அத்தியாயம்- 14
ரம்யாவின் அப்பா, தன் கோபத்தைக் காட்டி, கவியைத் துரத்தியது, அவளுக்கு அவமான உணர்ச்சியை உண்டாக்கியது.
அவர் வீட்டுக்குள் நுழைந்த வேகத்தில் கதவைத் தாழிட்டுக் கொண்டார்.
’எதற்காக, நம் பள்ளியின் பெயரைச் சொன்னதும் இப்படி அவர், கோபத்தில் எகிறிக்குதிக்க வேண்டும்?’-முகம் வாடிய கவி, யோசித்தாள்.
ஒவ்வொரு மனிதனும் ஒரு செயலில் உச்சகட்ட அவமானம் அடையும்போது, ஒன்று அந்த செயலை விட்டு விலகுவான். அல்லது அந்த செயலைச் செய்து, அதனை சாதனையாக்கி ஜெயித்துக் காட்டுவான். இப்ப கவி பட்ட அவமானம், ரம்யாவைப் பற்றி அறியாமல் இங்கிருந்து போகக் கூடாது என்ற வைராக்கியத்தை அவளுக்கு உண்டாக்கியது.
அக்கம் பக்கத்தில் விசாரித்தாவது, ரம்யாவைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். அவளுக்கு என்ன ஆனது என்று தெரிந்துகொள்ளாமல், இந்த ஏரியாவை விட்டு நகரக்கூடாது என்று மனதிற்குள் குறிப்பெழுதி, அடிக்கோடு போட்டுக்கொண்டாள்.
உட்பக்கம் தாழிடப்பட்ட அந்த கதவையே சில நிமிடங்கள் வெறித்துப் பார்த்தாள்.
‘பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். இந்த சோட்டா பீம் ( ரம்யாவின் அப்பாவைப் பார்த்ததும் கவி அவருக்கு உடனே வைத்த நிக் நேம்) கொஞ்சம் கூட இரக்கம் காட்டவில்லையே?’
வேகமாக வெளி கேட்டை நோக்கி நடந்த கவி, அந்த கேட்டின் மீது கோபத்தைக் காட்டி, அதை வேகமாக உதைத்தாள். கால் விண்ணென்று வலித்தது. அவள் மனதைப் போலவே.
வெளியில் இறங்கியவள், மீண்டும் லாண்டரிக் கடைக்காரரிடம் வந்தாள். அவர் இப்போதும் கர்ம சிரத்தையாக, அயர்ன் பண்ணுவதிலேயே கண்ணானார். அவருக்குப் பக்கவாட்டில் கீழே அமர்ந்திருந்த அந்த இளம்பெண், இப்போது, தூக்குவாளிச் சோற்றை, தட்டில் கொட்டி, குழம்பை ஊற்றிக்கொண்டிருந்தாள். கமகமவென்று கருவாட்டுக் குழம்பு வாசனை, ஆளைத் தூக்கியது. அது அவளுக்கும் பசியைத் தூண்டி, வயிற்றுக்குள் கிள்ளியது. தாத்தா என்று கூப்பிட நினைத்தவள், சட்டென அதை மாற்றிக்கொண்டு...
"அண்ணா" என்றாள்.
அந்த சொல்லுக்கு, பாசமலர் சிவாஜி மாதிரி ஃபீல் பண்ணி,
"சொல்லும்மா தங்கச்சி” என்றவர் "என்னம்மா, சாரை பாத்தியாம்மா" - திடீர் அக்கறையோடு கேட்டார்.
"அண்ணா, நான் ரம்யாவத்தான் பார்க்க வந்தேன்" என்றாள்.
"ரம்யாதான் இல்லையேம்மா. அது போயி ரெண்டு வருஷம் ஆச்சு. இல்லாத பொண்ணுக்காவத்தான் இவ்வளவு நேரம் காத்திருந்தியா?"என்றார்.
இதைக்கேட்டதும் அவள் இதயம் ’திடுக் திடுக்’ என்று திடீரென வேகமாக அடித்துக்கொண்டது. அவளுக்கு மட்டும் இப்போது பி.பி. பார்த்தால், அந்த `ஸ்பிக்மோமானோ மீட்டரின்’ மானிட்டரே வெடித்துச் சிதறிவிடும்.
