மகாராஷ்டிரா மாநிலம் புனே மாநகரில் உள்ளது தத்தாவாடி காவல்நிலையம். பிஸியான காவல்நிலையம். இந்த காவல்நிலையத்துக்கு கொலை, கட்டப்பஞ்சாயத்து, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி புகார்கள் தான் அதிகமாக வரும்.
சமீப மாதங்களாக தற்கொலை புகார்கள் அதிகம் வரத் துவங்கின. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்தபோது, பணம் கேட்டு மிரட்டியதே பெரும்பான்மையான வழக்குகளில் சொல்லப்பட்டது. எதற்காக பணம் கேட்டு மிரட்டினார்கள் என்ற போலீஸின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பலரும் மௌனமாகி விடுகின்றனர்.
பல வழக்குகளில் வயிற்று வலி, சரியாக படிக்கவில்லை எனத் திட்டியதால் தற்கொலை எனச் சொல்லி வழக்கு அப்படியே முடித்து வைக்கப்பட்டது. போலீஸாருக்கு இதில் சில சந்தேகங்கள் இருந்து வந்தன. புகார் இல்லாமல் சந்தேகங்களை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது? ஆனால், எல்லா வழக்குகளும் அப்படியே முடிந்து விடுவதில்லை. ஒரு புகாரும் சில அதிகாரிகளும் இருட்டில் உள்ள குற்றவாளிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து விடுகின்றனர்.
தத்தாவாடி காவல்நிலையத்துக்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவன் அந்த இளைஞன். அவனுக்கு ஒரு அண்ணன் உண்டு. ஐடி கம்பெனியில் பணியாற்றுகிறார். அவனது அப்பா சாதாரண வியாபாரி. அம்மா குடும்பத் தலைவி. பெரிய மகனின் சம்பாத்தியத்தால் அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிவந்தனர். தம்பி கார்வேர் கல்லூரியில் பி.காம் படித்து வந்தான். 19 வயதுக்கான குறும்புகள், சேட்டைகள் அவனிடமிருந்தன. எப்போதும் மொபைல் ஃபோனிலேயே குடியிருந்து வந்தான்.
அந்த இளைஞனின் அண்ணனுக்கு 2022 செப்டம்பர் 28 ஆம் தேதி இன்ஸ்டாகிராம் கணக்கு சாட் வழியாக 'ஹலோ' என்று மெசேஜ் வந்தது. அது ஒரு பெண்ணின் ஐடியில் இருந்து வந்திருந்தது. அடுத்ததாக சேட் பாக்ஸ்க்கு ஒரு புகைப்படம் வந்தது. அந்த புகைப்படத்தில் அவரது ஆசை தம்பி நிர்வாணமாக இருப்பதாக இருந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சியாகினார். தங்கள் வீட்டு பெட்ரூமிற்கு வந்து, இந்த போட்டோவை யார் எடுத்திருப்பார்கள் என்று யோசித்துக்கொண்டு இருந்தபோது, தம்பியின் கேர்ள்ஃப்ரண்டிடம் இருந்து கால் வந்தது.
அவர் யோசனையோடு அட்டன்ட் செய்தபோது, ‘உங்க தம்பி என் அண்ணனுக்கு ஃபோன் செய்து என்னோட நிர்வாண வீடியோ இருக்கு, அதை வெளியிடக்கூடாதுன்னா பணம் தாங்கன்னு கேட்டிருக்கான். அவரும் 4500 ரூபாய் தந்திருக்கார். அவன் வேறு ஏதோ நம்பர்ல இருந்து பேசி இருக்கான். நான் ஃபோன் செய்தால் எடுக்கமாட்டேன்றான். திரும்பவும் என் அண்ணன்கிட்ட 10 ஆயிரம் கேட்டு இருக்கான்’ என்றுள்ளார். என் தம்பியா? அப்படி செய்திருக்கமாட்டான். நான் அவனை விசாரிக்கறேன் என்றுள்ளார். தனது தம்பிக்கு ஃபோன் செய்தபோது அவன் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் ஃபோன் செய்தும் அவன் எடுக்கவில்லை.
இதில் சந்தேகமடைந்து ஆபிஸில் பர்மிஷன் வாங்கிக்கொண்டு தனது காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். அவர் வரும்போதே அடுக்குமாடி குடியிருப்பின் செக்யூரிட்டி ஃபோன் செய்துகொண்டே இருந்தார். வீட்டுக்குதானே போறோம் என அதனை அட்டன்ட் செய்யவில்லை. பார்க்கிங் பகுதிக்கு வந்தபோது போலீஸ் ஜீப் நின்றிருந்தது. காரை நிறுத்திவிட்டு கூட்டத்தை விலக்கிக்கொண்டு போய் பார்த்தபோது அவரது தம்பி ரத்த வெள்ளத்தில் கிடந்தான். 10வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டிருந்தான்.
