மாயப் புறா - முந்தைய பகுதிகள்
அசோக்கின் மனம் சங்கவியை மையமாக வைத்துக்கொண்டு பல்வேறு எண்ணங்களில் நீந்தியது. ’அன்பு என்பது வார்த்தைகளோ செயலோ அல்ல. உணரப்படுவதும் உணர்த்தப்படுவதும் ஆகும். நான் நானாக இருந்து சாதிப்பதற்கு, நீயாக இருக்கும் அன்பு என்னுள் உயிரோட்டமாய் இருக்க வேண்டும். ரத்த ஓட்டங்களில் எல்லாம் நீ என்னும் அன்பு பிரவாகம் எடுக்க வேண்டும். உயிரணுக்களின் இடைவெளி எங்கும் நீ என்னும் அன்பு இளையராஜாவின் இசைபோல் ததும்பவேண்டும். அது வாலியைப் போல் வார்த்தைகளால் வித்தைக் காட்டும் செயலல்ல. உன்னதமான அன்பென்பது கர்ணனின் கவசமாக கடைசி வரை உடனிருந்து காப்பது. இத்தகைய உயிரில் உறையும் அன்பு எந்த உறவில் இறுதிவரை உடன் வருமோ, அந்த உறவைத்தான் சமூகம் கணவன் மனைவி என்ற பந்தங்களில் இணைக்கிறது’ என்று, அவன் மனம், அதீத உயரங்களில் சிந்தித்தது.
அசோக் இதே உயரத்திற்கு சங்கவியின் அன்பை எதிர்பார்க்கிறான். இளமை என்பது திருமணத்திற்குள் நுழையும் வரை, சூப்பர் ஸ்டார் படத்தை முதல் ஷோவில் முதல் வரிசையில் தரையில் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்டுக் கொண்டே பார்ப்பதுபோல பரவசமாக இருக்கும். திருமணத்திற்கு பின்போ, வாழ்க்கையானது அதே சூப்பர் ஸ்டார் படத்தை கூட்டம் இல்லாத நேரத்தில் தனியறையில் ஏகாந்தமாய் அமர்ந்துகொண்டு பார்ப்பது போன்ற ஒரு அனுபவம்.
அப்படி ஒரு பரவசமான வாழ்வை எதிர்கொள்ளும் எண்ணத்தில்தான் அசோக் சங்கவியின் மனநிலையை அறிய முயல்கிறான்.
"ம்" என்ற ஒற்றை எழுத்துக்கே வண்ண கனவுகளுடன் பகலை சிவராத்திரியாக ஆக்கிக்கொண்டு கண்விழித்தான் அசோக்.
வீட்டிலோ நாள் சரியில்லை என்று திருமணத்திற்கு ஏழு நாட்கள் முன்னதாகவே நலங்கு விழாவை ஆரம்பித்து விட்டார்கள். அதனால் திருமணம் வரை வீட்டில் கூட்டம், தீபாவளிப் பரிசுப் பொருட்களை வாங்க ரேஷன் கடையை நோக்கி படையெடுப்பவர்களைப் போல இருந்தது.
திருமணத்திற்கு தேவையான மளிகை பொருட்களை எல்லாம் கடை கடையாக ஏறி இறங்கி விலையையும் தரத்தையும் பார்த்து வாங்க வேண்டியதாக இருக்கும். அதனால் அந்தக் குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு வேலை அதிகமாக இருக்கும். டயர் வண்டி கட்டிக்கொண்டு டவுனில் இருக்கும் ஒரு சில மளிகைக் கடைக்குச் சென்று பொருள்களை வாங்கி வருவார்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் அதை சுத்தப்படுத்திக் காய வைப்பார்கள். அப்போதெல்லாம் வீட்டில் இருக்கும் வயதான பாட்டிகள் தான் அவற்றுக்குக் காவலுக்கு இருப்பார்கள்.
இந்த காலத்தில் ஃபோன் அடித்தால் போதும், அடுத்த நிமிடம் மளிகை பொருட்கள் சத்திரத்தில் இருக்கும். அந்தக் காலம் அப்படி இல்லை. அசோக் வீட்டிலும் மளிகை பொருட்கள் வாங்குவது அதை சுத்தப்படுத்துவது என்று வேலையில் மிகப் பரபரப்பாக இருந்தார்கள். இதில் அலமேலுவுக்கும், சங்கவிக்கும் கடும்வேலை. மூச்சுவிடக் கூட நேரமில்லாமல் கழிந்தது.
