தமிழ்நாட்டில் நடந்த கொலை வழக்கு ஒன்று குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ராஜாராம் நம்மிடம் விவரிக்கிறார்.
2000ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கு இது. அப்போது எங்களுடைய போலீஸ் ஸ்டேஷனில் ஒரு கொலைக் குற்றவாளியை ஒப்படைக்க ஒரு வக்கீல் வந்தார். அப்போது நான் ஸ்டேஷனில் இல்லை. அங்கிருந்த எஸ்ஐ ஒருவரிடம் குற்றவாளியை நான் வரும் வரை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுமாறு கூறினேன். அந்தக் குற்றவாளி லாரியில் லோடு மேனாக வேலை செய்து வந்தார். காதல் திருமணம் செய்துகொண்ட மனைவியோடு அவருக்கு எப்போதும் சண்டை சச்சரவாக இருந்திருக்கிறது. அவ்வப்போது அந்த பெண்ணை சின்ன சின்னதாக கொடுமைகளுக்கு உட்படுத்தியிருக்கிறார். பிறகு ஒருநாள் இருவருக்குள்ளும் உருவான சண்டை முற்றி அம்மிக்கல்லை எடுத்து மனைவியின் தலையில் போட்டு கொன்றிருக்கிறார்.
அதன் பிறகு பயத்தில் வக்கீலிடம் சென்றபோது, வக்கீல் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்திருக்கிறார். அவருடைய வீட்டுக்கு நாங்கள் சென்று பார்த்தபோது அவருடைய மனைவி அவர் சொன்னது போல் இறந்து கிடந்தார். சாட்சி இல்லாததால் சாட்சிக்கு உயர் அதிகாரிகளை அழைத்தேன். அவர்களை சாட்சியாக வைத்து எஃப்ஐஆர் பதியப்பட்டது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதன் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்கு நடந்தது.
சென்னையில் ஒருநாள் நீதிபதிகளின் பாதுகாப்பு பணியில் நான் ஈடுபட்டபோது நீதிபதிகள் என்னை அழைத்து அந்த வழக்கில் சாட்சியாக நிற்க வைத்தனர். என்னுடைய தரப்பு விளக்கங்கள் அனைத்தையும் அளித்தேன். கொலையாளி தரப்பில் அவர் தவறு செய்யவில்லை எனக் கூறி எதிர்தரப்பு வாதமும் வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதிகளுக்கு உண்மை தெரிந்தது. குற்றவாளிக்கான ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டது. இதுபோன்ற பல்வேறு குற்றவாளிகளுக்கு நான் தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளேன்.