விமானங்களில் நடக்கும் திருட்டு குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்ட நாட்களாக பணிபுரிந்த தன்னுடைய அனுபவங்களை “சொல்ல மறந்த கதை” என்னும் தொடர் வழியாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ராஜ்குமார்.
இன்சூரன்ஸ் எடுப்பதற்கு முன் அந்த கம்பெனியின் பின்புலம் குறித்து மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். தனியார் கம்பெனியாக இருந்தாலும், அரசு கம்பெனியாக இருந்தாலும் பல ஆண்டுகாலமாக வெற்றிகரமாக இயங்கி வரும் இன்சூரன்ஸ் கம்பெனிகள் இருக்கின்றன. இதை வியாபாரமாக மட்டுமே நினைப்பவர்களால் வெற்றி பெற முடிவதில்லை. ஏமாந்த பிறகு அனைவரும் செல்வது அரசிடம் தான். பணத்தை திரும்பக் கொடுக்கும் சக்தி அரசிடம் தான் இருக்கிறது. எனவே அரசாங்கத்தால் நடத்தப்படும் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் முதலீடு செய்வது நல்லது.
என்னுடைய இளமைக் காலத்தில் ஒரு வைர வியாபாரி எங்களிடம் இன்சூரன்ஸ் எடுத்தார். ரொம்ப நல்ல மனிதர் அவர். பாலிசி போடும்போது அவரிடம் நான் நிறைய கேள்வி கேட்பேன். வெளிநாடுகளுக்கு அவர் ஏன் வைரங்களை அனுப்புகிறார் என்று கேட்பேன். தன்னுடைய தாத்தா காலத்துத் தொழில் அது என்பார். ஒருமுறை விமானத்தில் அனுப்பி வைத்த வைரங்களைக் காணவில்லை என்று அவர் கூறினார். அந்த பாலிசிக்கு நான் தான் கையெழுத்துப் போட்டேன் என்பதால் எனக்கும் பதற்றமானது. நாங்கள் அனுப்பிய பெட்டி அப்படியே இருந்தது, ஆனால் அதற்குள் இருந்த பொருளைக் காணவில்லை. வேறு பொருட்கள் உள்ளே வைக்கப்பட்டிருந்தன.
இதற்கான புலனாய்வில் நாங்கள் இறங்கினோம். சாதாரண பொருட்களையும் அனுப்பிப் பார்த்தோம். அவை சரியாகச் சென்று சேர்ந்தன. விமான நிலைய அதிகாரிகளை நாங்கள் தொடர்புகொண்டு இதில் எங்களுக்கு உதவுமாறு கேட்டோம். இந்த சம்பவங்கள் நடைபெறும் நேரங்களில் ஒரு குறிப்பிட்ட தொழிலாளி அங்கு வருவது எங்களுக்குத் தெரிந்தது. ஒவ்வொரு முறையும் பொருளை மாற்றுபவர் அவர் தான் என்பது தெரிந்தது. அவரைப் பிடித்து அவரிடம் இருந்த அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. என்னுடைய இளமைக் கால காப்பீடு அனுபவத்தில் மறக்க முடியாத சம்பவம் இது.
அந்த வைர வியாபாரியின் மூலம் அதன் பிறகு பலர் நம்முடைய கஸ்டமர்களாக மாறினர். கடைகளுக்கு மட்டுமல்லாமல் தனிப்பட்ட நபர்களுக்கும் நாம் இன்சூரன்ஸ் வழங்குகிறோம். இன்சூரன்ஸ் கம்பெனிகளை ஏமாற்றுவது சாதாரண விஷயமல்ல. ஒரு இழப்பை ஈடுசெய்வதற்கு முன்பு, ஒருவர் உண்மையிலேயே இழப்பை சந்தித்திருக்கிறாரா என்பதை நாங்கள் தீவிரமாக ஆய்வு செய்வோம். இன்று எல்ஐசியின் பணம் நாட்டுக்கான வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.