தனக்குப் பிடிக்காத மனைவியை வித்தியாசமான முறையில் கொன்ற கணவன் குறித்த வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விவரிக்கிறார்
உத்ரா என்கிற கோட்டயத்தைச் சேர்ந்த பெண் 2020 ஆம் ஆண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் என்று கூறினர். பெற்றோருக்கு அதிர்ச்சி. மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று அவர்கள் கூறினர். போஸ்ட்மார்ட்டத்தில் அந்தப் பெண்ணின் வயிற்றில் தூக்க மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நாகப்பாம்பின் விஷம் ஏறி அந்தப் பெண் இறந்ததாகத் தெரிந்தது. அந்தப் பெண்ணின் தந்தை வசதியானவர். தாய் பள்ளி ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். இந்தப் பெண் பிறந்தபோது கற்றல் குறைபாடு இருப்பவராக இருந்தார்.
தங்களுடைய பெண்ணைக் குழந்தை போல் வைத்து பார்த்துக்கொள்ளும் ஒருவருக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று பெற்றோர் முடிவு செய்தனர். சூரஜ் என்கிற பையன் வங்கியில் கிளார்க் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வீட்டில் அவரும் ஒரே பையன். அவருக்கு ஒரு தங்கையும் இருந்தார். அவருடைய தந்தை ஒரு ஆட்டோ டிரைவர். ஏழ்மையான குடும்பம் தான். அவர்கள் சம்பந்தம் பேச வந்தபோது மிகப்பெரிய வரதட்சணை கொடுக்க பெண் வீட்டார் தயாராக இருந்தனர். திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை வீட்டார் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். குழந்தை பிறந்தது.
வரதட்சணையையும் மீறி தொடர்ந்து பணம் கேட்டு பெண் வீட்டாரை அவர்கள் நச்சரித்துக்கொண்டே இருந்தனர். அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் வித்தியாசமான நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தன. ஒருநாள் அவள் வீட்டில் பாம்பைப் பார்த்தாள். பாம்பு அகற்றப்பட்டது. அதன் பிறகு அவளுக்கு காலில் ஏதோ கடித்தது போன்று இருந்தது. கணவரிடம் கூறியபோது அவர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவளுக்கு வலி நிவாரண மாத்திரை கொடுப்பது போல் தூக்க மாத்திரை கொடுத்தார். ஆனாலும் அந்தப் பெண்ணால் வலி தாங்க முடியவில்லை.
அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்தப் பெண்ணைப் பாம்பு கடித்தது தெரிந்தது. அவளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. டிஸ்சார்ஜ் ஆனவுடன் அந்தப் பெண் தன் குழந்தையுடன் தன்னுடைய தாய் வீட்டுக்குச் சென்றாள். ஒருநாள் சூரஜ் அவளைப் பார்க்கச் சென்றபோது அந்தப் பெண்ணை நாகப்பாம்பு கடித்தது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவள் இறந்துவிட்டதாகக் கூறினர். மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால் போலீஸ் விசாரணை தொடங்கியது. நடந்த அனைத்தும் போலீசுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
தாய் வீட்டில் இருக்கும்போது பாம்பு கடித்ததற்கு தான் என்ன செய்ய முடியும் என்று சூரஜ் வாதிட்டான். ஜன்னல் வழியே பாம்பு வந்திருக்கலாம் என்று அவனுடைய தாய் கூறினார். பெண்ணின் வயிற்றில் மாத்திரை இருந்ததால் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றுதான் என்று போலீசார் நினைத்தனர். சூரஜ் ஒரு வருடம் மட்டுமே அந்தப் பெண்ணுடன் நிம்மதியாக வாழ்ந்தான் என்பது விசாரணையில் தெரிந்தது. விஷமுள்ள பாம்புகள் குறித்து கூகுளில் அவன் அதிகம் தேடியது தெரிந்தது. பாம்பு பிடிக்கும் ஒருவரின் மூலம் சூரஜ் பாம்பைப் பெற்றது தெரிந்தது. அந்தப் பெண்ணுக்கு தூக்க மாத்திரைகளைக் கொடுத்து, ஆழ்ந்த மயக்கத்தில் இருக்கும்போது பாம்பை விட்டு கடிக்க வைத்திருக்கிறான் சூரஜ்.