மூன்று தலைமுறை பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.
இந்தோரில் ஸ்ரீநகர் மெய்ன் என்ற ஏரியா பணக்காரர்கள் வசிக்கும் நகர் அது. அங்கு 19.6.2011 அன்று ஒரு பெண்மணி காலை ஒரு பூட்டிய வீட்டின் முன்பு ரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டு, அந்த வீட்டின் ஓனர் விஷால் படேல் என்பவருக்குத் தகவல் சொல்கிறார். அவர் வந்து ஜன்னல் உள்ளே எட்டி பார்க்க அங்கே மூன்று பெண்மணிகள் கொலை செய்து கிடக்கின்றனர். உடனே போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் செல்கிறது. அந்த வீட்டில் நிரஞ்சன் என்பவரும் அவரது மனைவி, தாய் மற்றும் மகள் என நால்வரும் ஓரிரு நாட்களாகத்தான் வசித்து வந்தனர். நிரஞ்சன் 80 கி.மீ தாண்டி தானோஜ் என்ற இடத்தில் வங்கி அதிகாரியாகப் பணிபுரிகிறார். வீட்டில் தனது 70 வயது தாயார், 42 வயது மனைவி மற்றும் 22 வயது மகள் மட்டுமே அதிக நேரம் இருக்கின்றனர்.
போலீஸ் அதிகாரிகள் வீட்டை நன்கு சோதனை செய்கின்றனர். இரண்டு துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்படுகிறது. அதில் ஒன்று அந்த மனைவியின் தலையில் இருந்தது. ஆனால் இன்னொன்று எங்கிருந்து வந்தது என்று சந்தேகிக்கின்றனர். அடுத்ததாக கைரேகை நிபுணர், இந்த மூவர் இல்லாமல் இன்னொரு புதிய கை ரேகை இருப்பதை கண்டுபிடிக்கிறார். அதை பார்த்ததும் அந்த தேர்ந்த அதிகாரி அது ராகுல் சவுத்ரியுடையது தான் என்று சொல்கிறார். அவன் ஏற்கனவே நிறைய குற்றங்கள் செய்து பிரபலமானவனாக இருக்கிறான். அது மட்டுமல்லாமல், அந்த இடத்தில மூவர் ரத்தம் இல்லாமல் இன்னொருவருடைய ரத்தமும் கிடைக்கிறது.
மேலும் வீட்டை சோதனை செய்ததில் அவர்களது பீரோ, லாக்கர் என அனைத்து இடங்களிலும் பார்த்ததில் நகை, பணம் என நிறைய தொலைந்திருக்கின்றன. ஒரு காவல் அதிகாரி, ஒருவேளை திருடிய பொருளில் பங்கீட்டில் தகராறு ஏற்பட்டிருக்கலாம் அதனால் சண்டை ஏற்பட்டு, குண்டடி, ரத்தம் என ஆகியிருக்கலாம் என சந்தேகம் கொள்கின்றார். எனவே அருகிலிருக்கும் அனைத்து மருத்துவமனையிலும் புல்லட் காயத்துடன் யாரேனும் வந்திருக்கிறார்களா என்று கவனிக்கிறார்கள். மேலும் நிரஞ்சன் தனது மகளிடம் எ.டி.எம் கார்டு ஒன்று கொடுத்து இருந்ததாகவும் ஆனால் அது தற்போது காணவில்லை என்று புகார் சொல்ல அதனையும் குறித்து வைத்து, அருகிலிருக்கும் எல்லா எ.டி.எம் சென்டரில் ஆள் வைத்து கவனிக்கின்றனர். இன்னொரு பக்கம், ராகுல் என்பவனை பிடிப்பது காவல் அதிகாரிகளுக்கு மிகவும் சவாலாக இருக்கிறது.
இப்படி இருக்க 22.06.2011, காலை 6 மணிக்கு அருகிலிருக்கும் ஒரு ஏ.டி.எம் சென்டரில் 22 வயது மிக்க ஒரு பெண், ஒரு கார்டை வைத்து நெடு நேரம் மிஷினில் போட்டு போட்டு எடுத்துக் கொண்டிருக்க சந்தேகம் வந்து போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரிக்கிறார்கள். விசாரித்ததில் அந்த பெண்ணும், தான் இந்த சம்பவத்தில் உடன்பட்டிருந்ததை ஒத்துக் கொள்கிறாள். அதன்படி, தான் சிறுவயதில் இருந்தே பணக்கார வாழ்க்கை வாழ ஆசைப்பட்டிருக்கிறாள். அதுபோல யாரேனும் பார்த்தால் ஆசைப்படும் குணம் அவளுக்கு. அப்படித்தான் அந்த நிரஞ்சனின் மனைவியை பியூட்டி பார்லரில் சந்தித்து நட்பாகி அவரிடம் நயமாக பேசி, அவரிடம் தான் பியூட்டி பொருட்கள் விற்பனை தொழில் செய்வதாக சொல்லி, தனக்கு பிசினஸில் உதவ முடியுமா என்று சொல்ல, இருவரும் நிரஞ்சனின் வீட்டில் சந்திக்க ஏற்பாடு ஆகி இருக்கிறது.
அவள் இந்த திட்டத்தை தனது காதலன் ராகுலிடம் சொல்லி இருவரும் மனோஜ் என்பவனுடன் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கின்றனர். சொன்னது போல அந்த பெண் நிரஞ்சனின் மனைவியை சந்திக்க 11 மணி அளவில் உள்ளே செல்கிறாள். கூட வந்திருக்கும் ராகுல், மனோஜ் இருவரும் அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கில் குடித்துவிட்டு நிற்க, இவள் வீட்டில் அந்த பெண்மணியுடன் பிசினஸ் என்று பேசிக்கொண்டு இருந்திருக்கிறாள். அது சம்பந்தமாக ஒரு ஃபார்மில் கையொப்பம் போட வரும்போது, தனது காதலன் இங்கேதான் அருகில் இருக்கிறார். அவரும் பார்த்துவிட்டு ஃபார்மில் கையெழுத்து போடுகிறேன் என்று சொல்லி அவனை போனில் அழைக்கிறாள்.
எப்படி கொல்லப்பட்டார்கள் என்ற விவரங்களை அடுத்த பாகத்தில் காணலாம்.