பல்வேறு கொலை, குற்றச் சம்பவங்களைத் ‘தடயம்’ என்னும் தொடரின் வழியே தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்கி வருகிறார். அந்த வகையில் கோடீஸ்வர பெண்மணி ஒருவர் காணாமல் போகிறார், அவர் எப்படிக் காணாமல் போனார் என்பதையும் அவரைப் பற்றிய விவரங்களைப் பற்றியும் நமக்கு விளக்குகிறார்.
இளம் வயது மாடல் அழகியான ஷாபா, தன்னுடைய அம்மாவான ஷகீரே கலீலியைக் காணவில்லை என்று புகார் அளிக்கிறார். இவரது குடும்பம் பெங்களூரில் வசித்து வந்தது. பொருளாதாரத்தில் உயர்ந்த குடும்பப் பின்னணியிலிருந்த ஒரு பெண்ணைக் காணவில்லை என்றதும் அந்த செய்தி கர்நாடகா முழுவதும் அந்தக் காலகட்டத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
தன் கணவரைப் பிரிந்து இரண்டாம் திருமணமாக ஷ்ரத்தானந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தவர், காணவில்லை. ஷ்ரத்தானந்தாவிடம் கேட்டால் வெளிநாடு போயிருக்கார் வந்துவிடுவார் என்றே பதில் சொல்கிறார். இரண்டு வருடங்களாகியும் ஷகீரே கலீலியேவைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இவரது மகள் ஷாபா கர்நாடகாவிற்கு பொறுப்பேற்ற காவல்நிலைய உயர் அதிகாரிகளைச் சந்தித்து முறையிடுகிறாள். அதன் பிறகு ஷ்ரத்தானந்தாவை நுணுக்கமாக கண்காணித்து வருகிறார்கள்.
ஷகீரே கலீலியோவின் வீட்டில் தான் ஷ்ரத்தானந்தா வசித்து வந்தார். அதில் பணியாற்றிய ஒருவர் இரவில் குடிக்கும் பழக்கம் இருப்பவர். அருகே இருக்கும் ஒரு பாரில் அடிக்கடி குடிப்பார். அவரோடு காவல்துறையைச் சேர்ந்தவர் பழகி வீட்டில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள முயல்கிறார். அவரும் சில தகவல்களைச் சொல்கிறார். அதாவது அந்த வீட்டின் படுக்கை அறையில் புதிதாக ஒரு இடத்தில் தரையை சிமெண்ட் வைத்து பூசியிருக்கிறார்கள். அத்தோடு அதன் மீது துளசி செடி வைத்து தண்ணீர் ஊற்றி வருகிறார். இந்த ஷ்ரத்தானந்தா சில சமயங்களில் அதில் பால் ஊற்றுவார் என்று தகவல் கிடைக்கிறது. இது காவல்துறைக்கு சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது
இந்த தகவலின் அடிப்படையில் ஷ்ரத்தானந்தாவை காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து அடித்து விசாரிக்கிறார்கள். அவர் உண்மையை ஒப்புக்கொள்வதாக சொல்கிறார். அதாவது, இவரை திருமணம் செய்து கொண்டதே ஆண் குழந்தைக்காகத் தான். ஆனால் அது நடக்கவில்லை, அதன் பிறகு இவரை நடத்தும் விதமே வித்தியாசமாக இருந்திருக்கிறது. ஒரு நாள் ஷகீரே ஷ்ரத்தானந்தாவை கை நீட்டி அடித்திருக்கிறார். வங்கியில் பணப்பரிவர்த்தனை செய்யக் கூடாது என்று நிபந்தனை விதித்திருக்கிறார்.
இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்ததன் விளைவாக ஷகீரேவை கொலை செய்ய ஷ்ரத்தானந்தா திட்டமிடுகிறார். ஷகீரே உயரத்திற்கு ஒரு சவப்பெட்டியை வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்திருக்கிறார். அவரது உணவில் மயக்க மருந்தினை கலந்து அவர் படுத்திருந்த போது போர்வையுடனேயே பெட்டிக்குள் போட்டு புதைத்திருந்திருக்கிறார். இதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால், வீட்டு வேலையாட்களிடம் ஷகீரே தூக்கத்திலேயே இறந்து விட்டார். அதனால் நாம் யாருக்கும் சொல்லாமல் புதைக்கிறோம். ஏனெனில் யாரும் நம்ப மாட்டார்கள். அத்தோடு இது இந்து முஸ்லீம் பிரச்சனையாகவும் மாறிப்போகும் என்றெல்லாம் சொல்லி வேலையாட்களை நம்ப வைத்திருக்கிறார்.
நீதிமன்றத்தில் இந்த வழக்கினை விசாரித்த கர்நாடக நீதிமன்ற நீதிபதிகள், உயிருடனேயே ஷகீரேவை புதைத்த ஷ்ரத்தானந்தாவிற்கு மரண தண்டனை வழங்கியது. ஆனால் இதை மேல்முறையீடு செய்து நான் இந்த கொலையை செய்யவில்லை என்று வாதாடுகிறார் ஷ்ரத்தானந்தா. ஆனால் ஷகீரே வழக்கறிஞரோ “பெட்டிக்குள் இருந்த ஷகீரேவின் கை தன்னுடையை போர்வையை இறந்த நிலையில் இறுக்கி பிடித்திருக்கிறது. அத்தோடு அவருடைய நகங்களில் பெட்டியின் மரத்துகள்கள் ஒட்டியிருக்கிறது, நக கீரல்களும் அந்த பெட்டியில் இருக்கிறது. எனவே அவர் இறந்து புதைக்கப்படவில்லை. உயிரோடு புதைக்கப்பட்டு பெட்டிக்குள் தான் உயிருக்கு போராடி இறந்திருக்கிறார் என்று வாதாடி வெற்றி பெறுகிறார்.
சாகும் வரை சிறையிலேயே ஷ்ரத்தானந்தா கிடக்க வேண்டும் என்று இறுதி தீர்ப்பு வந்தது. இன்று வரை சிறையில் தான் கிடக்கிறார் ஷ்ரத்தானந்தா. ஆனால் அவரின் வழக்கறிஞரோ, ஷ்ரத்தானந்தா வெளியே வந்தால் ஷகீரேவின் சொத்துகளை கையாளும் உரிமையை பெற்று விடுவார் என்ற காரணத்தினாலேயே அவரை சாகும் வரையில் சிறையில் அடைத்து விட்டார்கள் என்று குற்றம் சாட்டி வருகிறார். குடியரசுத் தலைவருக்கு கருணை மனு போட்டும் அவரது மனு இன்னும் நிலுவையில் தான் உள்ளது.