பதட்டம் மாறாமலே... "என்னண்ணா... இப்படி குண்டத் தூக்கித் தலையில் போடறீங்க. ரம்யாவுக்கு என்ன ஆச்சுண்ணா? எப்படி இந்த சின்ன வயசில்..? சூசைடா” -என்று பதறினாள்.
இதைக்கேட்ட அவர் “ஏம்மா, முதல்ல உன் வாயை நாலு டம்ளர் தண்ணி ஊத்திக் கொப்புளி. நான் என்ன சொல்ல வர்றேன்னு கூடத் தெரிஞ்சிக்காம... என்னென்னவோ கற்பனை பண்ணிக்கிறீயே? பாவம் தாயில்லாப் பொண்ணு” என்று குரல் உயர்த்தியவர்...
"ரம்யா பூனாவோ..பூரானோ... அங்க போய் படிக்கிது. 4 மாசத்துக்கு ஒரு தபா தான் வரும்”
இதைக்கேட்டுக்கும் போதே, மனம் குளிர்ந்தது.
’அதற்குள் அவசரப்பட்டு, அசிங்கப்பட்டுட்டேனே... சரியான முந்திரிக்கொட்டை.’-என தன் தலையில் நறுக்கென்று, கற்பனையில் குட்டு வைத்துக்கொண்டவள்....
“அவ படிக்கிறது புனேவா?... ஹ..ஹ...ஹா... ” என்றாள்.
”ஆமாம்மா, ரம்யா தங்கமான பொண்ணு. அங்க இருந்து வரும்போது, எனக்கு ஏதாவது வாங்கிட்டு வந்து கொடுக்கும். நான்தான் அதுக்கும் எல்லா ட்ரெஸையும் அயர்ன் பண்ணிக்கொடுப்பேன். நாம அயர்ன் செய்தாதான் ரம்யாவுக்கு பிடிக்கும். உசத்தியான துணியை எல்லாம் எடுத்துகிட்டு வந்து கொடுத்து, அயர்ன் பண்ணிகிட்டு போகும். காசுலயும் தாராளம்" என்று சந்தடி சாக்கில் தன் தொழில் பெருமையையும் டமாரம் அடித்தார்.
கவிக்கு ரம்யா உயிருடன் இருக்கிறாள் என்பதே பெரும் மகிழ்வைத் தந்தது. கவி மட்டும் ஒரு ஆண்பிள்ளையாக இருந்திருந்தால், ரோட்டிலேயே குத்தாட்டம் போட்டிருப்பாள்.
அவர் என்ன நினைத்தாரோ, "இன்னாம்மா நீ... சினேகிதக்காரப் பொண்ணுன்ற. அது எங்க இருக்கு? என்ன படிக்குது?ன்னு கூட உனக்குத் தெரியலையே"- எதிர்கட்சி வக்கீல் மாதிரி கேள்வி கேட்டார்.
’விட்டால் இவர் தண்ணியிலேயே வெண்ணெய் எடுப்பார் போலிருக்கிறதே..இவர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் பேசவேண்டும்” என்று உஷாரானாள்.
"அண்ணா, நான் ஃபாரின் போய்ட்டேன். அதனால எனக்கு ரம்யாவைப் பற்றி அதிகம் தெரியலை. இப்பதான் ரிட்டர்ன் ஆனேன். அதனான் ரம்யாவைப் பார்த்துட்டுப் போகலாம்ன்னு. கே.என்.எம்.ஸ்கூல்ல படிச்சா பெரிய ஆளா வருவாங்க. அதான் ரம்யாவும் பெரிய படிப்பு படிக்கறா...” என்று வார்த்தையால் வீடு கட்டினாள்.
"ரம்யா எந்த ஸ்கூல்ல படிச்சிதுன்னு எல்லாம் எனக்குத் தெரியாதும்மா. கொஞ்ச நாள் ஸ்கூலுக்குப் போகாம வீட்ல இருந்துச்சு. அப்பறம் நீ சொன்னியே... பூனா.... அங்க படிக்கப்போயிடுச்சு.. அவங்க அப்பா டென்சன் பார்ட்டி." என்றார் லாண்டரி வண்டி.
