1972ஆம் ஆண்டு திமுக அரசு மீது ஊழல் புகார்கள் அடங்கிய மனுவை மத்திய அரசிடம் கொடுத்தார் எம்.ஜி.ஆர். அவரை அழைத்துப் போய் இந்திராவிடம் அறிமுகம் செய்தவர் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் கல்யாணசுந்தரம். இந்தக் காலகட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் எதிரிகளாக இருந்தன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு காங்கிரஸ்தான் தேவை என்று அன்றைக்கு சிபிஐ முடிவெடுத்திருந்தது. சிபிஐ சோவியத் ஆதரவும், சிபிஎம் சீன அதரவு நிலைப்பாடும் எடுத்திருந்தன.
மத்திய அரசிடம் 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் திமுக மீது ஊழல் புகார் கொடுத்தார். அதன்பிறகு அந்தப் புகார்கள் கண்டுகொள்ளப்படவில்லை. இந்திராவுக்கும் கலைஞருக்கும் இடையிலான உறவு சுமூகமாகத்தான் இருந்தது. மாநிலத்தில் காமராஜ் தலைமையிலான காங்கிரஸ் மட்டுமே வலுவாக இருந்தது. இந்திரா காங்கிரஸுக்கு சில தலைவர்களும், திமுக தயவில் பெற்ற 9 எம்.பி.க்களும் மட்டுமே இருந்தார்கள். தமிழக சட்டமன்றத்தை செத்துவிட்டதாகக் கூறி எம்.ஜி.ஆர் சட்டமன்றத்தை புறக்கணித்தார். ஆனால், சபை வருகைப்பதிவேட்டில் அவ்வப்போது கையெழுத்திடுவார். இத்தகைய நடைமுறையை முதலில் தொடங்கியவர் எம்.ஜி.ஆர்தான்.
எம்.ஜி.ஆர் நடித்த சில படங்கள் தோல்வியடைந்தன. அவருடைய தோற்றமும் வயதின் காரணமாக மாறியது. கமல், ரஜினி போன்றோர் செல்வாக்குப் பெறத் தொடங்கிய காலம் அது. திமுக அரசு தன்னுடைய வழியில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது. அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளுடன் திமுக அணி அமைத்து செயல்பட்டது. இந்நிலையில்தான் இந்திராவின் பதவிக்கு ஆபத்து வந்தது. உடனே நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார் இந்திரா. அவருடைய நடவடிக்கையை அகில இந்திய அளவில் முதன்முதலாக எதிர்த்து குரல் கொடுத்தது திமுக.
நெருக்கடி நிலைப் பிரகடனத்தை அறிவித்த பின்னரும் தமிழகத்தில் அதை அமல்படுத்த கலைஞர் மறுத்தார். பத்திரிகைத் தணிக்கையைக்கூட அவர் அமல்படுத்தவில்லை. இத்தனைக்கும் திமுக அரசையும் கலைஞரையும் குமுதம், விகடன். துக்ளக் இதழ்களும் தினமணி, எக்ஸ்பிரஸ், ஹிண்டு உள்ளிட்ட நாளிதழ்களும் காய்ச்சி எடுத்தன. அப்போது இவை மட்டுமே முக்கிய பத்திரிகைகள். குமுதம் இதழில் கலைஞரின் தொடரை வெளியிட்டுக்கொண்டே அவரையும் திமுக அரசையும் படுமோசமாக கேலி செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தன. இதையடுத்து, கலைஞர் தனது தொடரை நிறுத்தினாரே தவிர, குமுதம் பத்திரிகை மீது தணிக்கை ஆயுதத்தை ஏவவில்லை. வட இந்தியாவில் மத்திய அரசால் தேடப்பட்ட ஜார்ஜ் பெர்ணான்டஸ், சுப்பிரமணியசாமி ஆகியோர் உள்ளிட்ட முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் இடமாக தமிழகம் இருந்தது.
