குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் கொடுக்கப்படும் கவுன்சிலிங் பற்றி நம்மிடையே குழந்தை வளர்ப்பு ஆலோசனை சிறப்பு நிபுணர் ஆஷா பாக்யராஜ் பகிர்ந்து கொள்கிறார்.
அம்மா இல்லத்தரசியாகவும், அப்பா மாதாந்திர சம்பள வேலைக்கு போகிற குடும்பப் பிண்ணனியில் இருக்கிற ஒரு குழந்தைக்கு திடீரென முரட்டுத்தனமான பழக்கவழக்கங்கள் வந்து விடுகிறது. அதாவது கதவை சாத்திக் கொண்டு அறையில் தனித்து இருத்தல், எது கேட்டாலும் பதில் சொல்லாமல் அமைதியாக இருப்பது, இல்லையென்றால் சத்தமாக கத்துவது போன்ற சிக்கலுக்குள் உள்ளாகிறாள். இதைக் கவனித்த பெற்றோர் குறிப்பாக அம்மா என்னைப் பார்க்க வந்தார்.
அவருடன் பேசியதன் வழியாக தெரிந்து கொண்டது, அவர் மிகவும் கண்டிப்பானவராகவும், அப்பா குழந்தைக்கு எல்லா சுதந்திரமும் கொடுப்பவராகவும், கண்டிப்பு இல்லாதவராகவும் இருந்திருக்கிறார். அந்த அம்மாவின் கண்டிப்பு என்பது குழந்தையின் காலை முதல் இரவு வரை அவர் திட்டமிட்டபடியான விசயங்களைத் தான் செய்ய வேண்டும் என்று இருந்திருக்கிறார். குழந்தையின் ஆசைக்கோ, முடிவுக்கோ எதையும் விடுவதில்லை என்றார்.
இதையெல்லாம் கேட்ட பிறகு அவரிடம் முதலில் நான் கேட்டது “நீங்க செய்வது சரி என்று உங்களுக்கே தோன்றுகிறதா”? என்றேன். அதற்கு அவரோ சிறுவயதில் நான் எல்லோராலும் நிறையா கிண்டலடிக்கப்படுவேன், அத்தோடு நீண்ட நாட்களான பிறகு தான் பருவம் அடைந்தேன். அதனால் தான் என் மகளுக்கு அப்படியான எந்த சிக்கலும் வந்து விடக்கூடாது என்று ஆரம்பத்திலிருந்தே சரி செய்கிறேன் என்றார்.
தனக்கு நடந்தது தன் மகளுக்கு நடக்கக் கூடாது என்று அம்மாவின் ஆதங்கம் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முறை தான் தவறானது என்பதை அவருக்கு உணர்த்தினேன். பிறகு உங்களுடைய நல்ல குணாதிசயங்களை வகைப்படுத்தி எழுதுங்கள் என்றேன். பத்து பாயிண்ட் எழுதி என்னிடம் இவ்வளவு பாசிட்டிவ்வான விசயங்கள் இருக்கிறதா என்று அவரே வியந்தார்.
பிறகு, குழந்தையிடம் பேசிய போது எடுத்த உடனேயே அம்மா வேண்டாம் என்றாள், பிறகு குழந்தையிடம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பேசியதிலிருந்து சின்ன சின்ன விசயங்களுக்கு கூட தன்னுடைய ஆசையை நிறைவேற்றாமல் எல்லாமே அம்மாவின் ஆசை தான் நிறைவேறி இருக்கிறது என்பது புரிய வந்தது. அம்மா தன்னை மாற்றிக் கொள்வதாக சொல்லி இருக்கிறார். அவங்க தன்னை மாற்றிக் கொள்ள கொஞ்சம் நாள் எடுக்கும், காத்திருக்கவும் என்றதும், குழந்தை புரிந்து கொண்டது. இன்னும் கவுன்சிலிங் போய்க்கொண்டு தான் இருக்கிறது.