தத்தாவாடி காவல் நிலைய மூத்த காவல் ஆய்வாளர் அபய் மஹாஜன் தலைமையிலான டீம் ஸ்பாட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ஏதாவது கடிதம் எழுதியுள்ளானா? மொபைலில் ஏதாவது வாய்ஸ் மெசேஜ் இருக்கிறதா? எனப் பார்த்தனர், எதுவுமில்லை. தற்கொலை செய்துகொண்ட இளைஞனின் அண்ணனிடம் போலீஸார் கேட்டபோது, தனக்கு வந்த மெசேஜ், போட்டோ குறித்த தகவல்களைக் கூறி அதனைப் புகாராகவும் தந்தார். போலீஸார் அலார்ட்டாகினர். உடனே சைபர் செல் அதிகாரிகளுடன் இணைந்து இறந்தவனின் செல்லை ஆய்வு செய்தனர். வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராமில் வந்திருந்து அழிக்கப்பட்ட மெசேஜ்கள், வீடியோக்கள், போட்டோக்கள் அனைத்தையும் ரெக்கவரி செய்யத் துவங்கினர். அதனை வைத்து விசாரணையை நடத்தத் துவங்கினர்.
செப்டம்பர் 30 ஆம் தேதி, தொழில் பயிற்சி கல்லூரியில் (ஐடிஐ) படித்து வந்த 22 வயது மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தத்தாவாடி காவல்நிலையத்துக்கு ஒரு புகார் வந்தது. அதில், ‘தங்களது மகனின் வாட்ஸ்ஆப் நம்பருக்கு அவனும் அவனது தோழியும் பெட்ரூமில் இருந்து பேசிக்கொண்ட ஆடியோ, வீடியோ காட்சிகளை யாரோ அனுப்பியுள்ளார்கள். இதை வெளியே யாருக்கும் அனுப்பக் கூடாதென்றால் பணம் வேண்டும் எனக் கேட்டு மிரட்டியுள்ளார்கள். அதற்கு தன்னிடம் பணமில்லை. நீங்கள் கேட்கும் 50 ஆயிரம் பணத்துக்கு நான் எங்கே போவது எனக் கேட்டுள்ளான்.
நாளைக்குள் பணம் தரவில்லையென்றால் இதனை சோசியல் மீடியாவில் ரிலீஸ் செய்துவிடுவேன் என தெரியாத நம்பரில் இருந்து வாட்ஸ்ஆப் காலில் மிரட்டல் வந்துள்ளது. பணம் தரவில்லையென்றதும் வாட்ஸ்ஆப் நம்பரில் இருந்த உறவினர்கள், அவனது நண்பர்கள் என அவனது கான்டாக்ட் லிஸ்ட்டில் இருந்தவர்களுக்கு போட்டோக்கள், வீடியோக்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதைப் பார்த்துவிட்டு பலரும் ஃபோன் செய்ததால் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டான். அவனை மிரட்டியது யார் எனத் தெரிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனப் புகார் தந்தனர்.
இதனால் இந்த வழக்குகள் மகாராஷ்டிரா மாநில சைபர் க்ரைம் அன்ட் சைபர் செக்யூரிட்டி பிரிவுக்கு மாற்றப்பட்டது. புனே மாநகர காவல்துறை ஆணையர் அமிதாப் குப்தா தலைமையில் சிறப்பு விசாரணை டீம் விசாரிக்கத் துவங்கியது. அதில் சைபர் க்ரைம் அன்ட் சைபர் செக்யூரிட்டி இன்ஸ்பெக்டர் மீனல் பட்டீல் இருந்தார். இறந்த இரண்டு இளைஞர்களிடமும் வாட்ஸ்ஆப் வழியாக மிரட்டியுள்ளார்கள் என்றதால் கால்ஸ் எதுவும் ஃபோனில் ரெக்கார்ட் ஆகவில்லை.
கால்ஸ் வந்த எண்களை மீண்டும் தொடர்புகொண்ட போது அது சுவிட்ச் ஆப். இறந்தவர்களிடம் பேசிய நம்பர், புகைப்படங்கள் அனுப்பிய நம்பர் இரண்டும் வெவ்வேறாக இருந்தன. அந்த நம்பர்கள் சில நாட்களுக்கு முன்புதான் ஆக்டிவேட் செய்யப்பட்டிருந்தன. சிலரிடம் மட்டும் பேசிவிட்டு அதன்பின் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இருந்தும் அந்த நம்பர்களை ட்ரேஸ் செய்தால் நம்பர் வாங்க தரப்பட்ட ஆவணங்கள் அப்பாவிகளுடையது எனத் தெரியவந்தது.
மிரட்டியவர்கள் ஜீ-பே, பேடிஎம் ஐடி அனுப்பி அதில் பணம் அனுப்பச் சொல்லி மெசேஜ் செய்திருந்தனர். இறந்த இளைஞர்களில் ஒருவர் 4500 ரூபாய் பணம் ஜீ-பே வழியாக பணம் அனுப்பியிருந்தார். அந்த இளைஞனின் பேங்க் ஸ்டேட்மெண்ட் வாங்கி பணம் சென்றது எந்த வங்கிக் கணக்குக்கு எனக் கண்டறிந்தனர்.
அந்த முகவரிக்கு போலீஸ் சென்றபோது, அவன் மும்பையில் ஒரு புரோக்கர். வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டவன். அவனை விசாரித்தபோது, மும்பைக்குள் நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளார்கள். இவர்கள் யாரும் மகாராஷ்டிரா காரர்கள் கிடையாது. அவர்களைப் பார்த்தால் சாதாரணமானவர்களாக இருக்கும். இவர்கள்தான் செக்ஸ்டார்ஷன் வழியாக சபல பார்ட்டிகளுக்கு வலை வீசி பணம் பறிக்கிறார்கள் என்றான்.
செக்ஸ்டார்ஷன் என்றால் என்ன? அதை செய்வது யார்?
வேட்டை தொடரும்…