கேரளாவே கொந்தளித்த வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.
சௌமியா என்கிற இளம்பெண் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரம் ஒட்டுமொத்த கேரளாவையே கொந்தளிக்க வைத்தது. குற்றவாளிக்கு விரைவு நீதிமன்றத்தில் மரண தண்டனை வழங்கப்பட்டது. கோவிந்தசாமி என்கிற குற்றவாளிக்கு ஆதரவாக வாதாட மும்பையிலிருந்து ஆளூர் என்கிற ஒரு வழக்கறிஞர் வந்தார். அவர் மிகவும் காஸ்ட்லியான வழக்கறிஞர். வசதியில்லாத கோவிந்தசாமிக்காக ஆஜராக இவர் எப்படி வருகிறார் என்கிற கேள்வி அனைவருக்கும் எழுந்தது.
வேறு யாராவது இந்த குற்றத்தை செய்திருக்கலாம், அந்தப் பெண்ணே தற்கொலை செய்திருக்கலாம் என்கிற ரீதியில் எல்லாம் அவர் கோவிந்தசாமிக்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தில் வாதாடினார். இரண்டு தீவிரமான காயங்கள் ஏற்பட்டதால் தான் சௌமியா உயிரிழந்தார் என்று ஷெர்லி வாதாடினார். ஷெர்லிக்கும் போஸ்ட்மார்ட்டத்தை ஆரம்பித்த உமேஷ் என்பவருக்கும் இடையில் பனிப்போர் இருந்தது. அதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தார் ஆளூர். கோவிந்தசாமி கொலை செய்யும் நோக்கில் அதைச் செய்யவில்லை என்று வாதாடினார் ஆளூர்.
சௌமியாவின் இறப்புக்கு காரணமான காயங்களை ஏற்படுத்தியது கோவிந்தசாமியா இல்லையா என்பது குறித்து நீண்ட வாதங்கள் நடைபெற்றன. நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில் "இதுவரை ஒரு பெண்ணுக்கு துன்பம் ஏற்பட்டால் சுற்றியிருக்கும் ஆண்கள் உதவுவார்கள் என்று நாம் நினைத்திருந்தோம். ஆனால் ஒரு பெண் அலறுவது தங்களுக்கு கேட்டும் தாங்கள் உதவவில்லை என்று வெளிப்படையாகவே சொல்லும் நபர்கள் இருக்கிறார்கள் என்பதை இப்போதுதான் அறிந்தோம். குற்றவாளி கோவிந்தசாமியை விட மோசமானவர்கள் இவர்கள்தான்" என்று குறிப்பிட்டனர்.
கோவிந்தசாமிக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தனர் நீதிபதிகள். ஆளூரின் துணையுடன் கோவிந்தசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தான். சௌமியாவின் தாய் அப்போதைய கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியை சந்தித்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் நடத்திக் கொடுக்கும்படி கோரிக்கை வைத்தார். பாலியல் வன்புணர்வு நடைபெற்றது உறுதியானது. ஆனால் கொலை செய்ததற்கான ஆதாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது மிகவும் அநியாயமான தீர்ப்பு என்று மார்க்கண்டேய கட்ஜு எழுதினார். அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து அதற்கான காரணங்களைக் கேட்டனர்.
அவர் தன்னுடைய வாதங்களை எடுத்து வைத்தார். கோவிந்தசாமியின் தவறான நோக்கத்தை முழுமையாக எடுத்துரைத்தார். அவருடைய வாதத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. சௌமியாவின் தாயார் மீண்டும் ஒரு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார். அதுவும் நிராகரிக்கப்பட்டது. "இது ஒரு நியாயமற்ற தீர்ப்பு. ஒட்டுமொத்த கேரள மக்களுக்கும் அநியாயம் நிகழ்த்தப்பட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது" என்று கூறினார் முதலமைச்சர் பினராயி விஜயன். இதுதொடர்பாக கேரள அரசு ஒரு மனுத் தாக்கல் செய்தது. மீண்டும் பழைய தீர்ப்பே வழங்கப்பட்டது. அவனுக்கு தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது.
குற்றவாளி கோவிந்தசாமி 2007 காலகட்டத்தில் ஒரு கிறிஸ்தவனாக மாறிவிட்டதாகவும், கோவையில் உள்ள 'ஆகாசப் பறவைகள்' என்கிற அமைப்பு தான் இவனைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் அனைத்தையும் எடுத்தது எனவும் வதந்தி பரவியது. சம்பந்தப்பட்ட பாதிரியாரும் அழைத்து விசாரிக்கப்பட்டார். இந்த வழக்குக்கான பணம் எங்கிருந்து வருகிறது என்று ஆளூரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, மும்பையில் உள்ள ஒரு மாஃபியா தான் இதுதொடர்பாக தன்னை அணுகியது என்று அவர் தெரிவித்தார். கோவிந்தசாமியைச் சுற்றிய மர்மங்கள் அப்படியே இருக்கின்றன. அவன் வழக்கிலிருந்து விடுதலையானான். அவன் குறித்த வேறு தகவல் எதுவும் இல்லை.