Skip to main content

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்...! சூட்சும உலகம் #3

Published on 30/08/2021 | Edited on 30/08/2021

 

sootchuma ulagam part 3

 

அத்தியாயம் -3

 

கங்காதரன் டெல்லியிருந்து சென்னை வந்து சேர்வதற்குள் ஆபரேசன் தியேட்டருக்குள் கற்பகத்தை அழைத்துச் சென்று விட,  தவிப்புடன் வெளியே நின்றிருந்தாள் வைதேகி. 

" என்னாச்சு..".?  குரல் கேட்டுத் திரும்பிய வைதேகி, "தண்ணி குறைஞ்சுடுச்சாம். அதோடு குழந்தை அசைவில்லைனு வேறு சொல்றாங்க. பயமா இருக்கு! கற்பகம் பொழச்சு வந்தா போதும்."

" எதுக்கு அச்சானியமா பேசுறீங்க..". அவளுக்கு ஒன்னும் ஆகாது என்றவன் மனசுக்குள் குலதெய்வத்திடம் வேண்டுதல் வைத்தான்.

 

அரைமணி நேரத்தில் பெண் சிசுவுடன் வெளியே வந்த நர்ஸ்

 

வைதேகியிடம் குழந்தையைக் கொடுத்தாள். கையில் வாங்கியதும் வைதேகியின் கண்கள் கசிந்தது. கங்காதரனிடம் குழந்தையை நீட்டிய வைதேகி, "மாலா இனி தனித்து நிற்க மாட்டாள். ஆணோ பெண்ணோ... துணைக்கு ஒன்னு இருக்கனும்!" என்று முணுமுணுத்தாள். எதையும் கேட்கும் நிலையில் இல்லாத கங்காதரன், மனைவியைப் பார்க்க வேண்டும் என்ற ஒரே முனைப்பில் இருந்தான். குழந்தையுடன் நர்ஸை பின்தொடர்ந்து சென்றான். 

" சார்... உங்க மிஸஸ் மயக்கமா இருக்காங்க. தெளிஞ்சதும் ரூம்க்கு கொண்டு வருவோம். குழந்தையைக் குளிப்பாட்டனும் ரும்ல வெயிட் பண்ணுங்க." என்று நர்ஸ் சொல்ல, வந்த வழியே திரும்பினான்.  வைதேகியிடம் எந்த ரூம்... என்று கேட்டு, அவள் காட்டிய திசையில் நடந்தான். வைதேகி கதவைத் திறக்க அங்கிருந்த பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தான்.  குழந்தையைக் குளிப்பாட்ட வந்த நர்ஸ்... " என் கூட வாங்கம்மா... குழந்தையை எப்படி குளிக்க வைப்பதுனு நீங்களும் தெரிந்துச்சுங்க என்றழைக்க, உடன் சென்ற வைதேகியை அப்போதுதான் நன்றாகக் கவனித்தான் கங்காதரன். பெண் பார்க்கப் போகும் போது எப்படி இருந்தாளோ... அப்படியே  இருந்தாள். நீண்ட கருமையான கூந்தல்.  எங்கோ... ஒன்றிரண்டு நரை மட்டுமே இருந்தது.  கற்பகத்தை விடக் கொஞ்சம் இளமையாகவே தெரிந்தாள். குழந்தையின் அழுகுரல் அவனை அந்த நினைவிலிருந்து மீட்டது. எதற்கு இந்த வேண்டாத நினைப்பு என்று தன்னைத் தானே கடிந்து கொண்டான்.

 

கற்பகத்தை வீல்சேரில் உட்கார வைத்துத் தள்ளிக் கொண்டு வந்தார்கள். கணவனைப் பார்த்ததும் மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்தாள். கங்காதரன் கைநீட்ட, கணவனின் கையைப் பிடித்தபடி மெதுவாக எழுந்து கட்டிலில் சாய்ந்தவாறு அமர்ந்தாள். அதற்குள் குழந்தையைக் குளிக்க வைத்து, உடை மாற்றி கற்பகத்திடம் கொடுக்க, அது தன் விரல்களை வாயில் வைத்தபடி கற்பகத்தைப் பார்க்க...

" பசிக்குதுனு சொல்றா பாரேன்.... என்ற வைதேகி, இப்போது பிறக்கும் குழந்தைகள் எல்லாம் விவரம்தான் என்றாள். நான் வீட்டுக்குப் போய் சமையல் செய்து கொண்டு வரேன்." என்றாள்.

