நடந்த உண்மைகளை ராமிடம் சொல்லி, உதவி கேட்கலாம் என்று நினைத்த கவியின் செவியில் "கவி என் கண்ட்ரோலில்தான் இருக்கிறாள்" என்ற ராமின் வார்த்தைகள் பொருள் விளங்க முடியாத மொழியாக இருந்தது.
சில நேரங்களில், சிலர் சொல்லும் வார்த்தைகளுக்கு அவசரமாக அதன் பொருளை அணுகக்கூடாது என்று தோன்ற... நிதானமானாள்.
முதலில் அவன் பேசியது பெரும் அதிர்ச்சியைத் தந்தது என்றாலும், பின்னர் அந்த சொற்களைப் பிடித்துக்கொண்டு அவள் சிந்தனை ஓடியது.
’என் பாதுகாப்பில் இருக்கிறாள்’ என்று இதை எடுத்துக்கொள்வதா? இல்லை, அவளின் செயல்கள் என் கண்காணிப்பில் இருக்கின்றன என்று நினைப்பதா?
குழப்பத்தில், எழுதப்படாத வெள்ளைத்தாளாய் அவள் ராமின் அடுத்த வார்த்தையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
செல்ஃபோனில் எதிர்முனைப்பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ராமிடம் மெல்லிய பதற்றம் தெரிந்தது.
"ம்" என்ற ஒற்றை எழுத்திலும் "அப்படியா?" என்ற ஒற்றைச் சொல்லிலும், அவன் அந்த பதற்றத்தைப் பொத்திவைத்தான். சிறிது நேரம் பேசிவிட்டு செல்லுக்கு ஓய்வுகொடுத்தவன்,
"கவி, சீக்கிரம் வா. நான் ஆஸ்பிட்டல் போகணும்" என்று அவனிடம் இருந்த பதற்றத்தைக் கோவிட்டைப் போல் விரைவாக அவளிடம் பரப்பினான்.
கவியும் காரில் ஏறி அமர்ந்துகொண்டே, "என்னாச்சு. ஏன் இவ்வளவு பதற்றமாக இருக்கே ராம்?" என்று சற்று பயந்த குரலில் கேட்டாள்.
திடீரென சைடு வாங்கி ஓரங்கட்டிய காரை, சாலைக்கு நடுவே கொண்டு வந்தவன்... கவியின் வீட்டை நோக்கிச் சீறினான்.
ஒருவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, அவரிடம் இருந்து நீண்ட நேரம் பதில் வரவில்லை என்றால், ஒன்று கேள்வி சிக்கலானதாக இருக்கும். இல்லை, கேட்பவரை அலட்சியப்படுத்துவதாக இருக்கும். இதை எண்ணியவள், ராமே பதில் சொல்லட்டும் என்று அமைதியாக இருந்தாள்.
ராம் தன்னை அமைதியாக்கிக் கொண்டு, "லில்லி மேடம் இறந்துட்டாங்களாம்" என்று மெல்லிய குரலில் சொன்னான்.
சில நேரங்களில் நாம் எதிர்பார்த்த ஒன்று நடந்தாலும், அந்த செயலின் தன்மையைப் பொறுத்து, அது நம்மைப் பாதிக்கத்தான் செய்யும். மழைத் தண்ணீர் போக இடமில்லாமல் வீடு கட்டிவிட்டு, போட் ஹவுஸில் இருக்கிறோம் என்று ஆள்பவனையும், ஆண்டவனையும் குறை சொல்லிக்கொண்டிருக்கும் சிலரைப் போல... ’லில்லி டீச்சர் பிழைக்க மாட்டார் என்பது தெரிந்த விசயமாக இருந்தாலும், அதை ஜீரணிப்பது என்பது, கடப்பாரையை விழுங்கிவிட்டு சுக்கு கஷாயம் குடித்தது போல என்பதை உணர்ந்தாள் கவி.
"ஆஸ்பிட்டலில் நிலைமை எப்படி இருக்குதாம்?" என்று பயமும் துக்கமும் கலந்த குரலில் கேட்டுக்கொண்டே தொண்டைக் குழிக்குள் தூர்வாரி எச்சிலைக் கொண்டு வந்தாள்... வறண்ட நாக்கு உலராமல் இருப்பதற்கு.
"அங்க என்ன நடக்குதுன்னு தெரியலை. லில்லி டீச்சர் இறந்த செய்தி வந்ததுமே, சித்தப்பா என்னை உடனே அங்கே கிளம்பி வரச்சொன்னார். அதுக்கு முன் உன்னைப் பத்திரமாக வீட்டில் விட்டுவிட்டு வரச் சொன்னார். நீ சின்னப் பொண்ணு. இங்கெல்லாம் வந்தால் பயந்துடுவன்னு சொன்னார்” என்று பொருள் விளங்கா மொழிக்கு விளக்கம் அளித்தான் ராம்.
அப்பாவிற்கு தன் மீதான பாசம் கவிக்கு நெகிழ்ச்சியைத் தந்தது. ஏதோ புதியதாக அந்த பாசத்தை அனுபவிப்பதைப் போல உணர்ந்தாள். தூரத்து நிலவு எப்போதும் அழகுதான்.
”ராம், நானும் ஆஸ்பத்திரிக்கு வர்றேன். இந்த செய்தி தெரிஞ்ச பிறகு, நான் நிம்மதியா வீட்டில் இருக்க முடியாது. பாவம் லில்லி டீச்சர்.” என்றாள் கவி.
இதற்குப் பதில் சொல்லாத ராம், காரை மருத்துவமனை நோக்கிச் செலுத்தினான். அதிலேயே அவன் பதில் இருந்தது.
ஆஸ்பிட்டல் கேட்டிற்குள் நுழைந்த கார், பார்க்கிங் பகுதிக்குச் சென்று, தனக்கு வசதியான இடமாகப் பார்த்து நின்றுகொண்டது. காரிலிருந்து இறங்கும்போதே கவியின் கண்கள் எமர்ஜென்ஸி வார்டைத்தான் தேடின. அந்த அறைவாசலில் மேலும் இரண்டு புதுமுகங்கள் கண்ணீருடன் தென்பட்டன. லில்லி டீச்சரின் குழந்தை அங்கிருந்த ஒரு பெண்ணிடம் ஒட்டிக்கொண்டிருந்தது. அந்த பெண் அழுதுகொண்டே இருந்தாள்.
உள்ளே நுழைந்த ராம் நேராகச் சித்தப்பாவிடம் சென்று, "எப்ப நடந்தது? என்னாச்சு சித்தப்பா?” என்று அடித்தொண்டையில் கேட்டான்... அங்கிருக்கும் அமைதியைக் குலைக்காமல்.
"இப்பதான் உயிர் பிரிந்ததுன்னு சொன்னாங்க. டீச்சரின் அப்பா, அம்மாவும் வந்திருக்காங்க”- என்று எழுபது வயது மதிக்கத்தக்க அவர்களைக் காட்டினார் எஸ்.கே.எஸ்.
லில்லியின் அம்மா அங்கிருந்த சேரில் உட்கார்ந்துகொண்டு, "லில்லி.. உன் பொண்ணை அனாதையாக்கிட்டு போயிட்டேயே... எங்களுக்கு நீ இருந்து செய்ய வேண்டியதை நாங்க செய்யும்படி பண்ணிட்டியே... உன்ன யாரு இந்த நிலைக்கு ஆளாக்கினா...?” என்று தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு கதறிக் கதறி அழுதுகொண்டிருந்தார்.
அந்தக் குழந்தை அந்தப் பெண்ணிடமிருந்து இறங்கிவந்து பாட்டியைக் கட்டிப்பிடித்துக்கொண்டது. கவியின் அப்பா, திகைத்துப்போன நிலையில் கண்களில் அரும்பு கட்ட நின்றிருந்தார். கவியைப் பார்த்ததும் அவளை நோக்கி வந்தார்.
”நீ ஏம்மா வந்தே? இதையெல்லாம் நீ தாங்கமாட்டேம்மா.” என்றார்.
”இருக்கட்டும்பா. நீங்க கவலைப்படாதீங்க. எதையும் நாம் தைரியமா எதிர்கொள்ளலாம்பா” என்று அவர் காதருகே அவள் கிசுகிசுக்க, அவர் முகம் கொஞ்சம் வெளிச்சமானது.
ஒரு டாக்டர் வெளியே வந்து, "ஃபார்மாலிட்டி முடித்து பாடியை உங்களிடம் தருவதற்கு 4, 5 மணிநேரம் ஆகும். கூட்டம் போடாம கலைந்து போங்க”ன்னு வழக்கமான டயலாக்கை ஒப்பித்துவிட்டுச் சென்றார்.
மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு மரத்தடிக்கு அனைவரும் வந்தனர்.
அப்போது லில்லியின் கணவர் பாலுவை தன் அருகே அழைத்த எஸ்.கே.எஸ்... “ரொம்பவும் வருத்தமா இருக்கு. எங்க பள்ளிக்கும் இது எதிர்பாராத பேரிழப்பு. உங்க வருத்தமும் துயரமும் புரியுது. ஈடுசெய்ய முடியாத இழப்புதான்... இப்போதைக்கு இறுதிக் காரியத்துக்குக் கொஞ்சம் பணம் தர்றேன். பிறகு வாங்க... உங்க பிள்ளையின் எதிர்காலத்துக்குத் தேவையானதை தர்றேன். டெப்பாசிட் பண்ணிக்கலாம்” என்றபடி, 500 ரூபாய் கத்தையை எடுத்து அவரிடம் கொடுத்தார். பாலு அதை வாங்க முனையும்போது, லில்லியின் அப்பா புனிதநேயன் அதைத் தடுத்தார்.
"மாப்பிள்ளை என் பொண்ணோட சாவுக்கு நீதி கிடைக்கணும். எப்படி விபத்து நடந்ததுன்னு தெரியணும். அதுக்கு முன்னாடி யார்கிட்டயும் எதையும் வாங்காதீங்க." என்று ஆக்ரோஷமாகச் சொன்னார்.
