நண்பர்கள் மூவர் இணைந்து கொள்ளை அடித்து மாட்டிக்கொண்ட சம்பவம் குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் விவரிக்கிறார்
வாழை இலை விற்பவர், ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தவர், வேலையில்லா பட்டதாரி நண்பர்கள் மூவர் ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த போது என்ன வாழ்க்கையில இப்படியே இருக்கோமே, இப்படியே இருந்தால் எப்பத்தான் செட்டில் ஆவது என்று யோசித்திருக்கிறார்கள். அதில் ஒருவன் சொல்லி இருக்கிறான் “பேங்க்கை கொள்ளை அடித்தால் தான் செட்டில் ஆக முடியும்” என்று. இது ஏதோ ஒரு சாதாரணமாக நண்பர்களுக்குள் கிண்டலாக பேசிக் கொள்வதாகத்தானே அனைவரும் நினைப்போம். ஆனால் இந்த நண்பர்கள் மூவரும் இதை சீரியசாகவே செயல்படுத்த முனைந்திருக்கிறார்கள்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள நகைகளை அடகு பிடித்து பணம் கொடுக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் இந்த மூன்று நண்பர்களில் ஒருவனான முருகன் என்பவன் கடைநிலை ஊழியராக சேர்கிறான். நீண்ட நாட்கள் திட்டப்படி ஒரு நாள் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு ஜுஸில் மயக்கமருந்து கொடுத்து விட்டு, மற்றொரு பெண் ஊழியரை கத்தியைக் காட்டி மிரட்டி தனி அறையில் அடைத்து விட்டு அங்கிருந்த 15 கோடி மதிப்பில் உள்ள நகைகளை திருடிக்கொண்டு சென்று விடுகிறார்கள்.
மூவரும் சென்னையில் பல்லாவரத்தில் ஒரு லாட்ஜ் புக் பண்ணி, அங்கேயே தங்கி நகைகளை உருக்க முயற்சித்திருக்கிறார்கள். ஒரு அளவிற்கு மேலே முடியவில்லை. அதனால் மூவரும் தனித்தனியாக பிரிந்து சென்றுவிடலாம் என்று முடிவெடுத்து ஒருவன் மேல்மருவத்தூர் அருகே உள்ள ஒரு ஊரில் உறவினர் வீட்டில் தங்கி இருந்துவிட்டு அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு சென்றிருக்கிறான். மற்றொருவன் விழுப்புரம் அருகே உள்ள மனைவி ஊரில் மண்ணைத் தோண்டி புதைத்து வைத்திருந்திருக்கிறான்.
காவல்துறையின் தீவிர வேட்டையில் மூன்றே நாளில் மூவரும் பிடிபட்டார்கள். அவர்களிடம் திருடப்பட்ட நகையும் மீட்கப்பட்டது. இதை திறம்பட செய்தவர் மறைந்த காவல்துறை அதிகாரி விஜயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினரே கண்டுபிடிக்க முடியாவிட்டால், அதற்கான இன்சூரன்சிற்கு நிறுவனங்கள் ஒதுக்கீடு செய்யும். இந்த நகைகள் பிடிபட்டதால் இன்சூரன்ஸ் தொகை எதுவும் வழங்கவில்லை.