Skip to main content

"உங்களுக்கு ரொம்ப புடிச்ச ஹீரோ யாரு?'' மார்னிங் மோட்டிவேஷன் #1

Published on 10/09/2019 | Edited on 10/09/2019

"உங்களுக்கு ரொம்ப புடிச்ச ஹீரோ யாரு?''

ரஜினி.. கமல்.. விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, கார்த்தி.. எக்ஸட்ரா..

"கேர்ள்ஸ்... உங்களுக்குப் புடிச்ச ஹீரோயின்?''

அனுஷ்கா, தமன்னா, இலியானா, ஐஸ்வர்யாராய், அஞ்சலி, த்ரிஷா… எக்ஸட்ரா…

இந்தக் கேள்விக்கு நீங்க எந்த பதில் சொல்லியிருந்தாலும் அது நிச்சயமா கரெக்ட் ஆன்ஸர் இல்லை. ஏன்னா, எந்தப் பையனா இருந்தாலும் அவனுக்குப் பிடிச்ச ரியல் ஹீரோ, அவன்தான். எந்தப் பொண்ணா இருந்தாலும் அவளுக்குப் பிடிச்ச ரியல் ஹீரோயின், அவள்தான். கண்ணாடி முன்னாடி நிற்கும்போது, ஒவ்வொருவருமே அவங்களுக்கு பேரழகுதான். புத்தகத்தைப் படிக்கும்போது, ஒவ்வொருவருமே அவங்க மனசளவில் புத்திசாலிகள்தான். எந்தவொரு செயலிலும் இறங்கும்போது அவங்கவங்களும் ஜீனியஸ்தான். இந்த எண்ணம் ஒவ்வொருத்தர் மனசிலும் இருக்கும். இது இயற்கையானது. நம் வாழ்க்கையின் நிஜ ஹீரோ-ஹீரோயின்கள் நாம்தான். ஹீரோன்னா ஜெயிக்கணும். அதுதான் ரெகுலர் ஃபார்முலா. நாமதான் நம்ம வாழ்க்கையோட ஹீரோன்னா, நாம  ஜெயிக்கணும்… ஜெயிக்கணும்.. ஜெயிச்சிக்கிட்டே இருக்கணும். எல்லாருக்கும் அந்த ஆசை உண்டு. வெற்றியை விரும்பாத  மனிதர்களே கிடையாது. 100 பேர் உங்க முன்னாடி இருக்கும்போது, உங்களில் யார் யார் ஜெயிக்க விரும்புறீங்கன்னு கேட்டால் 100 பேரும் கை தூக்குவாங்க. இங்கே வெற்றிங்கிறது 100க்கு 101 மார்க் வாங்கியிருக்கும். ஏன்னா, கை தூக்காத நீங்களும் அதே வெற்றியை விரும்புகிறவர்தான். ஆனாலும், சினிமா ஹீரோவைப்போல எல்லோரும் எல்லா நேரத்திலும் வெற்றி பெற்றுவிடுவதில்லை. சில நேரங்களில் பின்னடைவுகளும் வரும். அப்போது நாம் எப்படி செயல்படுறோம் என்பதில்தான் வெற்றியின் தத்துவம் அடங்கியிருக்கிறது.

 

xh



அப்படின்னா வெற்றின்னா என்ன? அதுக்கு ஏதாவது இலக்கணம் இருக்குதா? ஃபார்முலா இருக்குதா? ஈக்வேஷன்ஸ் இருக்குதா? முடிவில்லாத பயணத்தின் தொடர்ச்சியில்தான் வெற்றியின் மந்திரம் அடங்கியிருக்கிறது. இரண்டு கிலோமீட்டர் தூரத்தை ஓடிக் கடந்துவிட்டால் அது முதல் வெற்றி. உடனேயே, நான்கு கிலோமீட்டரைத் தாண்டணும்ங்கிற வெற்றி இலக்கு தொடங்கிவிடுகிறது. கிலோமீட்டர்கள் முடிவில்லாதவை. வெற்றிக்கானப் பயணமும் அப்படித்தான்
யேல் நைட்டிங்கேல் என்கிற எழுத்தாளர் ரொம்ப அழகா சொல்லுவார். அர்த்தமுள்ள பயணத்தில் நாம் அடைகின்ற முன்னேற்றத்தை உணர்வதுதான் வெற்றி எனப்படுகிறது. வெற்றி என்பது எதுவரைக்கும் என்பதற்கு எந்த இலக்கும் கிடையாது. பில்கேட்ஸை நாம் மிகப் பெரிய வெற்றியாளரா, சாதனையாளரா பார்க்கிறோம். சச்சின் டென்டுல்கர், ஏ.ஆர்.ரகுமான் போன்ற நம்ம நாட்டு சாதனையாளர்களையும் அப்படித்தான் பார்க்கிறோம். வாரன் பஃபட்டும் அப்படித்தான். ஆனா அவங்களும் சரி, அவங்களைப் போல உலகத்தின் மற்ற நாடுகளில் இருக்கிறவங்களும் சரி, நாங்க எல்லாத்தையும் சாதிச்சி முடிச்சிட்டோம்னு அவங்க சொல்லிக்கிறதேயில்லை. அப்படிச் சொல்லாம இருக்கிறதில்தான் அவங்களோட உண்மையான வெற்றியே இருக்கிறது. எந்த மனிதன், நான் எல்லாத்தையும் சாதிச்சிட்டேன்னு சொல்றானோ அவன் வாழ்க்கையிலிருந்தே ரிடையர்டாகிவிட்டான் என்று அர்த்தம். அவன் இந்த சமுதாயத்திலிருந்து தனித்து வாழ ஆரம்பிச்சிடுறான். அதனால அவனுக்குப் பயனில்லை. சமுதாயத்திற்கும் பயனில்லை.

