Skip to main content

தந்தையின் உடலை நடுவீட்டில் வைத்துவிட்டு கிரிக்கெட் ஆட வந்த விராட் கோலி! | வென்றோர் சொல் #39 

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

Virat Kohli

 

நான்கு நாட்கள் நடந்த ரஞ்சி போட்டியில் டெல்லி அணி பெங்களூரு அணியுடன் மோதிக்கொண்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காமல் நின்று கொண்டிருந்த அந்த இளைஞன் மறுநாள் ஆட்டத்தைத் தொடரவேண்டும். அந்தப் பெரும் பொறுப்புடனும் அன்றைய தினத்தில் விளையாடிய அசதியுடனும் வீட்டிற்குச் செல்கிறான் அந்த இளைஞன். இரவு உணவை முடித்துவிட்டு தூங்கிக்கொண்டிருக்கையில் அதிகாலை இரண்டு மணிவாக்கில் மொத்த குடும்பமும் பதறி எழுகிறது. காரணம், அந்த இளைஞனின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு தன்னுடைய கடைசி சுவாசத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்தார். அவசரஅவசரமாக அருகேயிருந்த மருத்துவர்கள் உதவியை நாட, அதிகாலை நேரம் என்பதால் எந்த உதவியும் கிடைக்கவில்லை. பின்பு, ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழக்கிறார். மொத்த குடும்பமும் இடிந்துபோய் அமர்ந்திருந்தது. தன்னைக் கிரிக்கெட் வீரனாக்கி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்ட தந்தையின் மரணம் அந்த இளைஞனை வெகுவாகப் பாதித்திருந்தது. சிறிது நேரம் கழித்து தன்னுடைய அணி பயிற்சியாளருக்கு ஃபோன் செய்து விவரத்தைக் கூறுகிறார். ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்திய அவர், நீ என்ன முடிவெடுத்திருக்கிறாய் என்கிறார். நாளைய போட்டியில் நான் நிச்சயம் களமிறங்குவேன் என்கிறான்.

 

அந்த இளைஞன் உறுதியாக இருந்ததால் பயிற்சியாளரும் சம்மதித்துவிடுகிறார். தந்தையின் சடலம் நடு வீட்டில் கிடக்க, அந்த இளைஞன் மைதானத்தில் உத்வேகத்துடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான். அன்றைய போட்டியில் நடுவரின் கவனக்குறைவால் தவறான முறையில் அந்த இளைஞனுக்கு அவுட் கொடுக்கப்படுகிறது. அந்த வருத்தத்துடன் வெளியேறிய அந்த இளைஞன் சாயங்காலம் சென்று தன்னுடைய தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்கிறான். உறவினர்கள் கூட்டத்தாலும் துக்கத்தாலும் நிரம்பியிருந்தது வீடு. அன்று இரவு பயிற்சியாளரை அழைத்த அந்த இளைஞன், தான் மனவருத்தத்தில் இருப்பதாகக் கூறுகிறான். அவனது துக்கத்தில் பங்கெடுப்பதாகக் கூறி அவனுக்கு ஆறுதல் கூறத்தொடங்கினார் பயிற்சியாளர். அவரை இடைமறித்த அந்த இளைஞன், இன்றைய போட்டியில் தவறான முறையில் தனக்கு அவுட் கொடுக்கப்பட்டதாகவும், அணிக்காக கடைசிவரை களத்தில் நிற்கமுடியாதது தனக்கு வருத்தம் தருவதாகக் கூறுகிறான். அவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியும் வியப்புமடைந்த பயிற்சியாளர் அந்த நொடியே கணித்துவிட்டார், விராட் கோலி எனும் பெயர் கொண்ட அந்த இளைஞன் கிரிக்கெட் உலகில் தொடப்போகும் உச்சம் என்னவென்று...

