சுவாரஸ்யமான ஒரு வழக்கு குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ராஜாராம் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
சென்னையில் ஆற்காடு நவாபின் பங்களா இருக்கிறது. அதற்குள் பத்து வீடுகள் இருக்கின்றன. அவற்றில் நவாபின் வாரிசுகள் வசிக்கின்றனர். நவாபின் வாரிசுகளுக்கு அரசாங்கம் சார்பில் நிலம் ஒதுக்கலாம் என்கிற பழைய உத்தரவு ஒன்றை அறிந்துகொண்ட ஒருவர், தாலுகா அலுவலகம் சென்று தான் தான் நவாபின் வாரிசு என்று கூறி, தவறான முறையில் வாரிசு சான்றிதழ் பெற்றார். உண்மையில் அவர் ரேஸ் கோர்ஸில் குதிரை ஓட்டும் ஒரு ஜாக்கி. அந்த வாரிசு சான்றிதழை வைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுக்க தனக்குச் சொந்தமில்லாத பல இடங்களை அவர் விற்க முயன்றார்.
டிரஸ்ட் ஒன்றுக்கு சொந்தமான இடத்தை ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்க முயன்றபோது அவர் மாட்டிக்கொண்டார். ஆனாலும் அதை அரசாங்க இடம் என்று தவறாக நினைத்துவிட்டதாகக் கூறி சாதுரியமாக தப்பித்தார். இன்னொரு முறையும் அவ்வாறு மாட்டிக்கொண்டதால் ராஜபாளையத்தைச் சேர்ந்தவரை ஊருக்கு அனுப்பினார். ஆயிரம் விளக்கு பகுதியில் இடிந்த நிலையில் இருந்த காவல்துறைக்கு சொந்தமான ஒரு இடத்தைப் பார்த்த அவர் ராஜபாளையத்தைச் சேர்ந்தவருக்கு தகவல் அனுப்பினார். முக்கியமான பகுதியில் இருந்த இடம் என்பதால் அவரும் அதை வாங்க விரும்பினார். 30 லட்ச ரூபாய் அட்வான்ஸ் பெற்றார். அதன் பிறகு அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் அவருடைய வண்டவாளங்கள் அனைத்தும் வெளியே வந்தன. ஒரு மாதத்திற்குப் பிறகு சென்னை வந்த அவரைப் போலீசார் பொறிவைத்துப் பிடித்தனர். அவர் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனையின்போது இவருக்கு அனைத்து விதமான நோய்களும் இருக்கின்றன என்று மருத்துவர் மூலம் தவறான சான்றிதழ் பெற்றார். அதனால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கும் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று சான்றிதழ்களைக் காட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில காலத்துக்குப் பிறகு அவர் பொய்யாகச் சொன்ன அனைத்து நோய்களும் நிஜமாகவே அவருக்கு ஏற்பட்டு அவர் காலமானார்.