நெருக்கடி நிலைப் பிரகடனத்தை அறிவித்த பின்னரும் தமிழகத்தில் அதை அமல்படுத்த கலைஞர் மறுத்தார். பத்திரிகைத் தணிக்கையைக்கூட அவர் அமல்படுத்தவில்லை. திமுக அரசையும் கலைஞரையும் அந்தக் காலத்தின் முக்கிய நாளிதழ்கள் அனைத்துமே காய்ச்சி எடுத்தன. இன்னொரு இதழோ கலைஞரின் தொடரை வெளியிட்டுக்கொண்டே அவரையும் அரசையும் கேலி செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தது. வட இந்தியாவில் மத்திய அரசால் தேடப்பட்ட ஜார்ஜ் பெர்ணான்டஸ், சுப்பிரமணியசாமி ஆகியோர் உள்ளிட்ட முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் இடமாக தமிழகம் இருந்தது. இந்நிலையில் நெருக்கடி நிலையை திமுக ஆதரிக்க வேண்டும் என்று இந்திரா தரப்பில் தொடர்ந்து தூது அனுப்பப்பட்டது. இந்திரா அறிவித்த 20 அம்ச திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று கலைஞருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்தத் திட்டங்களை சட்டமன்றத்தில் வாசித்த கலைஞர், இந்திராவால் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே தமிழகத்தில் திமுக அரசு நிறைவேற்றி இருப்பதை ஆதாரங்களுடன் விவரித்தார். அதையும் தாண்டி இந்தியாவுக்கு முன்னோடியாக திமுக அரசு நிறைவேற்றியுள்ள பல திட்டங்களை அடுக்கிய கலைஞர் - இந்திரா அரசு இவற்றையும் 20 அம்சத் திட்டங்களுடன் இணைத்து இந்தியாவின் மற்ற மாநிலங்களில் நிறைவேற்றலாம் என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, கலைஞர் மீது கோபம் கொண்டார். கலைஞரோ காமராஜரைச் சந்தித்து நெருக்கடி நிலையை எதிர்த்து அரசாங்கம் பதவி விலக விரும்புவதாக கூறினார். ஆனால், காமராஜர் மறுத்தார். திமுக அரசு பதவி விலகினால் இந்தியாவில் சுதந்திரக்காற்று வீசும் தமிழகமும் சிறைச்சாலையாக மாறிவிடும் என்று தடுத்தார். ஆனால், 1975 அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி காமராஜர் மரணம் அடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த இந்திரா, முதல்வர் கலைஞருடன் இணக்கமாகவே இருந்தார். காமராஜர் இறந்த பின்னர் மூப்பனார் உள்ளிட்ட தலைவர்கள் காங்கிரஸை உடைத்து இந்திரா காங்கிரஸில் இணைய முடிவெடுத்தனர். இந்நிலையில்தான், நெருக்கடிநிலையை எதிர்த்து திமுக சார்பில் 1975-டிசம்பர், 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் கோவையில் மாநில மாநாட்டை கூட்டி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினார் கலைஞர்.
திமுக ஆட்சி முடிய 1976 மார்ச் வரை காலம் இருந்தது. அதாவது 1976 ஜனவரியிலேயே தேர்தல் நடைமுறைகள் தொடங்க வேண்டும். அதற்கான அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை. இத்தகைய நிலையில்தான் மாநில மாநாட்டைக் கூட்டி திமுக நெருக்கடி நிலையை கடுமையாக எதிர்த்து பேசியது. இந்த மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கி சென்னை கடற்கரையில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை திமுக கூட்டியது. 1976 ஜனவரி 31 ஆம் தேதி இரவு நடந்த அந்தக் கூட்டத்திலும் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில் பேசும்போதே திமுக ஆட்சியை கலைக்கும் இறுதி நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாக முதல்வர் கலைஞர் அறிவித்தார். “ஆளுநர் கே.கே.ஷாவை திமுக அரசுக்கு எதிராக கையெழுத்திடுமாறு மிரட்டுகிறார்கள். நாளை விடியும்போது நான் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்” எனறு கூறிய கலைஞர், கூட்டம் முடிந்ததும், அரசுக் காரை திருப்பி அனுப்பிவிட்டு தனது காரிலேயே வீட்டுக்குச் சென்றார். அதாவது திமுக அரசு தனது முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்யும் நிலையிலேயே கலைக்கப்பட்டது. கலைக்கப்பட்ட பிறகு 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரும், கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரமும் கொடுத்த ஊழல்புகார்கள் அடிப்படையில் சர்க்காரியா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
நெருக்கடி நிலையை தமிழகத்தில் அமல்படுத்த கலைஞர் ஒப்புக்கொண்டிருந்தால் திமுக அரசு மேலும் பதவி நீடிப்பு பெற்றிருக்க வாய்ப்பு இருந்தது. திமுக காங்கிரஸ் கூட்டணி உடையாமல் இருந்திருக்கும். ஆனால், திமுக தனக்கான அடையாளத்தை இழந்திருக்கும். ஜனநாயகப் போராளி என்று அது மார்தட்டிக் கொள்ள முடியாமல் போயிருக்கும். அதேசமயம், எம்.ஜி.ஆரும் சரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சரி இந்திரா காங்கிரஸுக்கு ஆதரவாக இருந்தன. திமுகவோ ஆட்சியைப் பறிகொடுத்து, ஊழல் விசாரணைக் கமிஷன் என்று அலைக்கழிக்கப்பட்டது.