மறுபடியும் முதலில் இருந்தா என்று அங்கிருந்த எஸ்.ஐ. சலித்துக்கொண்டே, "சார், எல்லாத்தையும் உங்க மருமகன்கிட்ட பேசியாச்சு" என்று சமாதானப்படுத்தினார்.
"என் மருமகனை விலைக்கு வாங்கப் பார்க்கறீங்களா? நான் நேர்மையான பணியாற்றி ஓய்வுபெற்ற தாசில்தார். என் மகள் மரணத்திற்கு நீதி கிடைக்காமல் விடமாட்டேன். நான் கேஸ் கொடுக்கப் போகிறேன். எனக்கு என் மகளின் மரணத்தில் டவுட் இருக்கு" என்று திடமான முடிவுடன் பேசினார்.
"எங்கக்கிட்ட உங்க மகள் மரண வாக்குமூலம் கொடுத்திருக்கார். அது எதிர்பாராத விபத்துன்னு” என்ற எஸ்.ஐ.யிடம், "எங்கிட்டயே சட்டம் பேசறீங்களா சார்? இது மாதிரியான விசயத்தில் போலீஸ் வாங்கும் வாக்குமூலம் செல்லாது. மாஜிஸ்ட்ரேட்டோ தாசில்தாரோ உடனிருந்து கையெழுத்து போட்டாத்தான் செல்லும். இல்லைன்னா, சிகிச்சையளித்த மருத்துவர் வாக்குமூலம் வாங்கணும்" என்று சட்டத்தைக் கையில் எடுத்தார் லில்லியின் அப்பா புனிதநேசன்.
அவர் பேசியதைக் கேட்டதும் அனைவரும் வாயடைத்துப்போயினர்.
கவி ராமைப் பார்த்தாள். "கரி நாக்கு ராம், உனக்கு. நீ சொன்னதெல்லாம் நடக்குது" என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.
"சரி.. உங்க விருப்பம். நீங்க கேஸ் போடறதுன்னா போட்டுக்கங்க சார். இங்க மடியில் கனமில்லை. அதனால் எங்களுக்குப் பயமில்லை" என்று அறிவிப்பே இல்லாமல் பேட்டிங்கில் இறங்கினான் ராம்.
"கேஸ் போட்டா ஸ்கூல் பேர், பேப்பரில் வரும்டா." என்று சற்று பயத்துடன் சொன்னார் எஸ்.கே.எஸ்.
"வரட்டும் சித்தப்பா. ஏன் பயப்படறீங்க? இன்னிக்கு நீங்க சொல்ற மாதிரி பணம் வாங்கிட்டு அமைதியா போறவங்க, அவங்களுக்குப் பணத்தேவை வரும்போதெல்லாம் மிரட்டமாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? பிரச்சனையில் இருந்து ஒதுங்கி பிரச்சனையைத் தள்ளிப் போடுவது புத்திசாலித்தனம் இல்லை சித்தப்பா, பிரச்சனைக்குள்ளிருந்து அதற்கு முடிவு எடுப்பதுதான் சரி. விபத்து எல்லா இடத்திலும் ஏற்படும். இதனால் எல்லாம் பள்ளியின் பேர் கெடாது." என்று அவன் துணிச்சலாகப் பேசினான்.
"ஓகே சார்... கேஸ் கொடுக்குறது உங்க விருப்பம்.” என்ற எஸ்.கே.எஸ்., ராமிடம் திரும்பி "என்ன ஏதுன்னு பேசிட்டு சீக்கிரம் கிளம்புங்க" என்றபடி விருட்டென்று கோபமாகக் கிளம்பினார்.
"ஸ்டேஷனுக்கு வந்து கேஸ் கொடுங்க" என எஸ்.ஐ.யும் சொல்லிட்டு போய்விட்டார்.
“டேய் ராம் எப்படி ஒரு வில்லத்தனம் பண்ணியிருக்கிறாய்? கேஸ் போடவச்சு என் கதையை ஒரே வழியாக முடித்துவிட்டாயே?’ என்று மனதிற்குள் கவி நொந்துகொண்டாள்.
"கவி கிளம்பலாம் வா.." என்று சொல்லிவிட்டு காருக்குச் சென்றான்.
கவியும் கசாப்பு கடைக்காரனை நம்பிய ஆடுமாதிரியே ராமின் கூடவே ஓடினாள்.
"ராம்.. கார் அருகே செல்லும்போது செல்ஃபோன் தடைபோட்டது. அழைப்பை எடுத்தான்.
"ஓகே... ஒன்னும் இல்லை, பிரச்சனை வரத்தான் செய்யும் பார்த்துக்கலாம்" என்று ராம் சொல்வதைக் கேட்டதும், கவிக்கு ராம் பல பரிணாமங்களில் தெரிந்தான்.
அவன், கதாநாயகனா? வில்லனா?
கணிக்க முடியாத மனநிலையில் கவி.
(திக் திக் தொடரும்)
சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #35