Skip to main content

சொத்துக்காக மொத்த குடும்பமும் கொலை; குழந்தைகளையும் விட்டு வைக்காத கொடூரம் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 47

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
thilagavathi-ips-rtd-thadayam-47

பல்வேறு கொலை குற்றச் சம்பவங்களை ‘தடயம்’ என்னும் தொடரின் வழியே தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்கி வருகிறார். அந்த வகையில் முன்னாள் ஹரியானா எம்.எல்.ஏ ரேலு ராம் என்பவரின் மொத்த குடும்பமும் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். அந்த திகில் கொலைச் சம்பவம்  பற்றியும், கொலை பின்னணியை பற்றிய விவரங்களையும் நமக்கு விளக்குகிறார்.

ஹரியானாவில் உள்ள ஒரு பெரிய மாளிகையில் எம்.எல்.ஏ. ரேலு ராம் மற்றும் அவரது பெரிய மற்றும் மகிழ்ச்சியான குடும்பம் வசித்து வந்தது. குடும்பத்தில் ரேலு ராமின் இரண்டாவது மனைவி கிருஷ்ணா தேவி அவரது மூத்த மனைவியின் மகன் சுனில், மருமகள் சகுந்தலா தேவி, ஒரு பேரன் லோகேஷ், இரண்டு பேத்திகள் மற்றும் இரண்டாவது மனைவியின் இரண்டு மகள்கள் பிரியங்கா மற்றும் சோனியா ஆகியோர் இருந்தனர். ரேலு ராம் புனியா மாநிலத்தின் பணக்காரர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். நிறைய ஊர்களில் ஏக்கர் கணக்கில் நிலங்கள் இருந்தாலும், தான் ஒரு லாரி கிளீனராக இருந்து பின்னர் ஆயில் மற்றும் சாலைகளில் தார் போடும் பிசினஸ் என்று முன்னேறி வந்ததால் தனது நிலங்களை கோயில் திருவிழா மற்றும் மக்கள் நற்பணிக்கு, தேர்தல் சமயங்களில் கட்சிக்கு என்று தாராளமாக கொடுத்து உதவினார். தன் குடும்பத்திற்கு சகல ஆடம்பரங்களையும் வசதிகளையும் கொடுத்திருந்தார். இப்படி முன்னேறி ரேலு ராம் 1996ல் சுயேட்சையாக நின்று பர்வாலா தொகுதியை வென்று ஹரியானா சட்டசபைக்கு செல்கிறார்.

இப்படி ஒரு நாள் (23.8.2001) ரேலு ராம் வீட்டிற்கு ராம்பால் என்பவர் பால் பாக்கெட் போட வந்திருக்கிறார். வழக்கமாக ரேலு ராம் அறைக்கு சென்றவரை தடுத்து சோனியா கீழே தனது தளத்தில் கொடுக்குமாறு கூறுகிறாள். அடுத்து நான்கு வயது பேரன் லோகேஷை அழைக்க பள்ளி பேருந்து வருகிறது. நெடு நேரம் ஆகியும் வரவில்லை எனவே பேருந்து சென்று விடுகிறது. அடுத்ததாக சந்தேகம் வந்த ஜீத் சிங்க் என்ற அவ்வீட்டில் நெடுங்காலம் பணிபுரிந்த பழக்கமான உதவியாளர், அவர் இன்னொரு வேலைக்காரரை அழைத்து மேலே சென்று அனைவரும் நேற்றிரவு பிறந்தநாள் பார்ட்டியில் களைத்து உறங்கியிருப்பர். எல்லாரையும் பாத்து எழுப்பு என்று அனுப்பி வைக்கிறார். மேலே போனவர் அலறலோடு திரும்புகிறார்.

