'சிறையின் மறுபக்கம்' தொடரில் 15 வருட சிறைத் தண்டனை பெற்ற மணிகண்டன் தன்னுடைய சிறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்...
நட்பால் தான் நான் சிறைக்குச் சென்றேன். அறியாத வயதில் பசங்களோடு சேர்ந்து செய்த தவறு அது. கொலை செய்ய வேண்டும் என்கிற நோக்கில் செய்யவில்லை. அந்த சம்பவத்தில் நாங்கள் ஆறு பேர் ஈடுபட்டோம். சில நாட்கள் கழித்து நானாகவே சென்று காவல் நிலையத்தில் ஆஜரானேன். மரண வாக்குமூலம் கிடைத்ததால் எங்களுக்கு 90 நாட்களில் பெயிலும் கிடைக்கவில்லை. என்னுடைய திருமணம் காதல் திருமணம். பெண்ணின் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்தது. இதனால் பெண்ணின் ஊருக்கு பல நாட்கள் நான் செல்லாமலேயே இருந்தேன்.
ஒருநாள் நாங்கள் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த சிலர் எங்களோடு இருந்த ஒருவரைத் தாக்கினர். அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். நண்பர்களோடு சென்ற நானும் அந்தக் கொலையில் ஈடுபட்டேன். அவரை வெட்டிவிட்டு அனைவரும் தப்பினோம். இந்த வழக்கில் சம்பந்தப்படாதவர்களும் பாதிக்கப்பட்டனர். அந்த வழக்கில் சிறை சென்று வந்த பிறகு எந்தத் தவறான காரியங்களிலும் நான் ஈடுபடவில்லை. ஆனால் காவல்துறையினர் அடிக்கடி என்னிடம் வந்து விசாரிப்பார்கள்.
சிறை என்பது கொடுமையான ஒரு இடம்தான். உள்ளே செல்லும்போது அட்மிஷன் அடி என்று ஒன்று இருக்கும். குடும்பத்தை நினைத்து தான் நான் அதிகம் பயந்தேன். நான் சிறை சென்றபோது என்னுடைய பெண் குழந்தை பயங்கரமாக அழுதாள். அது என்னை மிகவும் பாதித்தது. நான்கு வருடங்கள் கழித்து பரோலில் நான் வந்தேன். அப்போதுதான் வாழ்க்கை குறித்த புரிதல் எனக்கு வந்தது. என்னுடைய இரண்டாவது பெண் குழந்தை ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போது நான் சிறை சென்றதால் நான் திரும்பி வரும்போது அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.
நான் சிறையில் இருந்த சமயத்தில் என்னுடைய மனைவி வீட்டு வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார். என்னுடைய குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அளித்தவர் என் மனைவி தான். சிறையில் இருக்கும்போது நமக்கு பிரச்சனையும் வரும். சிலர் நமக்கு ஆறுதலாகவும் இருப்பார்கள்.