மாயப் புறா - முந்தைய பகுதிகள்
ரமா பேசிய விஷயங்களை கேட்டு அசோக் திகைத்து நின்றான். அவர்கள் நோக்கம் திட்டம் என்னவென்று அசோக்கிற்கு புரியவில்லை. இருந்தாலும் ஒரு உயரிய பாதையை நோக்கியே அவைகள் செல்கின்றன என்பதை மட்டும் உணர்ந்தான். சிறிது நேரத்திற்கு மேல் அவர்களால் நடக்க முடியவில்லை. மனிதர்களின் மாபெரும் பிரச்சனையே என்ன தெரியுமா, அவர்களின் மனம் செல்லும் வேகத்திற்கு உடல் செல்வதில்லை. ரமாவின் நிலையும் இதுதான் உடல் ஓய்வை கெஞ்சியது. மனம் சாதிக்க விஞ்சியது. அதனால் திரும்ப வீட்டிற்கு செல்லலாம் என்று கூறிவிட்டு வீட்டை நோக்கி நடந்தார்கள்.
வீட்டிற்குள் நுழையும்போதே ஒரு மணி நேரத்தில் வீடு தலைகீழாக மாறி இருந்தது. வாசலிலேயே அழகிய கோலம் வரவேற்றது. உள்ளே நுழையும் போதே பில்டர்காபி வாசனையை மூக்கு குத்தகை எடுத்தது. ரமாவின் படுக்கை சுருட்டப்பட்டு அசோக்கின் அறையில் வைக்கப்பட்டு இருந்தது. தனம்மா பாட்டியின் வெற்றிலை இடிக்கும் ஓசை பாரதியின் சின்னஞ்சிறு கிளியே பாடலை ஸ்ரீதேவி பாடிய நினைவை ஏற்படுத்தியது. வீட்டில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் ஏன் அந்த வீட்டில் உள்ள எறும்பு கூட சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. இரண்டு ஜீவன்களைத் தவிர புவனாவும் நாகம்மாவும் இன்னும் திருப்பள்ளி எழுச்சி முடிக்கவில்லை இவை அனைத்தையும் ஒரே பார்வையில் படம் பிடித்தார் ரமா.
உள்ளே நுழைந்து அங்கிருந்த ஈஸிசேரில் லேசாக சாய்ந்து கண்ணை மூடினார் ரமா. "அம்மா.. அம்மா" என்று அழைக்கும் குரல் கேட்டு கண் திறந்தாள். புன்னகை முகத்துடன் ஒரு டம்ளரை நீட்டினாள் சங்கவி. அவளை பார்க்கும்போது இந்த புன்னகை தான் எத்தனை ரணங்களுக்கு மருந்தாகிறது என்பதை நினைத்துப் பார்த்தாள்.
"ஏன் சங்கவி நான் காபி டீ சாப்பிட மாட்டேன் என்பது உனக்குத் தெரியாதா? என்று கேட்டாள். நம்ம மனசு எப்போதும் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்முடைய விருப்பு வெறுப்புகளை புரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்குமே தவிர பிறரை எந்த அளவு புரிந்து வைத்துள்ளோம் என்பதை நினைக்காது.
"தெரியும் மா அதை கொண்டு வரலை ,இது வேற மா என்றாள்" "என்னது ..?"என்று கேட்டுக் கொண்டே டம்ளரை வாங்கி பார்த்தாள் பச்சை நிறத்தில் ஒரு திரவம் இருந்தது.
"இது பட்டிப் பூ மா, சுடுகாட்டுப் பூ என்றும் சொல்வார்கள். ஒரு பத்து பூவை எடுத்து கொதிக்க வைத்து குடித்தால்..." என்று சங்கவி முடிப்பதற்குள் "கேன்சர் குணமாகுமா?" என்று ரமா முடித்தாள். "இல்லைமா நோயின் வீரியம் குறையும்" என்று சொன்னாள் சங்கவி. அன்புடன் கொடுத்ததை வாங்கி நன்றியுடன் குடித்தார் ரமா.
வயல் வெளியில் இருந்து வந்ததும் இருந்த பழைய சோறு சாப்பிட்டு விட்டு அப்பாவிடம் ஏதோ பேசினான் அசோக். பிறகு அப்பாவும் அசோக்கும் பக்கத்தில் காலியாக இருந்த வைக்கோல் போர் போட்டு இருக்கும் இடத்தை சுற்றி பார்த்தனர். பண்ணையில் வேலை செய்யும் ஆட்களை கூப்பிட்டு அந்த வைக்கோல் போரை தோட்டத்தின் பின்பக்கம் போட்டனர். சிறிது நேரத்தில் எங்கோ கிளம்பி சென்றான் அசோக். அவன் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் செங்கல் மணல் எல்லாம் வண்டியில் வந்து இறங்கியது.
வீட்டின் பக்கத்தில் இருந்த காலி இடத்தை சுத்தம் பண்ணிவிட்டு கடகடவென அங்கே ஒரு சிறிய அறை கட்டப்பட்டது. தூங்கி எழுந்து வந்து வெளியே பார்த்த மணி தங்கத்திடம் சென்று "என்னம்மா நடக்குது பக்கத்தில் ஏன் கட்றாங்க" என்று கேட்டான் "என்னன்னு தெரியல டா அசோக் தான் அப்பாகிட்ட பக்கத்தில் கட்டிக்க போறேன் -ன்னு கேட்டான் அப்பாவும் சரி என்று சொல்லிட்டார் டா" என்று தனக்கு தெரிந்ததை ஒப்பித்தாள் தங்கம்.