மத்திய அரசின் மிரட்டலால் மாநில கட்சி என்ற தனது அந்தஸ்த்தை மாற்றி, அதாவது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயருடன் அனைத்திந்திய என்ற அடைமொழியைச் சேர்த்தார் எம்.ஜி.ஆர். அதேசமயம், நெருக்கடி நிலையை எதிர்த்ததற்காக திமுக நிர்வாகிகள் அனைவரும் மாநிலம் முழுவதும் காரணம் ஏதும் சொல்லாமல் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். பிப்ரவரி 3 அண்ணா நினைவு தினத்தில் பங்கேற்க முடியாமல் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் ஆயிரக்கணக்கில் கைதுசெய்யப்பட்டனர். சர்க்காரியா கமிஷன் விசாரணை தினந்தோறும் திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஒலிபரப்பியது.
ரேடியோவைத் திருப்பினால் திமுகவுக்கு எதிரான பிரச்சாரமும், இந்திராவின் 20 திட்டம் குறித்த பிரச்சாரமும் நிறைந்திருந்தன. ரயில்கள் நேரத்துக்கு வந்தன. அலுவலகங்களில் ஊழியர்கள் நேரத்துக்கு வந்தார்கள் என்பதுதான் செய்திகளாக இருந்தன.
நெருக்கடி நிலைக் காலகட்டத்தில் இந்தியாவே பேச்சுரிமை, எழுத்துரிமையை இழந்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில், தமிழ்நாட்டில், திமுகவுக்கு எதிரானவர்கள் யாரும் பழிவாங்கப்படவில்லை.
1975ஆம் ஆண்டு ஜூன் 25 முதல் 1977ஆம் ஆண்டு ஜனவரி 18 தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பதைத் தாண்டி அரசியல் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடவில்லை. நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே, இதயக்கனி, பல்லாண்டு வாழ்க, நீதிக்கு தலைவணங்கு, உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன், நவரத்னம், இன்றுபோல் என்றும் வாழ்க, மீனவ நண்பன் ஆகிய படங்கள் எம்ஜியார் நடிப்பில் வெளியாகின.
1977ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி நெருக்கடி நிலையை வாபஸ்பெற்றார் இந்திரா. அதே ஆண்டு மார்ச் மாதம் மக்களவைக்குப் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 1976 பிப்ரவரி 1 முதல் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுக மற்றும் பழைய காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் தமிழக சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அகில இந்திய அளவில் 1975 ஜூன் முதல் 21 மாதங்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். தனித்தனிக் கட்சிகளாய் இயங்கிய அவர்கள் ஜனதா என்ற பெயரில் ஒரே கட்சியாக இணைந்தனர். சர்வாதிகாரமா? ஜனநாயகமா? என்ற கேள்வியோடு இந்தியா முழுவதும் போட்டியிட்டனர். தமிழகத்தில் ஜனதாக் கட்சியுடன் திமுகவும் சிபிஎம்மும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
இந்திரா காங்கிரஸுடன் அதிமுகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. எம்.ஜி.ஆரின் தேர்தல் தந்திரங்களைப் பார்த்தால்…
முந்தைய பகுதி:
குழப்பத்தில் இருந்த எம்.ஜி.ஆர்... தனிக்கட்சி ஆரம்பிக்கச் சொன்ன கம்யூனிஸ்ட்! சின்னங்களின் கதை #4