிருந்து தப்பித்து இங்கே வந்துவிடுகிறார். பூலான் தேவியின் பெற்றோர், அதிகமான வரதட்சணை பொருட்களை கொடுத்து புட்டிலாலிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு பூலான் தேவியை அங்கு விட்டுவிடுகிறார்கள். இப்படியான கொடுமைகள் தொடர்கிறது.
ஒரு நாள், பூலான் தேவியினுடைய தாய் மாமன், பூலானை பார்ப்பதற்காக அங்கு வருகிறார். பூலான் தேவியும் நடந்த கொடுமையெல்லாம் சொல்லியதில், தாய்மாமனும் தன்னுடைய வீட்டுக்கு பூலான் தேவியை அழைத்து சென்றுவிடுகிறார். அங்கு பூலான் தேவி, கைலாஷ் என்ற பையனோடு பழகுகிறார். ஏற்கெனவே திருமணம் ஆனாலும், இருவருக்கும் மீண்டும் திருமணம் ஆகிறது. சில நாட்கள் மகிழ்ச்சியாக செல்கிறது. இதற்கிடையில், பூலான் தேவி இங்கு இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்ட மாயாதீன், தங்க நகைகள், வாட்ச் ஆகியவற்றை பூலான் திருடிவிட்டு தப்பித்துவிட்டார் என போலீசிடம் கம்ப்ளைண்ட் கொடுக்கிறான். போலீசும், பூலான் தேவியை பிடித்து சிறையில் அடைக்கிறார்கள். பூலான் தேவியினுடைய அப்பாவையும் சிறையில் அடைக்கிறார்கள். மூன்று நாள் காவல் கைதியாக இருந்த பூலான் தேவியிடம், அங்கிருக்கும் காவல்துறையினர் மோசமாக நடந்துகொண்டு அவரது அப்பாவின் எதிரே பாலியல் சீண்டல் செய்கிறார்கள். அவரது அப்பா, நடந்தையெல்லாம் அந்த ஊரில் தாக்கூர் என்ற உயர்சாதி என்று சொல்லக்கூடிய பெரியவர்களிடம் கூறி ஜாமீன் எடுக்கச் சொல்கிறார். அவர்களும் ஜாமீன் எடுத்துவிட பூலான் தேவியும் வெளியே வருகிறார்.
ஜாமீனில் எடுத்ததற்காக அவர்களிடம் நன்றி சொல்வதற்காக பூலான் தேவி அங்கு செல்ல, அந்த பெரியவர்களும் பூலான் தேவியை பாலியல் வன்முறை செய்கிறார்கள். உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்ட பூலான் தேவி, கைலாஷ் இருக்கும் ஊருக்குச் செல்கிறார். ஜம்பல் பள்ளத்தாக்கில் தங்கிருக்கும் 50 கொள்ளைக்காரக் குழுவிற்கு தேவையான பொருட்களை உதவி செய்வது தான் கைலாஷினுடைய வேலை. அந்த குழுவில் உள்ள முக்கியமான நபர்களான பாபு குஜ்ஜர் மற்றும் விக்ரம் மல்லா ஆகியோரிடம் தன் மனைவியை பூலான் தேவியை அறிமுகம் செய்கிறான். இதற்கிடையில், சிறையில் இருந்த பூலான் தேவியை வைத்திருக்கக் கூடாது என கைலாஷுனுடைய ஊர்க்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால், கைலாஷ் பூலான் தேவியை பாபு புஜ்ஜர் இருக்கும் கொள்ளை கும்பலில் ஒப்படைக்கிறான். அங்கு பாபு புஜ்ஜர், தொடர்ச்சியாக பூலான் தேவியை பாலியல் வன்முறை செய்கிறான். வலி, வேதனை, அழுகுரல், கூச்சல் இப்படியாக தான் அங்கு 3 நாட்கள் செல்கிறது. ஒரு கட்டத்தில், அந்த கும்பலிடம் இருந்து கஷ்டப்பட்டு தப்பித்து அங்கிருந்து தன்னுடைய அப்பா அம்மா இருக்கும் ஊருக்கு பூலான் வந்துவிடுகிறார். பூலான் தேவி தப்பித்த செய்தியை அறிந்த பாபு புஜ்ஜர் ஆத்திரமடைந்து, பூலான் தேவியினுடைய வீட்டுக்கு வருகிறான். என்னுடன் வரவில்லையென்றால் உன் குடும்பத்தை கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறான். இவ்வழக்கு குறித்த மேலும் விவரங்களை அடுத்த தொடரில் காணலாம்..