"தனிக்குடித்தனம் போகப் போகிறானா?" என்று புரியாமல் கேட்டான் அசோக். "அதான் எனக்கும் தெரியலை. தனியாக போவதாக இருந்தால் எப்பவோ போயிருப்பான்" என்று குழம்பினாள் தங்கம்.
"அது சரி அவன்கிட்ட ஏதும்மா பணம்.மல்லிகாவிற்கே நிறைய செய்துவிட்டான்" என்று அக்கறையுடன் கேட்டான் மணி. "அசோக் அந்த சங்கவி சென்னை போய் வந்ததில் இருந்து ஒரு மார்க்கமா தான் இருக்கா. என்னவோ உலகத்தையே சுற்றி வந்த மாதிரி நடந்துகறா" என்று அங்கலாய்த்தாள் தங்கம்.
இரவுதான் சென்னையில் இருந்து வந்தனர். மறுநாள் காலையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது ஒரு இரவுக்குள் செயல்களில் மாற்றத்தை கண்டு பிடித்து விட முடியுமா? அதான் பெண்களின் சாமர்த்தியம் ஐந்து நிமிட பேச்சு போதும் ஒருவரின் குணத்தை கண்டுபிடிக்க. என்ன அவர்கள் அறிந்ததில் எத்தனை சதவீதம் சரியாக இருக்கும் என்று தெரியாது. "சென்னையில் இருந்து வந்திருக்கும் அம்மா அசோக்கிற்கு பணம் கொடுத்திருப்பாங்களோ" என்று யோசனையில் மூழ்கினான் மணி. மிக வேகமாக சுவர் எழும்பியது. செங்கற்களால் கட்டப்பட்டு சிமெண்ட் தரை போட்டு மேலே மரச்சட்டம் வைத்து அடித்து விடலாம் என்ற திட்டத்தில் கட்டிடம் எழும்பிக் கொண்டிருந்தது.
ரமா அம்மாவிற்கு சாப்பாடு தங்கம் எடுத்து வந்து கொடுத்தார். வீட்டில் இருப்பவர்கள் ரமா அம்மாவை மிகவும் அன்புடன் நடத்தினார்கள். அவர்கள் மனதில் எல்லாம் ரமா இன்னும் ஒரு வாரம் நம்ம வீட்டில் இருக்கப் போகிற விருந்தினர். அவர்கள் மனம் நோகாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பதில் புவனா நாகம்மா உட்பட அனைவரும் கவனமாக நடந்து கொண்டனர்.
ஒரு மாலை வேளையில் தங்கம் ரமாவை அழைத்துக்கொண்டு வயல்வெளிக்கு சென்று அவர்கள் வயல் எல்லாம் சுற்றி காட்டினார்கள். அங்கு வேலை செய்யும் ஆட்களை வியப்புடன் பார்த்து ரசித்தார் ரமா. தண்ணீர் பாயும் இடத்தில் இருந்த மூக்கிரட்டை கீரையை பறித்து தங்கம் வீட்டிற்கு வந்ததும் அதில் சூப் வைத்து ரமாவிற்கு கொடுத்தாள். நீங்க நிறைய மாத்திரை எடுக்கறீங்க உங்க சிறுநீரகம் பாதிக்காமல் இருக்கும் இந்த கீரையை வாரத்திற்கு 3,4 முறை கூட எடுக்கலாம் என்று வலம்புரிஜான் மாதிரி பேசினார் தங்கம்.
பக்கத்தில் கட்டிய அந்த குடிலின் வேலைகள் முடிந்துவிட்டது. யாருக்கு அந்தக் குடில் என்று கேட்டால் ஆளாளுக்கு ஒரு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மல்லிகாவை கவனிக்கும் முழு பொறுப்பும் சங்கவியிடம் எழுதப்படாத சாட்சியமாக ஒப்படைக்கப்பட்டது. ஒரு வாரம் உருண்டோடியது. ரமா அம்மா கிளம்பப் போகிறார்கள் என நினைத்து சங்கவி மனம் வருத்தப்பட்டது. ரமா வாழ்நாட்களில் மகிழ்வாக இருந்த நாட்கள் அசோக் வீட்டில் இருந்த இந்த ஒரு வாரம் தான். ரமா கிளம்புகிறேன் என்று கூறிவிட்டார்கள். மூட்டை முடிச்சு எல்லாம் கட்டியாச்சு பயணத்தில் அவர்கள் சாப்பிடுவதற்கு டிபன் எல்லாம் ரெடி பண்ணி கட்டி வைத்துவிட்டாள் சங்கவி. தங்கம் இன்னும் சிறிது நாட்கள் இருக்கலாமே என்று உள்ளன்போடு கூறினாள். "விருந்தும் மருந்தும் மூன்று வேளை" நான் ஒருவாரம் தங்கி விட்டேன் இந்த ஒரு வாரத்தின் நினைவு போதும் அடுத்த ஜென்மம் வரை என்னுடன் வரும் என்று அனைவரிடமும் சொல்லிவிட்டு வெளியே வந்தார். அசோக் ரமாவின் பைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினான். எல்லாரையும் பார்த்து "ரயில் இந்த ஸ்டேஷனில் இருந்து கிளம்பி விட்டது அடுத்து எந்த ஸ்டேஷனில் நிற்கும் என்று எனக்கே தெரியாத ஒரு பயணம்" என்று சொல்லிவிட்டு அனைவரையும் பார்த்து கையசைத்தாள்.
( சிறகுகள் படபடக்கும்)