டீன் ஏஜ்ஜில் ஏற்படும் காதல் ஈர்ப்புகள் சம்பந்தமாக கொடுக்கப்பட்ட கவுன்சிலிங் குறித்து நம்மோடு குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் பகிர்ந்து கொள்கிறார்.
பிளஸ் டூ படிக்கும் 17 வயது மாணவிக்கு 40 வயது மதிக்கத்தக்க ஒருவருடன் காதல் ஏற்பட்டு, வீட்டை விட்டு நகை, பணம் முதலியவற்றை எடுத்துக் கொண்டு காணாமல் போயிருக்கிறார். காவல்துறை உதவியுடன் பெற்றோர் தங்களது மகளை கண்டறிந்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். ஆனாலும் அந்த மாணவிக்கு இன்னும் அந்த ஈர்ப்பிலிருந்து மீளமுடியாமல் தவிக்கிறார் என்பதை அறிந்து கவுன்சிலிங் அழைத்து வந்தனர்.
பல சமயம் குழந்தைகளை சூம் மீட்டிங்கில் பார்த்து பேசிவிடுவேன். இந்த குழந்தையை நேரில் பார்த்தே ஆக வேண்டுமென பார்த்தேன். நேரில் பார்த்த போது ஒரு மணி நேரத்திற்கு மேல் அழுது கொண்டே இருந்தார். எல்லாரும் சமாதானப்படுத்தச் சொன்னார்கள். எதோ ஒரு எமோஷனல் வெளியே வரட்டும் நான் அழட்டும் என்று விட்டுவிட்டேன். அழுது முடித்து பேச ஆரம்பித்த போது, ஏன் வீட்டை விட்டு போனிங்க என்றதற்கு “அப்பாவிடம் கிடைக்காத அரவணைப்பு இன்னொரு ஆணிடம் கிடைத்தது” என்றாள்.
வசதியான குடும்பம் தான். பிள்ளைக்கு தேவையான அனைத்தையும் வாங்கியும் தந்திருக்கிறார்கள். ஆனால், பெற்றோர் தங்களுக்குள் எப்போதுமே சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்களாம், இடையே விலகப் போன இவளுக்கு பிரைவேட் பார்ட்களிலெல்லாம் காயம்படும் படி அவர்கள் சண்டையிட்டு இருக்கிறார்கள். இதனால் அவள் மன உளைச்சலில் தான் இருந்திருக்கிறாள். தன்னுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள உறவுகள் இல்லாமல் தவித்திருக்கிறாள்.
அந்த சமயத்தில் தான் பக்கத்து வீட்டிலிருந்தவர் பழக்கமாகியிருக்கிறார். தன்னுடைய சுக துக்கங்களை அவரோடு பகிர்ந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறாள். ஒரு சமயத்தில் அவரோ நான் உன்னைய நல்லா பார்த்துக் கொள்கிறேன். உன்னுடைய வீட்டிலிருந்து நகை, பணம் எடுத்துக் கொண்டு வா என்று சொன்னதால் அதை நம்பி பணம், நகையை எடுத்துக் கொண்டு அவரோடு போயிருக்கிறாள்.
அவளோடு பேசிய போது பெற்றோரின் அரவணைப்புக்கு ஏங்கி இன்னொரு ஆணின் மீது ஈர்ப்பு வந்து ஏமாந்தவள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அந்த குழந்தைக்கு உணர வைக்க ஒரு கேள்வி கேட்டேன். ரொம்ப பிரியமான அங்கிள் அவரோட பணத்தில் தானே உன்னைய பார்த்திருந்திருக்கனும், உன்னைய ஏன் பணம், நகை எடுத்து வரச் சொல்ல வேண்டும் என்ற போது தான் குழந்தை உணர ஆரம்பித்தாள்.
பிறகு ஓரளவு புரிதலோடு தன்னை மாற்றிக்கொண்டு, கல்லூரிக்கு சென்று யாருடைய ஆதரவும் தனக்கு தேவையில்லை என்று படிப்பு, விளையாட்டு போன்ற மற்ற விசயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறாள். ஆனால் அவளது பெற்றோர் இன்னும் தங்களை திருத்திக் கொள்ளவே இல்லை.