Skip to main content

நீண்ட நேரம் அழும் குழந்தை; அம்மா தந்த தண்டனை - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :10

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

 parenting-counselor-asha-bhagyaraj-advice-10

 

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சில முறைகளையும், பிள்ளைகள் செய்கிற தவறுகளின் தன்மைகளை உணரும் விதங்களையும் அதை சரி செய்வதற்காக எடுக்கிற முயற்சிகளைப் பற்றியும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை நிபுணர் ஆஷா பாக்யராஜ் நம்மிடையே விவரிக்கிறார்.

 

தண்டனை - குழந்தைகள் தவறு செய்தால் நாம் தண்டனை தருகிறோம். அடிப்பது, கிள்ளுவது, திட்டுவதெல்லாம் தண்டனையில் தான் வரும். அப்படியான தண்டனையால் மனமுடைந்த ஒரு குழந்தைக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி பார்ப்போம்.

 

இந்த குழந்தை தன்னிச்சையாகவே வளர்கிறாள். தன்னுடைய தேவைகள் எல்லாவற்றையுமே தானே கவனித்துக் கொள்கிறாள். குளிக்க வைக்க, சாப்பிட வைக்க, படிக்க வைக்க யாரையுமே அணுகுவதில்லை. இவ்வளவுக்கும் வயசு வெறும் எட்டுதான் ஆகிறது. ஆனால் அவளுக்கு அழுகை வருகிறது. கொஞ்ச நஞ்சமில்லை அழுகை, இரவெல்லாம் தூங்காமல் அழுதுகொண்டே இருக்கிறது. வீட்டில் மட்டுமல்ல ஸ்கூலிலும் திடீரென தொடர்ச்சியாக பயந்து அழுகிறது.

 

எங்கிருந்து இப்படி அழ ஆரம்பித்திருக்கிறாள் என்றால், வீட்டில் ஏதாவது சேட்டை செய்தால் அந்த குழந்தையின் அம்மா வீட்டிலிருந்து வெளியே தள்ளி மணிக்கணக்கில் காத்திருக்க வைப்பார்களாம்; வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை. இதுதான் அந்த குழந்தைக்கான தண்டனையாக இருந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டார்கள். இந்த மாதிரியான தண்டனை கொடுப்பதால்தான் அந்த குழந்தைக்கு நீண்ட நேர அழுகை வர ஆரம்பித்திருக்கிறது.

 

கவுன்சிலிங் வந்தபோது பெற்றோருக்கு தாங்கள் செய்கிற செயல் தவறு என்பதையும் அதை நிறுத்த வேண்டிய அவசியத்தையும் உணர்த்தினேன். குழந்தை வீட்டிலிருக்கும் பொருட்களை உடைப்பதும், கிழிப்பதுமாக இருந்தாள், அவளுக்கு களிமண்ணால் பொருட்களை செய்ய கற்றுக் கொடுத்து எங்கேஜ்டா வைக்கப் பழக்கினோம். இப்பொழுது அந்த குழந்தை நிறையா க்ளே பொம்மைகள் செய்கிறாள்.

 

தண்டனை கொடுக்கிறோம் என்ற பெயரில் குழந்தைகளுக்கு நிறைய மன வலிகளைத் தந்து விடக்கூடாது என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.