தங்கம் இதுதான் நேரம் என்று ஆறு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டாள். அந்த அறைச் சாவியை தஞ்சாவூர் கோவில் பொக்கிஷ அறைச் சாவி மாதிரி, முந்தானையில் முடிந்து வைத்துக்கொண்டிருந்தாள் தனத்தம்மாள்.
"கரிக்கா அரிசியும், கார் அரிசியும் பொங்கும் போது ஒரு உழக்கு விரிஞ்ச தொண்டை, சீரக சம்பா அரிசின்னதும் ஆழாக்கு விரிஞ்சதாம்" என்று தனத்தம்மாள் புலம்பிக் கொண்டிருந்தாள்.
"த.. அலமேலு விருந்தாளிகளுக்கு சீரக சம்பா அரிசி போட்டு வடி, ஆளுங்களுக்கு கார அரிசி வடிச்சிப் போடு. இரண்டு முறை உலை வைத்து வடி" என்று அதிகாரமாகச் சொன்னாள் தனம்.
வடலூரை மாதிரி, அடுப்பு எரிந்து கொண்டே இருந்தது. சாப்பாட்டுக்கு யாராவது வந்து கொண்டே இருந்தனர். திருமண நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் புவனாவிற்கு நிச்சயதார்த்தம் செய்வதற்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. புவனாவின் சித்திகள் நாகம்மா தங்கம் என்று ஐந்து பெண்கள் ஒருநாள் காஞ்சிபுரம் சென்று மிளகாய்ப் பழ நிறத்தில் நீல கலர் பார்டர் வைத்து ஒரு பட்டுப் புடவை எடுத்து வந்தார்கள். நிச்சயதார்த்தப் புடவை என்று சங்கவிக்குத் தெரியாது.
எல்லாரும் புடவையைப் பிரித்துப் பார்க்கும்போது விழி நிறைய கனவுகளுடன் ஆசையாக அந்த புடவையையே பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கவி. அசோக்கிடம் அந்த புடவையைக் காட்டும்போது பட்டும் படாமல் பார்த்தான். அவனுக்கு இந்த நிச்சயதார்த்தத்தில் விருப்பமில்லை என்று பலமுறை சொல்லிவிட்டான். இருந்தாலும், அவனால் நம்மை மீறி என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணத்தில் பெரியவர்கள் நடந்து கொண்டனர்.
தேவைக்காக சில சூழ்நிலைகளை மனிதன் உருவாக்குவான். இயற்கையாகவே சில சூழ்நிலைகள் உருவாகின்றன. சங்கவியிடம் பேச வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிய அசோக்குக்கு சுக்கிரன், கிரீன் சிக்னல் போட்டபடி சூழ்நிலையை உருவாக்கித் தந்தார்.
மிளகாய்த்தூள் அரைத்து வருவதற்கு டவுனில் உள்ள மெஷினுக்கு புனிதாவும் சங்கவியும் சென்றனர். அக்காவிற்கும் சங்கவிக்கும் துணையாக அசோக் டயர் வண்டி கட்டிக்கொண்டு, அதில் மிளகாய் தூள் அரைக்கும் அண்டாவையும் பச்சரிசி மாவு, கடலைமாவு இதெல்லாம் அரைப்பதற்கும் பாத்திரங்களை வைத்துக்கொண்டு டவுன் பக்கம் வந்தனர்.
’இன்று எப்படியாவது சங்கவியிடம் பேசவேண்டும். தன் மனதில் இருக்கும் அன்பை சொல்லிவிட வேண்டும்’ என்று துடித்தான். மிஷினில் எல்லாவற்றையும் இறக்கி வைத்ததும் மெல்ல அக்காவிடம் பேச்சுக் கொடுத்தான் அசோக்.
"அக்கா மிளகாய் நெடி உனக்கு ஒத்துக்காது. நீ போய் தனம் பாட்டிக்கு வெற்றிலைப் பாக்கு வாங்கிட்டு வா. நான் அரைக்கும் போது இருக்கிறேன்" என்று நைசாக பேசி அக்காவை அனுப்பி வைத்தான். அதற்குள் சங்கவி மிஷினில் மிளகாயைக் கொட்டினாள்.
"சங்கவி உனக்கு நெடி ஒத்துக்காது. தூர வா" என்று தனியாகப் பேசுவதற்கு வாசல் பக்கம் அழைத்தான்.
