Skip to main content

நாட்டையே உலுக்கிய கேரள பழங்குடி இளைஞர் மது கொலை வழக்கு - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 31

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

thilagavathi-ips-rtd-thadayam-31

 

கேரளாவில் பழங்குடியின இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விவரிக்கிறார்.

 

பாலக்காட்டுக்கு அருகில் மது என்கிற 27 வயது இளைஞர் இறந்து போனார். பட்டப்பகலில் ஒரு பெரிய கூட்டத்தினால் துரத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு அந்த இளைஞர் உயிரிழந்தார். பலர் அதை நேரில் பார்த்தனர். எனவே துப்பறிவதற்கு அந்த வழக்கில் எதுவும் இல்லை. ஆனால் அந்த வழக்கில் தீர்ப்பு வருவதற்கு ஐந்து வருடங்கள் ஆனது. மது என்கிற இளைஞர் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர். மிக அதிகமான துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடிய சமூகம் என்று அவருடைய சமூகம் வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு பின்தங்கிய சமூகம் அவருடையது. 

 

கொஞ்சம் அரிசியையும் மிளகாய் தூளையும் திருடிவிட்டார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. அதற்காக உயிர்போகும் அளவுக்கு அவரைத் தாக்கியுள்ளனர். மது தச்சு வேலை கற்றவர். அவருக்கு ஆலப்புழாவில் ஒரு வேலை கிடைத்தது. அந்த இடத்தில் இருதரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் மதுவுக்கு காயம் ஏற்பட்டது. ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த அவர், அதன்பிறகு சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் மாறினார். அதன் பிறகு அம்மா, தங்கை ஆகியோருடன் தங்குவதை அவர் குறைத்தார். மலையில் உள்ள ஒரு குகையில் அவர் தங்கினார். மனிதர்களிடமிருந்து பெரும்பாலும் விலகியே இருந்தார். 

 

அங்கிருந்த முக்காளி என்கிற பகுதியில் சிறிய கடைகள் நிறைய இருந்தன. அங்கிருந்து அரிசியையும் மிளகாய் தூளையும் மது எடுத்து வந்தார். ஆனால் அங்கிருந்து நிறைய பொருட்கள் திருடு போயின. அனைத்தையுமே திருடியது மது தான் என்று அவர்கள் முடிவு செய்தனர். அரிசியை மது எடுத்துச் சென்ற நாளில் அவரை 30 பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்தது. அவருடைய இடத்துக்குச் சென்று கடுமையாகத் தாக்கி இழுத்து வந்தனர். அப்போது எதையும் உணராத ஒரு நிலையில் அவர் இருந்தார். 

 

ஆற்றுக்குள் அவருடைய தலையை வைத்து அமுக்கினர். இன்னும் பலரும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு அவரை அடித்தனர். அதைச் சிலர் செல்போனில் படம்பிடித்தனர். அங்கிருந்த ஒருவர் பக்கத்தில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு இது குறித்து தகவல் கொடுத்தார். போலீசார் அந்த இடத்துக்கு வந்தனர். அந்த நேரத்தில் மது சுயநினைவு இல்லாமல் தளர்ந்துபோன நிலையில் இருந்தார். அவரை போலீசார் ஜீப்பில் ஏற்றினர். குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தனர். அவரை மருத்துவமனையில் அனுமதிக்க முயன்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று மருத்துவர் தெரிவித்தார். இந்த சம்பவம் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

 

முதலமைச்சர் பினராயி விஜயன் அவருடைய வீட்டுக்கு நேரில் சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். சப்-கலெக்டர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால் ஒரே வாரத்தில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கு ஆமை வேகத்தில் நடத்தப்பட்டது. இதனால் மதுவின் குடும்பத்தினர் நம்பிக்கையிழந்தனர்.