பெற்றோர்கள் பிரிவதால் குழந்தைகளை உளவியல் ரீதியில் அது பாதிக்கும் என்பதை ஒரு கவுன்சிலிங் மூலம் குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் விவரிக்கிறார்.
ஏழு வயது பெண் குழந்தை. பள்ளிக்கூடத்தில் அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து விடுகிறாள். மயக்கம் போட்டு விழுந்தால் எழுந்திரிக்க 10 நிமிடம் ஆகியிருக்கிறது. எம்ஆர்ஐ ஸ்கேன் முதலான அனைத்து பரிசோதனைகள் செய்தும் எந்த நோயுமில்லை என்று உறுதியானதும் மருத்துவர்களே குழந்தை வளர்ப்பு ஆலோசனை நிபுணர்களை அணுகுங்கள் குழந்தை மன அழுத்தத்தில் இருக்கிறாள் என்றதும் என்னிடம் வந்தார்கள்.
குழந்தையை தனியாக வளர்க்கும் பெண்மணி. கணவர் துணை இல்லை. குழந்தைக்கு சிறிய வயதிலிருந்தே சிங்கிள் பேரண்ட். அப்பாவையே பார்த்திராத குழந்தை அவள். கணவனும் காரணமே சொல்லாமல் பிரிந்து போனவர். அதனால் அந்த குழந்தையின் அம்மாவும் மேற்கொண்டு தேடிச் சேர்ந்து வாழ முயற்சி எடுக்காமல் விட்டுவிட்டார்.
குழந்தை தன்னோட அம்மாவின் அப்பாவான தாத்தா, பாட்டியோடு வளர்ந்திருக்கிறாள். அம்மா வேலைக்கு போகும் பெண்மணி என்பதால் பேத்தியை அவர்கள் தான் கவனித்திருக்கிறார்கள். ஒரு சமயத்தில் தாத்தா வயதின் மூப்பினால் இறந்திருக்கிறார். அதிலிருந்து குழந்தையின் நடவடிக்கையில் பெரிய மாற்றம். எதற்கும் அடம்பிடிப்பதில்லை, அமைதியாக இருந்திருக்கிறாள். அதிகம் பேசக்கூட இல்லை. அந்த சமயத்தில் தான் அடிக்கடி மயக்கம் வர ஆரம்பித்திருக்கிறது.
என்னிடம் வந்த பிறகு குழந்தையிடம் பேசியபோது, தாத்தாவை மிஸ் பண்றாளா என்ற ரீதியில் கவுன்சிலிங் கொடுத்தேன். ஆமாம் என்பதையும் சொன்னவளுக்கு தாத்தா வயதின் மூப்பினால் இறந்தார் ஆனால் உன்னுடனேயே இருப்பார் என்று சொன்னேன். சரி என்று கேட்டுக் கொண்ட குழந்தை, வீட்டிற்கு போய் அம்மாவிடம் அப்பாவிடம் பேச வேண்டும் என்றிருக்கிறது. அப்பா தான் இல்லையே, எப்படி பேசமுடியும் என்ற சிக்கலை உணர்ந்த அம்மா, எப்படி அதை குழந்தைக்கு சொல்ல வேண்டும் என்று கேட்டார். அந்த அம்மாவுக்கு கவுன்சிலிங் கொடுத்தேன்.
5 வயது குழந்தைக்கு உங்களின் வாழ்க்கை சூழலைச் சொல்லுங்க என்றேன். அதை புரிந்து கொண்ட குழந்தைக்கு மேற்கொண்டு எப்படி தன்னை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் விளையாட்டு, டான்ஸ், பாட்டு, வாசிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்த சொல்லிக் கொடுத்தேன். நல்ல மாற்றங்கள் வந்தது.