"இல்லை நான் இங்கேயே இருக்கேன். தூள் குறைந்தால் அத்தை திட்டுவாங்க" என்று பயந்த குரலில் சொன்னாள்.
"இது நம்ம மிஷன் தான். அதெல்லாம் திருடமாட்டாங்க" என்று சொல்லி விட்டு, "அண்ணே பார்த்து ஒழுங்கா அரைத்து கொடுங்கண்ணே" என்றான் மெஷின்காரரைப் பார்த்து.
"பாப்பா யாரு தம்பி புதுசா இருக்கு" என்று மிஷின் காரர் கேட்டார்.
" அண்ணாச்சி இது அத்தை பொண்ணு. எங்க அண்ணன் கல்யாணத்திற்கு உதவிக்கு வந்து இருக்கு" என்றான்.
"இவ்வளவு பொறுப்பா இருக்கு. இந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப்பா. உன் வாழ்க்கை நல்லா இருக்கும்" என்று ஜோசியம் சொன்னார் மெஷின் காரர். அசோக் முகத்தில் 2000 வாட்ஸ் பல்பு எரிந்தது.
சங்கவி எதையும் காதில் வாங்காதது போல அரைத்த மாவை காய வைத்துக் கொண்டிருந்தாள்.
" சங்கவி வெளியே வா" என்று கட்டாயப்படுத்தி வாசலுக்கு கூட்டி வந்தான். என்ன விஷயம் என்பது போல நிமிர்ந்து பார்த்தாள் சங்கவி.
" நான் ஒன்று கேட்டால் கோவிச்சிக்க மாட்டியே" என்று நைசாக வெற்றிலையில் சுண்ணாம்பு தடவுவது போல பேச ஆரம்பித்தான்.
" இல்லை சொல்லுங்க”
“ நீ பிளஸ் டூ வரைக்கும் படிச்ச பொண்ணு. அதனால யாரையாவது நீ விரும்புகிறாயா?"என்று ரொம்ப நிதானமா ஸ்லோ சைக்கிள் ஓட்டின மாதிரி கேட்டான்.
ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று புரியாமல் விழித்தாள். "ஏன் திடீர்னு இப்படி கேக்குறீங்க"
" இல்லை.. கேட்கணும்னு தோணுச்சு அதான்" என்று இழுத்தான்.
"சீச்சீ... என்ன கேள்வி இது. பிராக்கு பார்த்தாக் கூட எங்க அப்பா அம்மா என்னை கொன்னே போட்ருவாங்க" -என்று மெலிதாகப் பதறியவள்...
"நீங்க யாரையாவது விரும்பறீங்களா" என்று தோசையை திருப்பிப் போட்டாள்
’ஆஹா.. கொக்கி கரெக்டா மாட்டி இருக்கு. அப்படியே போட்டு இழுக்க வேண்டியது தான். என் மனசுல இருக்கறத எல்லாம் சங்கவி கிட்ட சொல்லிடணும்’ என்று நினைத்து வாயைத் திறக்க முயலும் போது,
" டேய் ..மச்சான்” என்று ஒரு குரல். ஒரு கை, அசோக்கின் தோளை உரிமையாய்ப் பிடித்தது. நண்பன் ரூபத்தில் வந்த வில்லன்.
" என்னடா.. மச்சான் நீ எல்லாம் மிஷினுக்கு வந்திருக்க" என்று அசோக்கிடம் பேசிக்கொண்டே சங்கவியை கண்களால் படம் வரைந்து கொண்டிருந்தான் அசோக்கின் நண்பனான கோபி. இதை கவனித்த அசோக், "சங்கவி தூள் ஆறியிருந்தால் எடுத்து பாத்திரத்தில் கொட்டு" என்று அவளுக்கு வேலை வைத்து உள்ளே அனுப்பினான். "மாப்ள அது என் அத்தை பொண்ணுடா" என்று சொல்லும்போதே அசோக்கின் மனமெல்லாம் ரசகுல்லா மாதிரி கரைந்தது.
"மச்சான் புரியுது புரியுது... நீயும் கவுந்துட்டியா" என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான் கோபி.
அதற்குள் அக்காவும் அங்கு வர, ஒன்றும் பேச முடியாமல் அமைதியாக மாவு அரைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.
இந்த காலத்தில் காதல் என்பது அன்றாட வேலைகளில் அதுவும் ஒன்று போல் ஆகிவிட்டது. செட் ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்வோம், இல்லன்னா நண்பர்களாக பிரிந்து விடுவோம் என பலரிடமும் ஒருவித எண்ணம் இருக்கிறது.