 

டெல்லியில் 1988ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி பிரேம் கோலி மற்றும் சரோஜ் கோலி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் விராட் கோலி. தந்தை பிரேம் கோலி வழக்கறிஞர். இளம் வயது முதலே கிரிக்கெட்டின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த விராட் கோலி, தன்னுடைய தெருவில் நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். விராட் கோலியின் திறமையை ஆரம்பக்கட்டத்திலேயே அடையாளம் கண்டுவிட்ட பிரேம் கோலி, அது எந்த விதத்திலும் வீணாகிவிடக்கூடாது என்று கருதி கிரிக்கெட் அகாடெமியில் அவரைச் சேர்த்துவிடுகிறார். அதன் பிறகு முறையாகக் கிரிக்கெட் பயிற்சி பெற ஆரம்பித்த விராட் கோலி தன்னுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள ஆரம்பிக்கிறார். 15 வயதிற்குட்பட்ட டெல்லி  அணி, 17 வயதிற்குட்பட்ட டெல்லி அணியில் விளையாடிவந்த விராட் கோலிக்கு 2006ஆம் ஆண்டு முதல்முறையாக ரஞ்சி போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது.

 

Virat Kohli

 

தமிழக ரஞ்சி அணிக்கு எதிராக 2006ஆம் ஆண்டு களமிறங்கிய போட்டியே முதல்தரக் கிரிக்கெட்டில் விராட் கோலியின் அறிமுகப்போட்டியாகும். அந்தத் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக தந்தை மரணமடைகிறார். தந்தையின் மரணத்தையும் பொருட்படுத்தாமல் களமிறங்கிய விராட் கோலி அந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். அதன் பிறகு, 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கிறது. பின்பு, 19 வயதிற்குட்பட்டோர் அணிக்கான கேப்டன் பொறுப்பு, இந்திய அணியில் இடம், இந்திய அணிக்கான கேப்டன் பொறுப்பு என படிப்படியாகத் தன்னை வளர்த்துக்கொண்டுவரும் விராட் கோலி, உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரராக இன்று உயர்ந்து நிற்கிறார்.    

 

"நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து நேரத்தை செலவிடுவது, பொழுதுபோக்குவது என என்னுடைய இளமைக்காலம் மிக அழகாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக எனக்கு 14 வயது இருக்கும்போது அனைத்தும் மாறியது. என்னுடைய சகோதரர் தொழில்தொடங்கப் பணம் தேவைப்பட்டதால் சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டிற்குச் சென்றோம். நல்ல தொடக்கம் கண்ட என்னுடைய அண்ணனின் தொழில் திடீரென வீழ்ச்சியைச் சந்தித்து, பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆன்லைனில் ட்ரேடிங் செய்துவந்த என்னுடைய அப்பாவும் திடீரென நஷ்டத்தைச் சந்தித்தார். அதில் அவர் செய்த சிறிய தவறால் அதுவரை சம்பாதித்து வைத்திருந்த மொத்த பணத்தையும் இழக்கவேண்டியதாகிவிட்டது. நம்பிக்கையானவர்கள் என்று நாங்கள் கருதிய பலர் எங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தனர்.

 

இந்தச் சரிவில் இருந்து மீண்டு வருவது என்னுடைய குடும்பத்திற்குப் பெரும் சவாலாக இருந்தது. இதனால் மிகுந்த மனக்கஷ்டத்திற்கு உள்ளாகியிருந்த என் தந்தையைப் பக்கவாதம் நோய் தாக்கியது. கழிவறை செல்வதற்குக்கூட அவரை ஒருவர் தூக்கிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தச் சமயத்தில்தான் ரஞ்சி ட்ராபி தொடரில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தொடர் நடந்துகொண்டிருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு என் தந்தை மரணமடைந்துவிட்டார். மறுநாள் போட்டியை முடித்துவிட்டுத்தான் என் தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்தேன். என்னுடைய அந்தச் செயலைப் பார்த்து என் குடும்பத்தினர் பலர் அதிர்ச்சியடைந்துவிட்டனர். ஆனால், அதை என் தந்தை ஏற்றுக்கொண்டிருப்பார் என்றுதான் நினைக்கிறேன். என்னை இந்திய அணிக்காக விளையாடும் ஒரு கிரிக்கெட் வீரனாக்கி பார்க்க வேண்டும் என்றுதான் அவர் விரும்பினார். இறுதிச்சடங்கின்போது, இந்திய அணிக்காக நான் நிச்சயம் விளையாடுவேன். எதுவொன்றாலும் அதைத் தடுக்க முடியாது என்று என் சகோதரனிடம் நான் கூறினேன். என் தந்தையின் மரணம் என்னை பொறுப்புள்ளவனாக மாற்றியது".      

 

இன்று நாம் பார்க்கும் விராட் கோலிக்கும் 2015ஆம் ஆண்டிற்கு முந்தைய விராட் கோலிக்கும் இடையே பல வேறுபாடுகள் உண்டு. அவரது ஆட்ட நுணுக்கத்தில் மட்டுமின்றி அவரது உடலமைப்பிலும் இந்த மாற்றங்களைக் காணலாம். இந்திய அணியில் சராசரி வீரனாக முத்திரை பதித்துவந்த விராட் கோலிக்கு, தன்னுடைய ஆட்டத்தில் ஏதோவொன்று குறைவதுபோல உறுத்திக்கொண்டே இருந்தது. தன்னுடைய கிரிக்கெட் கேரியர் முடியும்போது சராசரி இந்திய வீரன் என்ற அடையாளத்துடன் அறியப்படுவதை விரும்பாத விராட் கோலி தன்னுடைய குறைகளை அலச ஆரம்பிக்கிறார். சர்வதேச தரத்திலான வீரனாக வேண்டுமென்றால் சர்வதேச தரத்திலான வீரனுக்கான உடற்தகுதி முதலில் இருக்கவேண்டும் என்ற உண்மை அவருக்குப் புரியவருகிறது. அதன் பிறகு சர்வதேச வீரனுக்கான தரத்துடன் கூடிய உடற்தகுதியை விராட் கோலி நெருங்கநெருங்க அவரது ஆட்டம் மேம்பட ஆரம்பிக்கிறது. விராட் கோலியின் சர்வதேச வீரனுக்கான அந்தஸ்தும் உயர ஆரம்பிக்கிறது.      

 

Virat Kohli

 

இது குறித்து விராட் கோலி ஒருமுறை கூறுகையில், "2012 ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு வீட்டில் கண்ணாடி முன்பு வந்து நின்றேன். சர்வதேச வீரனாக இருக்க வேண்டுமென்றால் உன்னுடைய உடற்தகுதி இப்படி இருக்கக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிகொண்டேன். இந்த உடலை வைத்துக்கொண்டு நீ என்ன செய்யப்போகிறாய் என்று எனக்கு நானே கேள்வியும் கேட்டுக்கொண்டன். மறுநாளில் இருந்து 2 மணிநேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தேன். உணவுப் பழக்கத்தை முறைப்படுத்தினேன். அடுத்த ஏழு மாதத்தில் 8 கிலோவரை உடல் எடையைக் குறைத்தேன். அதற்கான பலன் என்னவென்று மைதானத்தில் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. சாதாரண விராட் கோலியாக இருக்காமல், இவரை அவுட் செய்யாவிட்டால் நாம் தோற்றுவிடுவோம் என்று எதிரணி எண்ணக்கூடிய விராட் கோலியாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதை நோக்கி நான் மாறிக்கொண்டிருக்கிறேன்" என்றார்.

 

அடுத்தது என்ன... இன்னும் இதைச் சிறப்பாகச் செய்வது எப்படி என்பது குறித்தான தேடல்கள் எந்த அளவிற்கு வெற்றியை வீரியப்படுத்தும் என்பதற்கு விராட் கோலியின் வாழ்க்கை உதாரணம்.

 

கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்...

 

அன்று ஜாதிப்பெயரை சொல்லி அழைத்தார்கள்; இன்று ஸ்டைலிஸ்ட் என்கிறார்கள்... இமேஜை மாற்றிய சி.கே.குமரவேல் | வென்றோர் சொல் #38