அம்மாவை இழந்து தவித்த மகளை வளர்க்க தந்தைக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
புற்றுநோய் காரணமாக மனைவி மறைந்ததை நினைத்து வேதனையுடன் ஒரு நபர் என்னிடம் வந்து, தன் மனைவியை காதலித்ததையும் தனது மகளுடன் குடும்பமாக சந்தோஷமாக இருந்ததையும் தெரிவித்து அழுதார். அதோடு அவரின் மகளும் வீட்டில் அம்மா புகைப்படத்தை பார்த்துக்கொண்டு கஷ்டப்படுவதையும், எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பதையும் கூறினார். மேலும், தன்னால் அந்த இழப்பிலிருந்து ஓரளவிற்கு வரமுடியும். ஆனால், மகளுக்கு எப்படி ஆறுதல் சொல்லுவது என்று தெரியவில்லையென்று புலம்பினார். அதன் பிறகு அவர் மகளை அழைத்து வரச் சொன்னேன்.
அந்த குழந்தையிடம் பேசியபோது, சுற்றி இருப்பவர்கள் மற்றும் உறவினர்கள் ஆறுதல் என்ற பெயரில் அம்மா மேலிருந்து பார்துக்கொண்டிருக்கிறார்... உன்னுடன்தான் இருக்கிறார்... என்று கூறியிருக்கின்றனர். சிலர், அந்த குழந்தையின் அம்மாதான் அவரது உடல்நிலையை சரிவர பார்த்துக்கொள்ளவில்லை என்று கருத்து தெரிவித்திருக்கின்றனர். இதுபோல் வரும் ஆறுதல்களாலும், கருத்துகளாலும் அந்த குழந்தை மிகவும் வேதனைபட்டிருக்கிறது. அதனால் அந்த தந்தையும் அவரது மகளும் தங்கள் தங்கியிருக்கும் வீட்டை விட்டு வேறு இடத்திற்கு சென்று விடலாம் என்று நினைத்திருக்கின்றனர்.
பின்பு நான் அந்த குழந்தையின் உணர்வை புரிந்துகொண்டு தனியாக விட்டுவிட்டு அந்த தந்தையிடம், நீங்கள் முதலில் மன தைரியத்துடன் இருந்தால்தான் குழந்தையை கவனித்துகொள்ள முடியும். அதே போல் உங்கள் குழந்தையிடம் அம்மாவை பற்றிய நல்ல நினைவுகளை பகிருங்கள். அம்மா என்றால் மறக்க முடியாதுதான். நீங்கள் ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்த பல நினைவுகளை நியாபகப்படுத்தி பேசுங்கள். சில நேரம் குழந்தை அம்மாவை நினைத்து அழும் போது தலை சாய்க்க தோல் கொடுங்கள். ஒன்றாக இருவரும் சுற்றுலா செல்லுங்கள். முடிந்தளவிற்கு மனைவியின் பெயரைச் சொல்லி இல்லாதவர்களுக்கு உதவுங்கள். இதுபோல பல வழிகளில் ஓரளவிற்கு உங்கள் மகளையும் ஆறுதலடைய செய்ய முடியும் என்றேன்.
அதே போல் அவர் மகளை அழைத்து பேசும்போது, என்ன சொன்னாலும் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு சரி சரி என்று அழுதுகொண்டே இருந்தாள். நானும் அதற்கு மேல் குழந்தையிடம் எந்த பதிலையும் எதிர்பார்க்க முடியாது என்று புரிந்துகொண்டேன். அதன் பின்பு அந்த குழந்தையிடம் உனக்கு அழ தோன்றினால் அழுதுவிடு, ஆனால் அடுத்தது என்ன என்ற சிந்தனையுடன் படிப்பில் கவனம் செலுத்து. அம்மாவுடன் பேச நினைப்பதை தனி நோட் போட்டு எழுது. முடிந்தால் அம்மா பெயரில் அப்பா செய்யும்போகும் நல்ல காரியங்களுக்கு உதவு என்று பல அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்தேன். எதற்காக அழ சொன்னேனென்றால் அந்த உணர்வை அப்படித்தான் வெளிப்படுத்த முடியும் இல்லையென்றால் அந்த உணர்வு கோபமாக மாறி மற்ற விஷயங்களில் வெளிப்படும். குறிப்பாக அந்த குழந்தை படிப்பு பாதிக்கப்பட்டுவிடக்கூடாது. நான் சொன்னதை செய்த பின்பு அந்த குழந்தை இப்போது ஓரவிற்கு வேதனையிலிருந்து தேறி வருகிறாள். ஆனால் முழுவதுமாக அந்த இழப்பிலிருந்து மீண்டு வர அந்த குழந்தையைத் தொடர்ந்து கவுன்சிலிங் வரவழைத்து பேசி வருகிறேன் என்றார்.