1985 களில் எல்லாம் காதல் என்பது கொலைக்குற்றம் போல. ஊரே அவர்களை ஒதுக்கி வைத்துவிடும். சொந்த பந்தங்கள் நல்லது கெட்டதுக்கு சேர்த்துக் கொள்ள மாட்டாங்க. இதுல வேற எப்படி வாழ்ந்துவிடுவார்கள் என்று பார்த்துவிடலாம் என்று சவால் விட்டு வீட்டில் சேர்த்துக் கொள்ளாமல் துரத்தி விடுவார்கள்.
அசோக்கும் அதனால் தான் எந்த பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காமல் இருந்தான். சங்கவியைப் பார்த்ததும் அத்தை மகள் என்ற உரிமை அவன் செல்களில் உள்ள ஹார்மோன்களில் எல்லாம் ஆர்மோனியம் வாசிக்க தொடங்கியது. இரவு முழுவதும் அசோக்கிற்கு தூக்கம் இல்லை. அசோக் நிச்சயதார்த்தம் நடக்க கூடாது. அதற்கு என்ன பண்ணுவது என்று தெரியாமல் தவித்தான். சங்கவியைப் பிடித்திருக்கிறது. அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினான். இதற்கெல்லாம் பல நாட்கள் தேவைப்படும். ஆனால் அண்ணன் திருமணத்தன்றே நிச்சயதார்த்தம் என்றால் என்ன செய்வது? என்று தெரியாமல் இரவெல்லாம் புரண்டு புரண்டு படுத்தான். எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். ஒரு விஷயத்தை தீவிரமாக மூளை யோசனை செய்ய ஆரம்பித்தால் ஒரு கட்டத்தில் மூளை சோர்வடைந்து ஓய்வு எடுக்க ஆரம்பித்துவிடும். அதுபோலத்தான் அசோக்கும் தூங்கிவிட்டான். அனைவருக்குமே தூங்கி எழும்போது மனம் தெளிவாக இருக்கும். அது போலத்தான் அசோக்கும் தெளிவான மனதுடன் இருந்தான். அவன் பிரச்சனைக்கு ஏதோ முடிவெடுத்த மாதிரி மனம் துள்ளல் போட்டது.
என்றுமில்லாமல் கண்கள் ஏனோ அடிக்கடி சங்கவி தேடியது. தேடிய கண்களில் மாட்டிய மீன் என துள்ளியது அசோக்கின் மனம்.
டவுனில் இருக்கும் ஒரு நகை கடைக்குச் சென்றான் அவன் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை விற்றுவிட்டு அதற்கு பதிலாக வேறு ஒரு பொருளை வாங்கினான். அதை மிக பத்திரமாகக் கொண்டு வந்து அவன் பயன்படுத்தும் மர அலமாரியில் மறைத்து வைத்தான்.
திருமண நாள் நெருங்கியது அனைவரும் சத்திரத்திற்கு செல்ல தயாரானார்கள். பெண் அழைப்பிற்கு மாலையே சத்திரத்திற்கு சென்றனர். திருமணம் டவுனில் இருக்கும் ஒரு சத்திரத்தில் நடைபெறுகிறது. புவனா விலை உயர்ந்த புடவை நகைகளை அணிந்துகொண்டு தங்கத் தேராட்டம் ஜொலித்தாள். அதில் ஏனோ தெய்வாம்சம் இல்லை. சங்கவியோ சிம்பிளாக மைசூர் சில்க் புடவையில் சிலையென வலம் வந்தாள்.
ஒரு பக்கம் புவனாவின் குடும்பத்தினர் நிச்சயதார்த்த விழாவிற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். விடிந்தால் திருமணம், அசோக்கிற்கு நிச்சயதார்த்தம். தங்கத்திற்கும் செல்வத்திற்கும் மகிழ்வில் மனம் நிறைந்திருந்தது.
திருமண மண்டபத்தில் அவன் நகை கடையில் வாங்கிய அந்தப் பொருளைப் பத்திரமாக தன் சட்டை பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்தான். அதனால் சங்கவியின் வாழ்வில் விதி விளையாடும் என்பது அறியாமல் கலகலப்புடன் திருமணத்தில் கலந்து கொண்டாள் சங்கவி.
(சிறகுகள் படபடக்கும்)