" வேணாம் கா. இங்கேயே உணவு கொடுப்பாங்க.  மாலாவும் இவரும் ஏதாவது செய்துப்பாங்க. நீங்க என் கூடவே இருங்க.." என்று சொன்ன கற்பகம், " நீங்க போய் மாலாவை அழைச்சுட்டு வாங்களேன்." என்றதும் புறப்பட்டுச் சென்ற கங்காதரனை ரகசியமாய் பார்த்தாள் வைதேகி. என்னை மணக்க வேண்டியவன், என்னை நிராகரித்து  இவளை மணந்தான்.   எத்தனை நாள் அழுதிருக்கிறேன். காலம் என்னை இங்கே இழுத்து வந்திருக்கிறதென்றால்.... ஏதோ காரணம் இருக்க வேண்டும்! இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நான் உருவாக்குவேன் என்ற தீர்மானத்தோடு மனசுக்குள் கங்காதரனோடு  கற்பனையில் வாழத் தொடங்கினாள். 

 

ஆயிற்று! கற்பகம் வீட்டிற்கு வந்து ஒரு வாரமாயிற்று. ஆனால் தன் வேலையைத் தானே செய்து கொள்ள முடியாத அளவிற்குச் சோர்ந்து போயிருந்தாள். அக்கா... அக்கா... என்று வைதேகியின் உதவியை நாடியது மாலாவை எரிச்சலூட்டியது.  ஆனால் அம்மாவை எதுவும் சொல்ல முடியவில்லை.  சில சமயம் தானே சென்று உதவ முயன்ற போது... " நீ போய் படி. மார்க் குறைஞ்சுதுனா அப்பாவிற்கு ஏமாற்றமாய்டும் போ" என்று விரட்டுவாள்.

 

குழந்தையைக் குளிப்பாட்டுவதிலிருந்து கற்பகம் தேவைகளைப் புரிந்து உதவுவதோடு, வீட்டு வேலைகள் அனைத்தையும் ஒன்று விடாமல் செய்தாள். "பெருக்கித் துடைக்க யாரையாவது வேலைக்கு அமர்த்தட்டுமா..." என்று கேட்ட கற்பகத்திடம்... " எதுக்கு குழந்தை இருக்கும் இடம் சுத்தமா இருக்கணும். வர்றவ மேலோட்டமா துடைச்சுட்டுப் போவாள். அதெல்லாம் சரிப்படாது என்று ஒரேயடியாக மறுப்பு சொல்ல, கற்பகத்திற்கும் அது சரியென்றே பட்டது. ஒரு வார விடுமுறையில் இரண்டு முறை வந்து போன கங்காதரன் மூன்றாம் முறை வந்த போது... வைதேகியின் பேச்சிலும் செய்கையிலும் சிறுக- சிறுக ஈர்க்கப்பட்டான். அவனுக்குப் பிடித்த உணவை அறிந்து கொண்டு பார்த்துப் பார்த்துச் சமைத்தாள். மாலா படிப்பில் கவனமாய் இருந்ததில் சாப்பிடும் நேரம் தவிர அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். அடுத்து ஒரு வாரம் அத்தை வீட்டுக்குப் போய் சங்கரியோடு சேர்ந்து படிக்கிறேன் என்று மாலா போன பிறகு, படுகுஷியானாள் வைதேகி. கற்பகம் அறியாதவாறு கங்காதரனை அரைக்கண்ணால் பார்த்துச் சிரித்தாள். அவன் மிச்சம் வைத்துவிட்டுப் போனதை ரகசியமாய் சாப்பிட்டாள். காபியை ருசி பார்த்துக் கொடுத்தாள். பகலில்  சாப்பிட்டு முடித்ததும், கற்பகம் அசந்து தூங்கும் நேரத்தில் கங்காதரனைத் தேடிச் சென்று கால்களைப் பிடித்து விட்டாள். வைதேகியின் அண்மை கங்காதரனைப் படாதபாடு படுத்தியது. ஒரு நாள் துணிந்து இறுக்கமாய் அணைத்த  கங்காதரன், "நீ வேண்டும் எனக்கு..." எனக் காதுகளில் கிசுகிசுப்பாய் பேச,  " ஐயோ... கற்பகம் எழுந்துக்கப் போறாள் விடுங்க என்று தன்னை விடுவித்துக் கொண்டு  வெளியே ஓடி வந்தாள். 

 

இரவு உணவு முடிந்ததும், மருந்துகளோடு பால் அருந்தியதும் அரை மணி நேரத்திற்குள் கற்பகம் அசந்து தூங்கும் நேரத்திற்காகக் காத்திருந்தாள் வைதேகி.  மெதுவாக எழுந்து பூனை போல் சத்தமின்றி நடந்து கங்காதரனின் அறைக்குள் நுழைந்தாள். கண்மூடி சாய்ந்தபடி அமர்ந்திருந்தவனின் தலையை தன் இரு கைகளால் இதமாகப் பிடித்து விட்டவளை, போதும்! என்றபடி தன்மீது சாய்த்துக் கொள்ள,  அவன்  இதழ்களில் உதட்டை ஒற்றி எடுத்தாள். இழுத்தணைத்து இறுக்கிக் கொண்டவனின் வெப்ப மூச்சில் கிறங்கினாள்.  ஒவ்வொரு நாளும் இது தொடர, வைதேகியின் தூண்டுதலில் தொடர்ந்து மூன்று மாதங்கள் விடுமுறை எடுத்தான். மாலாவின் காலேஜ் அட்மிஷனுக்காக விடுப்பில் இருப்பதாக கற்பகத்தை நம்ப வைத்தான். இது ஒன்றையும் அறியாத வெள்ளந்தியாய் இருந்தாள் கற்பகம்.