ஜீத் சிங்க் மேலே சென்று பார்த்ததில், முதல் தளத்தில் சோனியா வாயில் நுரை தள்ளி, தான் விஷம் குடித்துவிட்டதாகச் சொல்லி கீழே கிடக்கிறாள். அடுத்த எல்லா அறையிலும் திறந்து பார்க்கையில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. அங்கே எல்லா அறையிலும் ரெலு ராம் குடும்பம் அனைவரும் தலையில் இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமாக ரத்தம் வெளியே வெள்ளமாக கொட்டப்பட்டு, சுனிலின் 3 குழந்தைகள், அவரது மனைவி, இன்னொரு மகள் பிரியங்கா, ரேலு ராம், அவரது மனைவி என எல்லாரும் கோரமாக இறந்து சடலங்களாக கிடக்கின்றனர். பதறிய ஜீத் சிங்க் காவலாளியை அழைத்து ஆம்புலன்ஸ், போலீஸ் என்று எல்லாரையும் அழைத்து, விரைவாக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகின. அந்நாள் ஹரியானா முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா அங்கு சம்பவம் நடந்த வீட்டிற்கே வருகிறார். சோனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடும்பத்தின் மொத்த 8 சடலங்களும் போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்பப்பட்டன. அனைத்து அறைகளும் சோதனைக்கு உட்பட்டது. கை ரேகைகள் எடுக்கப்பட்டன. போலீஸ் முதற்கட்டமாக ரேலு ராமின் தொழில் மற்றும் கட்சி விரோதிகளையும், வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்காரர்களையும் தான் சந்தேகம் கொள்கின்றனர். சோனியா அறையில் ஒரு சிகப்பு டைரி மற்றும் ஒரு இரும்பு ராட் ரத்தக் கறையுடன் கண்டுபிடிக்கப்படுகிறது. 

இக்குடும்பத்தில் சோனியா மட்டுமே உயிருடன் இருப்பதால் அவளிடம் இதற்கான விசாரணையை மேற்கொண்டு கேட்க வேண்டும் என்று முடிவாகிறது. ரேலு ராமின் முதல் மனைவி ஓமி தேவிக்கு பிறந்தவரே சுனில் என்ற மூத்த மகன். இரண்டாவது மனைவி கிருஷ்ணா தேவிக்கு பிறந்தவர்களே சோனியா மற்றும் பிரியங்கா. சோனியா 'டெக் ஒண்டோ' என்ற மார்ஷியல் ஆர்ட்டில் ஈடுபாடு உள்ளவள். அங்கே அவள் தனது ஜூடோ மாஸ்டர் சஞ்சீவ் என்பவரை காதலித்து அப்பாவிடம் திருமணம் செய்ய கேட்கிறாள். முதலில் மறுத்தாலும் பின்பு ஒத்துக்கொள்கிறார். ஆனால் திருமணம் முடிந்ததிலிருந்து ரெலு ராம் இடையே நல்லுறவு இல்லை. கணவன் சஞ்சீவிற்கு தொழில் வைக்க பெரும் தொகையை அடிக்கடி அப்பாவிடம் கேட்பது, பணம் அதிகளவில் செலவு செய்வது என்று இருக்கிறாள்.

ரெலு ராம் அவருடைய விவசாய நிலத்தில் முதலீடு செய்து தனது சொந்த கிராமமான லிட்டானியில் ஒரு மாளிகையை கட்டி இருந்தார். அதில் தனது ஒன்றுவிட்ட சகோதரர் சுனிலுடன் அவர்களது பண்ணை வீட்டைச் சுற்றியுள்ள சுமார் 46 ஏக்கர் விவசாய நிலம் தொடர்பாக தனக்கு மாற்றித் தருமாறு அடிக்கடி கேட்டு தகராறு செய்தார். இது இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதங்களை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், சோனியா சுனிலை ரிவால்வரால் சுடவும் செய்து இருக்கிறாள். ஆனால் அதில் சுனில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்து விடுகிறார். இது எல்லாம் கொலை நடந்த சிறிது காலம் முன்பு நடந்து இருக்கிறது. போலீஸ் விசாரணையில், சோனியா அறையில் அவளது சிகப்பு டைரி கண்டுபிடிக்கப்படுகிறது. அதில் அவள் தன் கணவனுக்கு எழுதி இருப்பது போல, ஒரு தற்கொலைக் குறிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  தன் தந்தை அவள் தன் குடும்பம் அனைவரையும் கொல்ல நினைப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மருத்துவமனையில் விசாரிக்க வந்தபோது, குடும்பத்தை இப்படி கொடூரமாக கொலை செய்தவர்களை கண்டு பிடிக்க வேண்டும் என்று கதறி அழுகிறாள். 

