இளம்பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.
2009 ஆம் ஆண்டு அனிதா பார்மர் என்கிற 22 வயது பெண் காணாமல் போனார். ஆண்களோடு பேசுவதைக் கூட பாவம் என்று நினைக்கும் சமுதாயம் அவருடையது. அந்தப் பெண் ஒரு இஸ்லாமிய இளைஞனுடன் ஓடிப்போனார் என்கிற தகவல் பரப்பப்பட்டது. இது ஒரு லவ் ஜிகாத் என்கிற செய்தியைப் பரப்பினர். மக்கள் அனைவரும் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அது ஒரு போராட்டமாகவே மாறியது. குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஒரு மாதம் டைம் வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டனர். பேச்சுவார்த்தை முடிந்தது.
சிறப்புப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. அனிதாவின் போன் ரெக்கார்டுகளை சோதித்தபோது ஒரு குறிப்பிட்ட நபருடன் அவர் அதிகம் பேசியது தெரிந்தது. காவேரி என்கிற இன்னொரு பெண் தான் அது. காவேரியை ஒருவருடமாகக் காணவில்லை என்று தகவல் கிடைத்தது. புஷ்பா என்கிற பெண்ணுடன் காவேரி அதிக நேரம் போனில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. புஷ்பாவையும் காணவில்லை. புஷ்பாவின் போனில் வினுதா என்கிற பெண்ணின் நம்பர் கிடைத்தது. அவரைத் தேடியபோது அவரையும் காணவில்லை.
காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். பெண்கள் கடத்தப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்களோ என்கிற சந்தேகம் ஏற்பட்டது. அனைத்து இடங்களிலும் விசாரணை நடத்தப்பட்டது. காவேரி என்கிற பெண்ணின் போன் திடீரென செயல்பாட்டுக்கு வந்து அதன் பிறகு ஆஃப் ஆனது. எங்கிருந்து போன் செயல்பட்டது என்பதை ஆராய்ந்து விலாசத்தைக் கண்டுபிடித்து போலீசார் நேரில் சென்றனர். அங்கு தனுஷ் என்கிற இளைஞர் இருந்தார். மோகன் குமார் என்கிற தன்னுடைய மாமா தான் இந்த போனை தன்னிடம் கொடுத்தார் என்று அவர் கூறினார். மோகன் குமார் என்பவர் சுமித்ரா என்கிற பெண்ணிடம் போனில் அதிகம் பேசி வந்தார் என்பது தெரிந்தது.
சுமித்ராவிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுமித்ராவை வைத்து மோகன் குமாரை வரவழைக்க திட்டம் தீட்டப்பட்டது. சொன்னபடி அவர் ஒரு இடத்துக்கு வந்தார். போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தனர். அவன் தான் குற்றவாளி என்பது தெரிந்தது. நடந்த அனைத்தையும் அவன் சொன்னான். இதுவரை 32 கொலைகள் செய்தவன் அவன். தன்னுடைய 20 வயதில் பள்ளியில் வாத்தியாராக அவன் வேலைக்குச் சேர்ந்தான். அங்கு ஏழாம் வகுப்பு படிக்கும் மேரி என்கிற பெண்ணைக் காதலித்து, அந்தப் பெண்ணுக்கு 18 வயது ஆகும் வரை காத்திருந்து திருமணம் செய்துகொண்டான். பேங்கிங் துறை உட்பட பல்வேறு வகைகளில் அவன் குற்றங்கள் செய்து வந்தான்.
ஒரு பெண்ணை மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிக் கொல்ல முயற்சி செய்தபோது மக்கள் அவனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அந்தப் பெண் தானாகவே குதித்தார் என்று அவன் சொன்ன பொய் சாட்சியை நீதிமன்றம் நம்பி அவனை விடுதலை செய்தது. அதன் பிறகு தான் அவனுக்கு அதீதமான தைரியம் உருவானது. இன்னொரு பெண்ணை அவன் திருமணம் செய்துகொண்டான். ஸ்ரீதேவி என்கிற இன்னொரு பெண்ணையும் அதற்கடுத்து திருமணம் செய்துகொண்டான். திடீரென கர்நாடகாவில் உள்ள பல பஸ் நிலையங்களுக்கு அருகில் இருக்கும் கழிவறைகளில் பெண்கள் தொடர்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்தன.
எளிமையான பெண்களே தன்னுடைய குறியாக இருப்பார்கள் என்று அவன் வாக்குமூலம் கொடுத்தான். பெண்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திவிட்டு, அவர்களுக்கு மாத்திரை என்கிற பெயரில் சயனைடு கொடுத்து கழிவறைக்கு செல்லச் சொல்லி, அங்கு அவர்கள் இறந்துபோவதைக் கண்டு ரசிப்பான். இதே முறையைத் தான் அனைத்து பெண்களிடமும் அவன் கையாண்டுள்ளான். இவ்வளவு செய்த பிறகும் அவனை அவனுடைய குடும்பத்தினர் நல்லவன் என்றே நம்பி வந்துள்ளனர்.
(காவல்துறையால் கைது செய்யப்பட்ட சயனைடு மோகன்குமார் தண்டனை என்னவானது என்பதை அடுத்த பகுதியில் காணலாம்).
- தொடரும்