Skip to main content

சாமியாருடன் உல்லாசப் பயணம் சென்ற கோடீஸ்வரி; அம்மாவைத் தேடும் மகள் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 41

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
 thilagavathi-ips-rtd-thadayam-41

பல்வேறு கொலை, குற்றச் சம்பவங்களை ‘தடயம்’ என்னும் தொடரின் வழியே தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்கி வருகிறார். அந்த வகையில் கோடீஸ்வர பெண்மணி ஒருவர் காணாமல் போகிறார், அவர் எப்படி காணாமல் போனார் என்பதையும் அவரைப் பற்றிய விவரங்களைப்  பற்றியும் நமக்கு விளக்குகிறார்.

இளம் வயது மாடல் அழகியான ஷாபா, தன்னுடைய அம்மாவான ஷகீரே கலீலியைக் காணவில்லை என்று புகார் அளிக்கிறார். இவரது குடும்பம் பெங்களூரில் வசித்து வந்தது. பொருளாதாரத்தில் உயர்ந்த குடும்பப் பின்னணியிலிருந்த ஒரு பெண்ணைக் காணவில்லை என்றதும் அந்த செய்தி கர்நாடகா முழுவதும் அந்தக் காலகட்டத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. 

ஷகீரே கலீலிக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது. கணவரும் மிகப்பெரிய செல்வந்தர் தான். மிகப்பெரிய அரசு பதவியிலும் பணியாற்றுகிறார். அழகிலும், செல்வாக்கிலும், வாழ்விலும் எந்த குறையுமில்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு டெல்லி நவாப் ஒருமுறை விருந்து வைக்கிறார். அந்த விருந்தில் கலந்து கொண்ட போது பல்வேறு விசயங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். 

அதில் ஒன்றாக சொத்து விவகாரங்களில் ஏற்பட்ட சிக்கலை முரளி மனோகர் மிஷ்ரா என்ற ஊழியர் ஒருவர் தான் சரி செய்கிறார் என அவரை அறிமுகம் செய்து வைக்கிறார்கள் நவாப் குடும்பம். முரளி மனோகர் மிஷ்ரா தன்னுடைய பெயரை வாழ்ந்து மறைந்த ஒரு துறவியான ஷ்ரத்தானந்தா என்பவரின் பெயரை தன்னுடைய பெயராக மாற்றிக் கொண்டு சாமியாரைப் போல காட்சியளிக்கிறார். 

ஷகீரே கலீலியின் கணவருக்கு ஈரானில் வேலையாக இந்தியாவிலிருந்து அனுப்பப்படுகிறார்.    அந்த காலகட்டம் ஈரானுக்கும், ஈராக்கிற்கும் போர் மூளும் சூழல் இருந்ததால் குடும்பத்தை கூட்டிக்கொண்டு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதால், குடும்பத்தை பெங்களூரில் விட்டுச் சென்று விடுகிறார். 

அதே சமயத்தில் அரசால் நில உச்ச வரம்பு சட்டம் கொண்டு வரப்படுகிறது. அதிக நிலம் வைத்திருக்கிற செல்வ செழிப்பான குடும்பம் இதை எவ்வாறு கையாளப் போகிறது என விழி பிதுங்கிய சமயத்தில், இப்படியான சிக்கல் ஷகீரே கலீலிக்கும் வருகிறது. தன்னுடைய கணவர் ஈரானில் இருக்கிறார். நான்கு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு இருக்கிறோம், இப்படியான சிக்கலும் இருக்கிறது, என்ன செய்வது என்று யோசித்தவர் நவாப் இல்லத்தில் கணக்கு வழக்கு பார்க்கிற முரளி மனோகர் மிஷ்ராவாகிய ஷ்ரத்தானந்தாவை தன்னிடம் பணியாற்ற அழைத்து வருகிறார். 

அவரும் ஆரம்பத்தில் மிக கண்ணியமாக அனைத்து கணக்கு பராமரிப்பு வேலைகளையும் செய்து நம்பிக்கையை பெறுகிறார். அதனாலேயே இவருக்கு தன்னுடைய சொத்துக்களை நேரடியாகவே கையாளுகிற பவரை அவருக்கு வழங்குகிறார் ஷகீரே கலீலி. மேலும் இருவருக்குள்ளும் நெருக்கமும் அதிகரிக்கிறது. அத்தோடு கணவரின் அடையாளம் இல்லாமல் தனக்கென்று ஒரு அடையாளம் வேண்டும் என்று பில்டிங் கன்ஸ்ட்ரக்‌ஷன் சம்பந்தப்பட்ட சில வேலைகளை ஷகீரே செய்கிறார்.

தன் கணவர் அக்பர் கலீலியை விவாகரத்து செய்து விட்டு முரளி மனோகர் மிஷ்ராவை திருமணம் செய்து கொள்கிறார். அத்தோடு உல்லாச பயணமாக உலகம் முழுவதும் செல்கிறார். 4 பெண் குழந்தைகளும் அப்பாவோடு சென்று விடுகிறார்கள். சில வருடங்களுக்கு பிறகு தன் அம்மாவைப் பார்க்க மாடல் அழகியான ஷாபா தொடர்பு கொண்ட போது முரளி மனோகர் மிஷ்ரா அம்மா வெளிநாடு போயிருக்கிறார் என்று சொல்கிறார். ஆனால் ஷாபாவிற்கு அவளது அம்மாவின் பாஸ்போர்ட் கிடைக்கப் பெறுகிறது. பாஸ்போர்ட் இல்லாமல் எங்கே வெளிநாடு போனார் என்று காவல்துறையில் புகார் கொடுத்து தேடுகிறார்கள், தேடிக்கொண்டே இருக்கிறார்கள். 

என்ன ஆனார் ஷகீரே கலீலி அடுத்த தொடரில் காண்போம்...