கடைசியாக போலீஸ் மேலும் விசாரிக்க, இப்படி அவளது அறையில் சிகப்பு டைரி ஒன்று கிடைத்தது என்றும், ரத்தம் படிந்த இரும்பு ராட் ஒன்று கைரேகையுடன் கிடைத்தது  பற்றியும் சொல்ல, இறுதியில் உண்மை நிலவரம் புரிந்து கொலையை ஒத்துக்கொண்டு வாக்குமூலம் கொடுக்கிறாள். அவளை மெஜிஸ்திரேட் முன்பு வைத்து வாக்குமூலத்தை சொல்லச் சொல்ல பதிவு செய்கின்றனர். சுனில் தன் கணவனை வெறுத்ததாகவும், தன் தந்தை மதிப்புள்ள சொத்தை அவனுக்கே கொடுத்து, தனக்கென்று எதுவும் செய்யாமல் தன் மேல் அன்பு இல்லாமல் இருந்ததால் தான் இப்படி செய்ததாக சொல்கிறாள். அன்று தன் தாய் வற்புறுத்தி அழைத்ததால் தான், தனது தங்கை பிரியங்காவின் பதினாறாவது பிறந்தநாள் பார்ட்டிக்கு அவளை விடுதியிலிருந்து கூட்டிக்கொண்டு தன் கணவனோடு வந்திருக்கிறாள். ஆனால் வரும் வழியில் தன் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் அவர் பாதி வழியில் இறங்கி கொள்கிறார். அங்கே பார்ட்டியில், சுனில் கலந்து கொள்ளவில்லை. குடும்பத்தில் அனைவரும் நன்றாக மகிழ்ச்சியாக கொண்டாடி இருந்தனர். அப்போது சுமார் ஒன்றரை மணி நள்ளிரவில், சுனிலுடன் சோனியா மனம் விட்டு பேச சென்றிருந்ததாகவும், ஆனால் அப்போதும் அவன் அவளை தரக்குறைவாக வெறுத்து பேசியதால், தனது கட்டுப்பாட்டுக்கு மீறி கோபத்தில் அவனை இரும்பு ராடினால் அடித்துவிட்டு, அப்படியே குடும்பத்தில் எல்லாரையும் கொன்று விட்டதாக வாக்குமூலம் சொல்கிறாள்.

தனக்கு கிடைக்காத சொத்து அக்குடும்பத்தில் யாருக்குமே போய்விடக் கூடாது என்று கடைசி தலைமுறையான அவ்வீட்டு குழந்தைகள் வரை கொடூரமாக கொன்றிருக்கிறாள். ஆனால் இதில் காவல் அதிகாரிகளுக்கு சில சந்தேகங்கள் இருந்தன. ஒன்று, அன்று வரிசையாக இத்தனை பேரை கொல்லும்போது எப்படி ஒருவர் கூட அலறாமல் இருந்திருக்க முடியும். ஒருவர் கத்தி சத்தம் போட்டிருந்தால் கூட மற்றவர் கவனித்திருக்கலாம். இன்னொரு சந்தேகம், சுனிலின் மனைவி அதாவது அண்ணி சகுந்தலா தேவி வாயில் துணி வைத்து அடக்கி, கைகள் இறுக்க கட்டப்பட்டு தான் சடலம்  இருந்தது. அப்படி என்றால் இதனை இவள் மட்டும் ஒரு ஆளாக நிச்சயம் செய்திருக்க முடியாது. கூட ஒருவர் உதவி செய்திருக்க வேண்டும் என்று உறுதி செய்கின்றனர்.

யாரேனும் உதவி செய்தார்களா என்ற விவரம் குறித்த தகவல்களை அடுத்த பாகத்தில் காணலாம்...