 

மாலா வைதேகியின் கள்ளத்தனத்தை அறிந்தாள். அப்பாவிடம் பேசுவதைத் தவிர்த்தாள். பெரியம்மாவை ஊருக்கு அனுப்புங்கள். இல்லையென்றால் நான் கல்லூரிக்குப் போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாள். கற்பகத்திற்குப் பெண்ணின் பிடிவாதம் மிகுந்த வேதனையை அளித்தது. வைதேகி இதைப் பற்றி எதையும் கண்டு கொள்ளாமல் வழக்கம் போல் கங்காதரனோடு இணக்கமாய் இருந்தாள். இதில் ஒன்றும் தவறில்லை என்பதை கங்காதரனின் மனதில் பதிய வைத்தாள். வைதேகி கொடுத்த தைரியத்தில் மகுடிக்கு அடங்கும் நாகம் போலானான்.  சிறிதும் குற்ற உணர்வின்றி வைதேகியை மோகித்தான். விடுமுறை முடிந்து பணிக்குப் போன பின்பும் மாதத்தில் நான்கைந்து நாள் வந்து போனான். ஒரு நாள் குழந்தையைக் கொஞ்சுவான் கற்பகத்தை நலம் விசாரிப்பான். அத்துடன் அறைபக்கம் வருவதேயில்லை. 

"உண்மைகள் என்றேனும் வெளிப்படத்தானே செய்யும்!  ஒரு நள்ளிரவில் முழிப்பு வர எழுந்த கற்பகம் வைதேகியைக் காணாமல் வீடெல்லாம் தேடினாள், கடைசியாகக் கணவனின் அறைக்கதவைத் தள்ளியதும் திறந்து கொள்ள, கண்ட காட்சி  அவளை உறைய வைத்தது. அங்கேயே நின்றாள். வாசலில் நின்ற கற்பகத்தைக் கண்டதும், வைதேகி பதட்டமடையவில்லை. ஆடையை சரிசெய்து கொண்டு நிதானமாகவே வந்தாள். பின் தொடர்ந்து வந்த கங்காதரன் தன் மனைவியிடம்...

" கற்பகம்... இதில் யார் மேல் தவறுனு சொல்ல முடியாது. இரண்டு பேருக்கும் தேவை இருந்தது. நடந்து முடிஞ்சுருச்சு. இதைப் பெரிசு படுத்தாதே... விட்டுக் கொடுத்துப் போ. உனக்கு கர்ப்பப்பையில் சின்னதாய் ஒரு கேன்சர் கட்டி இருந்ததால்  கர்ப்பப்பையை எடுத்தாச்சு.  வைதேகியின் உதவி உனக்கு அவசியம் தேவை. எனக்கும்தான். உன்னால் முன்புபோல் தாம்பத்திய சுகத்தைத் தரமுடியாது. அதுவும் ஒரு காரணம்தான்" என்றான்.

" சபாஷ்.... எத்தனை நாள் நடக்குது இந்த துரோகம்...?"

" நாலஞ்சு மாசமாச்சு!  கற்பகம். எனக்கு வேற வழி தெரியலை." என்ற வைதேகியை எரித்து விடுவது போல் பார்த்தாள். உன்னை நான் கேட்கலை. என் புருசனைக் கேட்கிறேன். என் பொண்ணு அப்பவே சொன்னாள். நான்தான் கேட்கலை.  என் புருசன் நல்லவன், அறிவாளி தப்பு பண்ண மாட்டானு நினைச்சேன்.  அந்த நினைப்பில் மண் விழுந்துருச்சே...இரண்டு பேரும் என் கண்முன்னால் நிற்காதீங்க. எங்காவது போய் தொலைங்க."

" அவசரப்பட்டு வார்த்தைகளை உதிர்க்காதே  கற்பகம். உன் வாழ்க்கையைப் பறிக்கனும்னு நான் வரலை."

" வேறெதுக்கு வந்தே... பிளான் பண்ணிதான் வந்திருக்கே. அந்தாளைக் கையோடு அழைச்சுட்டுப் போ... மகராசியா வாழு. எனக்கு எச்சில் தட்டில் சாப்பிடும் பழக்கமில்லை. உன்னை மாதிரி என்னையும் நினைக்காதே." என்ற கற்பகம், படாரென்று தன் அறைக் கதவைச்  சாத்தினாள். கட்டிலில் குப்புறப்படுத்து அழ ஆரம்பித்தாள்.

 

(திகில் தொடரும்...)

 

- இளமதி பத்மா.

 

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்...! சூட்சும உலகம் #2