Skip to main content

ஏமாற்றப்பட்ட அம்மா; தூக்கம் இழந்த மகன் - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை:74

Published on 30/12/2024 | Edited on 30/12/2024
parenting counselor asha bhagyaraj advice 74

குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி நக்கீரன் 360 சேனலில் தொடர்ச்சியாக பேசி வருகிறார் குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ். அந்த வகையில் தான் சந்தித்த வழக்கு பற்றி இன்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்

ஒரு அம்மா தனது மகன் சரிவரக் கல்லூரிக்குச் செல்வதில்லை என மகனை கவுன்சிலிங் அழைத்து வந்தார். அந்த பையனிடம் பேசியபோது, அவர் 3ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரத்தில் அப்பாவும் அம்மாவும் சண்டையிட்டு பிரிந்துள்ளனர். பின்பு அம்மாவும் மகனும் தனியாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். பெற்றோர்களின் விவாகரத்து நேரத்தில் சின்னப் பையன் என்று கூடப் பார்க்காமல் அப்பாவின் உறவினர்கள், அம்மாவைப் பற்றி நீதிமன்றத்தில் தவறாகப் பேசச்சொல்லி பையனை அடித்திருக்கின்றனர். இப்படிப்பட்ட வலிகளிலிருந்து மீண்டு வந்த அந்த பையன் அம்மாவுடன் தன்னுடைய கெரியரை நோக்கி ஓட ஆரம்பித்திருக்கிறார்.

மகன் 9ஆம் வகுப்பு படிக்கும்போது அம்மா தனக்கு இருக்கும் இரண்டாவது திருமண ஆசையை மகனிடம் கூறியிருக்கிறார். இது குறித்து இரண்டு பேரும் தீவிரமாக ஆலோசித்து நல்ல முடிவுக்கு வந்துள்ளனர். அம்மா திருமணம் செய்துகொள்ளப்போவதாக சொன்ன அந்த நபர் ஏற்கனவே தனக்குத் திருமணமாகி விவாகரத்தானதாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். இருப்பினும் அந்த நபரை குடும்பத்தில் ஏற்றுக்கொண்டு அப்பா என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவருடன் பையன் பழகி இருந்திருக்கிறார்.

நன்றாகப் பழகி வந்த அந்த நபர் திருமண பேச்சு எடுக்கும்போதெல்லாம் காலம் தாழ்த்தியிருக்கிறார். இது மீண்டும் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே அந்த பையன், தன் அம்மாவைத் திருமணம் செய்யப்போவதாக சொன்னவருக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்பதும் தன் அம்மா மீண்டும் ஏமாற்றப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது. இந்த விஷயம் அம்மாவுக்கு தெரிய அவரும் தன் மகன்தான் முக்கியம் என்ற முடிவை எடுத்துள்ளார். இருப்பினும் குடும்பத்தில் ஏற்பட்ட ஓயாத சண்டைகள், அப்பா இல்லாத ஏக்கம், அம்மாவின் ஏமாற்றம் இவை அனைத்தும் பையனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி பல நாட்கள் தூக்கம் இல்லாமல் கல்லூரி செல்லாமல் இருந்தது எனக்குத் தெரிந்தது.

தற்போது அந்த பையனுக்கு சரியான கவுன்சிலிங் கொடுத்து இப்போது மீண்டும் கல்லூரி சென்றுள்ளார். ஆனால்,  தூக்கம் மட்டும் இன்னும் சரியாக அவருக்கு வரவில்லை. அதற்காகத் தொடர்ந்து என்னிடம் கவுன்சிலிங் பெற்று வருகிறார். முதல் திருமணம் டாக்ஸிக்கானதாக இருந்து இரண்டாவது திருமணம் செய்ய இருக்கும் பெற்றோர்கள், தங்கள் பாட்னரை தேர்வு செய்வதில் சரியாக இருக்க வேண்டும். தவறாகத் தேர்வு செய்வது உங்களை மட்டுமல்ல குழந்தைகளையும் பாதிக்கும் என்றார்.