சமுதாயத்தையும் சக மனிதர்களையும் புரிந்துகொண்டு பயணிக்கின்ற மனிதர்களே வெற்றியாளர்கள் ஆகிறார்கள். எந்த ஒரு வெற்றியும் தனி மனிதர்களால் மட்டும் கிடைத்துவிடவில்லை. என்னுடைய வெற்றிக்கு நான் மட்டும்தான் காரணம் என்று யாராவது  சொன்னால், அது பச்சைப் பொய். அபத்தமானது. சக மனிதர்களின் தயவின்றி யாரும் முன்னேறிவிட முடியாது. ஒரு  மாணவன் ஸ்கூலுக்குப் போகும்போது அவனை ரிக்ஷாவிலோ ஆட்டோவிலோ அழைத்துச் சென்றவரில் தொடங்கி, அவனுடைய ஆசிரியர், நண்பர்கள், லைப்ரரியன், ஸ்போர்ட்ஸ் டீச்சர், கோச், கம்ப்யூட்டர் ட்ரைனர் இப்படி எத்தனையோ பேர் அவனுடைய வெற்றியை செதுக்கியிருக்கிறார்கள். அவனுக்கான வழியைக் காட்டியிருக்கிறார்கள். அவன் முன்னேறிச் செல்வதற்குத் தங்களை ஏணியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். யாரோ ஒரு தொழிலாளி தன்னுடைய வியர்வை போக குளிப்பதற்காக லைஃபாய் சோப் வாங்கும்போது, அவன் கட்டுகிற வரியைத்தான் பலருடைய படிப்புக்காக அரசாங்கம் செலவழிக்கிறது. அந்த வரிப்பணத்தில்தான் நல்ல ரோடு, ஹைமாஸ் லைட் எல்லாமே போடப்படுகிறது. ஆக, நம்முடைய வாழ்க்கைப் பயணத்திற்கும் வெற்றிப் பயணத்திற்கும் கண்ணுக்குத் தெரியாத பலர் துணை நிற்கிறார்கள். அதனால், என்னுடைய வெற்றிக்கு நான் மட்டுமே காரணம் என்று எவரும் சொல்லிவிடமுடியாது. அப்படிச் சொல்கிறவர்கள், வெற்றியைப் போலத் தோற்றமளிக்கும் தோல்வியின் பள்ளத்தாக்கிற்குள் நழுவிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். தனி மனிதனுடைய முயற்சிக்கு அவனைச் சார்ந்தவர்களின் ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் கிடைக்கும்போது வெற்றிப் பயணம் எளிதாக அமைகிறது. ஒரு மாணவனின் வெற்றியில் அவனுடைய பெற்றோரின் அர்ப்பணிப்பும் ஆசிரியர்களின் பங்களிப்பும் முக்கியமானது. ஆனால், நாம் எதை வெற்றியாகப் பார்க்கிறோம் என்பதில்தான் பிரச்சினை தொடங்குகிறது.
 

xhg



"டேய்... உன்னை மாதிரிதானே அவனும் ஐ.டி. படிச்சான். அவன் இப்ப யு.எஸ்.ஸில் இருக்கான். நீ இங்கே இருக்கே. அவன் வாங்குற சம்பளம் எவ்வளவு? நீ என்னத்த வாங்குறே?'' இப்படித்தான் வெற்றி என்பது ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பார்ப்பதாக இருக்கிறது. இதுதான் உண்மையான வெற்றிக்கு சிக்கலாகவும் சவாலாகவும் இருக்கிறது. ஒப்பிடுவது என்பது வெற்றியின் அளவுகோல் அல்ல. அவரவர் பாதையில் கிடைக்கிற முன்னேற்றம்தான் அவரவர்க்கான வெற்றி. எவ்வளவு பணம் சம்பாதிக்கிறது என்பதில்தான் வெற்றி இருக்கிறது என்றால், ஐ.டி. படித்தவர்களைவிட தாவூத் இப்ராகிமும் அவரது ஆட்களும் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். கடத்தல்காரர்களும் கொள்ளைக்காரர்களும் குவித்து வைத்திருக்கிறார்கள். நம்ம பையன் அப்படி சம்பாதிச்சிட்டு வரவேண்டும் என்று நினைப்போமே? அப்போது மட்டும், அரை வயிறு கஞ்சி குடிச்சாலும் நம்ம உழைப்புல நேர்மையா சம்பாதிச்ச காசுல குடிச்சிட்டு நிம்மதியா தூங்கணும் என்று அட்வைஸ் பண்ணுவோம். எனவே, அவரவர் இயல்பு என்று ஒன்று இருக்கிறது. அதன்படி பயணம் அமைகிறது. அந்தப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் எந்தளவுக்குச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம் என்பதுதான் வெற்றியின் அளவுகோல்.