ரம்யா உயிரோடு இருக்கிறாள். அவள் அம்மா உயிரோடு இல்லை. இங்கே சென்னையில் தங்கள் பள்ளியில் படித்துவந்தவள், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, பின் புனேவில் படிப்பைத் தொடர்கிறாள். இதன் பின்னணியில் ஏதோ ஒன்று இருக்கிறது. அவளுக்கு தங்கள் பள்ளி மீது ஏதோ ஒரு மோசமான புகார் இருக்கிறது. அங்கே நரமாமிசம் சாப்பிடும் ஆட்கள் இருப்பதாகக் குறிபெழுதுகிறாள். ரம்யாவைப் பற்றி இப்போதைக்கு இந்தத் தகவல் போதுமானது என்று நினைத்துக்கொண்டாள்.
"தேங்க்ஸ் அண்ணா.... ரம்யா வந்தபிறகு வந்து பார்த்துக்கறேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
கவிக்கு ரொம்ப நேரமாகவே ஒரு உணர்வு இருந்தது. யாரோ தன்னையே எங்கிருந்தோ கூர்ந்து பார்ப்பது போல உணர்ந்தாள்.
அந்தத் தெருவை இருபுறமும் கண்காணித்துவிட்டு, பத்தடி நடந்திருப்பாள். பின்னால் ஒரு உருவம் தொடர்ந்து வருவது போல உணர்ந்தாள். சட்டெனத் திரும்பிப் பார்த்தாள். மரங்கள் மட்டுமே காற்றுடன் சண்டைபோட்டுக்கொண்டிருந்ததே தவிர வேறு யாரும் அங்கு இல்லை.
’ச்..சே.. இதெல்லாம் மனம் காட்டும் மாயப் பூச்சாண்டி...தேவையில்லாமல் உள்ளுணர்வு... எச்சரிக்கை மணியை அடிக்கிறது. வேலையில்லாமல்..’ என்று மனதைச் செல்லமாகக் கண்டித்தபடியே, தன்னைத் தேற்றிக்கொண்டு, கொஞ்சம் நிம்மதியானாள்.
பின்னாடியே யாரோ வருவது போன்ற காலடிச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தாள். சத்யராஜ் உயரத்தில், விஜய் நிறத்தில், தாடி வைத்த ஒருத்தன் கவியைவே பார்த்துக் கொண்டு. ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தான். மனதிற்குள் பகீர்...
அவனைக் கவனிக்காதது போல நடக்க ஆரம்பித்தாள். பயத்தில் கால்கள் ’பாம்புகளைப் போல்’ பின்னிக்கொள்ள ஆரம்பித்தன.
கவி நடந்தாள். அவன் நடந்தான், அவள் நின்றால் அவனும் நின்றான். கவியைத் தான் ஃபாலோ பண்ணுகிறான் என்பது கவிக்கு புரிந்தது.
கவிக்கு பில்டில் ஸ்ட்ராங்க். பேஸ்மட்டம் வீக்... என்றாலும், பயத்தை வெளிக்காட்டாமல், கெத்தாக நடந்து மெயின் ரோட்டுக்கு வந்துவிட்டாள். இனி பயமில்லை என்று நினைத்தாள்.
கவி மெயின் ரோட்டுக்கு வந்ததும், பின் தொடர்ந்த தாடிக்காரன் யாருக்கோ போன் பண்ணினான்.
யாரிடமாவது பேசினால் பயம் போகும் என நினைத்து, கவி ஷாலுவுக்கு போன் பண்ணினாள்.
ஷாலு ஃபோனை எடுத்து ஹலோ சொல்வதற்குள்...
அந்த மின்னல் நொடியில்... எங்கிருந்தோ ஒரு கார் விர்றென்று சீறி வந்து, கவி மீது ’படார்’ என்று மோதியது.
(திக் திக் தொடரும்...)
சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #13