தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே அனுப்பப்பட்ட கவி, தன் நிலையில் இல்லை. "மீன் தொட்டியிலிருந்து மீனை எடுத்தவன், திரும்பத் தொட்டிக்குள் விடுவானா? இல்லை வெளியில் போட்டுவிடுவானா?” என்று தொட்டி மீன் துடிப்பதுபோல மனதிற்குள் பரிதவித்தாள் கவி. (மீனின் மனநிலை தெரியுமா? என்று கேட்பவர்களின் மைண்ட் வாய்ஸ், கேட்கிறது.)
’சி.சி.யூ.வில் லில்லி மேடம், போலீஸிடம் என்ன வாக்குமூலம் தரப்போகிறார்? இது விபத்தல்ல. கொலைக்கான சதித்திட்டம் என்று அவர் சொல்லிவிட்டால்... நம் கதை முடிந்தது. போலீஸ் தீவிரமாகக் குடையும். கொலை செய்யறதுல பி.எச்.டி. வாங்கியவர்களே நம் தமிழ்நாடு போலீஸ்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது. நானோ, அதில் எல்.கே.ஜி. கூட இல்லை. நான் மாட்டினால் கூட பரவாயில்லை. எனக்கு கைகளாகவும், இதயமாகவும் இருப்பவர்கள் சிக்கிக்கொண்டால்...?’ நினைக்கும்போது உடல் உதறியது. பலவித எண்ணங்களின் சுனாமியில் அவள் மனம் சிக்கிக்கொண்டது.
'15 நிமிடத்திற்கும் மேல் சி.சி.யூ.வில் போலீஸ் இருந்தது. இவ்வளவு நேரமா லில்லி பேசுகிறார். சி.சி.யூ.வில் இருக்கும் ஒருவரால் இவ்வளவு நேரம் வாக்குமூலம் தரமுடியும் என்றால், அவ்வளவு விரைவில் அவருக்கு மரணம் வருவதற்கு வாய்ப்பில்லை. அவர் பிழைத்துக்கொண்டால், பெரிய தண்டனையிலிருந்து தப்பிக்கலாம்’ என்று நினைத்துக்கொண்டு நிம்மதியடைந்தாள்.
‘ஒருவேளை லில்லி, திக்கித் திணறிப் பேசவே சிரமப்படுகிறாரோ? அவர் சொல்வதை மெதுவாகப் பதிவு செய்கிறார்களோ... ஒருவேளை அவர் சந்தேகத்தை எழுப்பிவிட்டு மரணமடைந்தால்... போலீஸுக்குப் பயந்து ஓட வேண்டியிருக்குமே’ என்று அவள் மனம் அவளைக் கேட்காமலே புரண்டுபடுத்து பயமுறுத்தியது.
அப்போது, உள்ளே இருந்து வெளியே வந்த எஸ்.ஐ. முகத்தில் பெரிய உணர்ச்சி எதுவும் தெரியவில்லை. அவர் முகம் எளிதில் படிப்பதற்கு உகந்ததாக இல்லை.
அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று கவி மட்டுமல்ல, மூலைக்கு மூலை நின்றுகொண்டிருந்த எஸ்.கே.எஸ். ராம், லில்லியின் கணவர் என அனைவரது விழிகளும் எஸ்.ஐ.யை மொய்த்தன.
"பேஷண்ட் திணறித் திணறிப் பேசினார். அவருடைய கவனக்குறைவால்தான் இந்த விபத்து நடந்ததுன்னு சொல்லியிருக்கார். விபத்துக்குப் பள்ளி நிர்வாகமோ, பிறரோ காரணமில்லைன்னு க்ளீனா ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கார். ஓகே. நோ ப்ராப்ளம்” என்றார் எஸ்.ஐ.
அதைக் கேட்டதும் கவியின் முகத்தில் தவ்சண்ட் வாட் பல்பு எரிந்தது..
எஸ்.கே.எஸ். முகத்தில் நிம்மதி தெரிந்தது. பள்ளியின் பெயர் காப்பாற்றப்பட்டது என்ற நிறைவுக்கு அவர் வந்திருந்தார். லில்லியின் கணவர் முகத்திலோ, உப்புசப்பற்ற தன்மை தெரிந்தது. ’விபத்துக்குக் காரணம் பள்ளி நிர்வாகம் இல்லை என்று லில்லி ஏன் சொல்ல வேண்டும். இதனால் கிடைக்க வேண்டிய இழப்பீடும் கிடைக்காமல் போய்விடுமோ?’ என்ற குழப்பம் அவருக்கு வந்தது.
கவியோ மீண்டும் மனம் புரண்டாள். அவள் முகத்தில் குழப்ப ரேகைகள் கோலம் போட்டிருந்தன. ’லில்லி மேடம் ஏன் மாற்றிச் சொல்ல வேண்டும்? ஒருவேளை நடந்தது என்ன என்று அவருக்கு நினைவில்லையா? அல்லது புரிந்துகொள்ள முடியவில்லையா? ஏதோ ஒன்று, அவரது வாக்குமூலத்தால் சைக்கிள் கேப்பில் நாம் தப்பித்தோம்’ என்ற எண்ணம் கேக்கிற்கு மேலிருக்கும் செர்ரி பழம் போல் அவளுக்குள் இனித்தது.