நான் செர்ஜி புப்காவை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவரை உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். போல் வால்ட் எனப்படுகிற கோல் ஊன்றித் தாண்டும் போட்டியில் உலகச் சாம்பியன். இன்னைக்கு ரஷ்யான்னு சொல்லப்படுற அன்றைய சோவியத் யூனியன் நாட்டைச் சேர்ந்தவர். அவரோட வெற்றி என்பது என்ன தெரியுமா? அவர் 36 முறை உலக சாதனைகளை முறியடித்துத் தாண்டி வெற்றிகளைக் குவித்திருக்கிறார். அதில் ஒரு  முறைதான், அடுத்தவருடைய சாதனையை முறியடித்தார். அதாவது, முதல்முறையாகத் தாண்டும்போதுதான் ஏற்கனவே ஒரு வீரர் நிகழ்த்தியிருந்த சாதனையை முறியடித்தார். அதற்குப்பிறகு, 35 முறையும் தன்னுடைய சாதனையைத்தான் அவர் முறியடித்துக்கொண்டே வந்தார். தனக்குத்தானே சேலஞ்சாக இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றியின் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கும். ஒருமுறை சாதனை நிகழ்த்தியதுமே, ஆகா.. எல்லாத்தையும் சாதிச்சிட்டோம் என்று நினைப்பவர்கள் செர்ஜி புப்கா ஆகமுடியாது. நமக்கான இலக்கை நாம் நிர்ணயித்துக் கொண்டு, அதை  அடைவதற்கும் கடப்பதற்குமான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அந்த முயற்சியில் எந்தளவு நாம் சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம், எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறோம் என்று கணக்கிடுவதுதான் வெற்றியின் அளவுகோல்.

 

hl



இன்றைக்கு எத்தனையோ மாரத்தான் போட்டிகள் நடக்கின்றன. மாரத்தான் போட்டிகளின் மொத்த தூரம் 42 கிலோமீட்டர். அதில் லட்சக்கணக்கான பேர் கலந்துக்கிறாங்க. அத்தனை பேரும் முழுசா ஓடிவிடுகிறார்களா? கால்கள் இல்லாதவர் சக்கர நாற்காலியில் வந்து சில கிலோ மீட்டர்கள் பங்கேற்கிறார். செம வெயிட்டான உடம்புடன் இருப்பவர் கொஞ்ச தூரம் ஓடிவருகிறார். ஒருசிலர் பாதி தூரமான 21 கிலோமீட்டரைக் கடக்கிறார்கள். யாரோ ஓரிருவர் முழுமையாக ஓடி முடிக்கிறார்கள். ஆனால், இதில் எல்லோருக்குமே ஒரு வெற்றிக்களிப்பு ஏற்படுகிறது. நான் 3 கிலோமீட்டர் ஓடிவிட்டேன் என்று குண்டான உடம்புக்காரர் பெருமைப்படுகிறார். கால்கள் இல்லாமலே நான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றேன் என்று சக்கர நாற்காலிக்காரர் சந்தோஷமாகச் சொல்கிறார். போன முறையை விட கூடுதலாக ஓடினேன் என்று பாதி தூரம் கடந்தவர்கள் சொல்கிறார்கள். இப்படித் தங்களுக்கானப் பயணத்தில் எவ்வளவு தூரம் கடந்திருக்கிறோம் என்பதையும் கடந்தமுறையை விட நாம் முன்னேறியிருக்கிறோமா என்று சுயமதிப்பீடு செய்து கொள்வதிலும்தான் வெற்றி அமைந்திருக்கிறது. சுயமதிப்பீடு செய்யவேண்டும் என்பது எப்போது தோன்றும்? பாசிட்டிவ்வான சிந்தனைகள் இருந்தால்தான் தோன்றும். நம்மில் எத்தனை பேருக்கு அந்த சிந்தனைகள் இருக்கின்றன? அந்த சிந்தனைகள் இருந்தால்தான் நாம் சக்ஸஸ்ஃபுல்லாக இருக்க முடியும். உங்ககிட்டே அந்த சிந்தனைகள் இருக்கா? எந்தளவு இருக்கு? எந்த ரூட்டில் போனால் அந்த சிந்தனைகள் வளரும்? ஹைவேஸா? குறுக்கு சந்தா? பைபாஸா? யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்களா? தொடரும்...