நர்ஸ் வெளியே வந்து "கவிநிலா யாருங்க? பேஷண்ட் பாக்கணுமாம்” என மின்னலெனச் சேதி சொல்ல, ’அவர் என்னை எதற்காக வரச்சொல்கிறார்?’ என்ற தயக்கத்துடன் சி.சி.யூ.விற்குள் சென்றாள் கவி.
லில்லி அருகில் சென்று "டீச்சர்" என்றபடி கைகளைத் தொட்டாள். கண்விழித்த லில்லி, "கவி நான் கொடுத்த வாக்குமூலம் சரிதானே?" என்று மெல்லிய குரலில் கேட்டார்.
"மேம், இந்த நிலைல உங்களப் பார்க்கும்போது வருத்தமா இருக்கு. அன்னைக்கு என்ன நடந்ததுன்னு எனக்கு எப்படி தெரியும்?” என்று கவி சொல்ல, அதைக் கேட்டு வெறுமையாய் சிரித்தார் லில்லி. அந்தச் சிரிப்பில் ஆயிரம் கேள்விகள் ஒளிந்திருந்தன.
திக்கித் திணறி மறுபடியும் மெல்லிய குரலில் பேசினார் லில்லி, "கவி, பிரின்சிபல் என்னையும், பி.டி. டீச்சரையும் கூப்பிட்டு கொஞ்சம் கோபமா பேசினார். பி.டி டீச்சரைத்தான் அதிகமாகத் திட்டினார். இருந்தாலும் பி.டி.க்கு சமமாக பி.ஜி. முடிச்ச என்னையும் நிக்க வச்சிட்டாங்களேன்னு மனக்குழப்பத்துடனே லேப்புக்கு வந்தேன். ஏற்கனவே நான் பீக்கரில் நீரை ஊற்றி வைத்திருந்தேன். சூடு படுத்துவதற்காக பீக்கரை மீண்டும் செக் பண்ணாமல் சூடுபடுத்திவிட்டேன். சூடுபடுத்தினால் நீர் எப்படி வெடிக்கும்? யாரோ நீருக்குப் பதில் அமிலத்தை மாற்றிவிட்டார்கள். என் மனக்குழப்பத்தை அவங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கிட்டாங்க. தியாவின் மரணத்திற்கு நான் ஒருவகையில் காரணம். அதுக்கான தண்டனைன்னு இதை நான் மனப்பூர்வமா ஏத்துக்கிட்டேன்"என்று திணறித்திணறிப் பேசியவர், அப்படியே கண்களை மூடிக்கொண்டார்.”
டீச்சர்... என்ன சொல்றீங்க?” என்று கவி பலமுறை கேட்டும் அவர் மயக்க நிலைக்குச் சென்றுவிட்டார்.
ரங்கராட்டினம் மாதிரி நிற்காமல் சுற்றியது அடுத்தடுத்த நிகழ்வுகள். வெளியே வந்த கவியிடம் "லில்லி என்ன சொன்னார்?" என்று அனைவரும் ஒரே கேள்வியை வைத்தனர்.
"பெருசா எதுவும் பேசலை... ஹோம் ஒர்க்... ஸ்கூல் ஸ்கூல்ன்னு முனகினார். மயங்கி மயங்கி விழிக்கிறார்..." என்று அனைவருக்குமாய் ஒற்றைப் பொய்யை உதிர்த்துவிட்டு மெளனமாய்் வெளியே வந்தாள் கவி. அவள் வெளியேறுவதைப் பார்த்து ராமும் கவியின் பின்னால் வந்தான். இருவரும் காரில் ஏறினர். சில நிமிடங்கள் மெளனம் என்னும் கனத்த போர்வை அவர்களை மூடிக்கொண்டது.
ராம் தொண்டையைச் செருமிக்கொண்டே, "கவி, பிக்ரிக் அமிலத்த வெப்பப்படுத்தினால் வெடிக்குமா?" என்று கேட்டான்.
ஸ்டீயரிங்கைப் பிடித்திருந்த கவியின் கைகள் நடுங்கின. கால் அதிர்ச்சியில் பிரேக்கை அழுத்த முனைந்தது. ஆனாலும். சமாளித்துக்கொண்டு, "தெரியலையே ராம். அது என்ன பிக்ரிக் ஆசிட். பேரு புதுசா இருக்கு” என்றாள் அலட்சிய தொனியைக் குரலில் வரவழைத்துக்கொண்டு. அதைக் கலைக்கும்படி ராம் கேட்டான், “கவி, லில்லி மேடம் உண்மையைக் கண்டுபிடிச்சிட்டாங்களா?”
( திக் திக் தொடரும் )
சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #33