மாயப் புறா - முந்தைய பகுதிகள்
ரமா அம்மா தன் மகன் செய்யும் வேலையைச் சொன்னதும் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த சங்கவிக்கு அதிர்ச்சியில் புரை ஏறியது. சங்கவி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு "என்னம்மா சொல்றீங்க?" என்றாள் அதிர்ச்சியான குரலில்.
"ஆமாம் மா என் மகன் கிரிதரன் ராணுவத்தில் உயர் அதிகாரியாக வேலை பார்க்கிறான். மருமகளும் ராணுவத்தில் டாக்டர். ஒரு பேரன் இருக்கிறான். அவர்கள் எல்லாரும் டேராடூனில் இருக்காங்க" என்று ரமா தன் குடும்பத்தை விளக்கினார். "அம்மா நீங்க தனியாகவா இருக்கீங்க"? என்றாள் சங்கவி கனிவான குரலில்.
"தனிமை வாழ்க்கை பழகிடுச்சு சங்கவி. இறுதிகாலம் நோயுடன் போராடும் போது தான் துணைக்கு யாரும் இல்லையே என்ற அனாதை உணர்வு ஏற்படுகிறது. என் கணவரும் ராணுவ வீரராக இருந்து 1962ல் நடந்த சீனப் போரில் உயிரை விட்டார் என்றார் ரமா கலங்கிய கண்களுடன். சங்கவிக்கு ரமா அம்மா தெய்வமாக தெரிந்தார்கள். "நாட்டிற்காக எவ்வளவு பெரிய தியாகம் செய்து இருக்காங்க. என்னால் இரண்டு நாள் அசோக் இல்லாமல் இருக்க முடியவில்லை. துடித்து விட்டேன். இனி சில நாட்கள் மருத்துவமனையில் எப்படி தங்கப் போகிறேன் என்று நினைக்கும்போதே எனக்கு அடி வயிற்றில் அமிலம் சுரந்தது. ரமா அம்மா தனியாளாக குடும்பத்தை பார்த்துக்கொண்டு மகனையும் படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வந்து உள்ளார்கள்.
ரமா அம்மா தன்னுடைய வாழ்க்கையையே நாட்டுக்காக அர்ப்பணித்தார்கள் என்று நினைக்கும் போது அவர்களின் மீதான மதிப்பும் மரியாதையும் பெருக்களில் சென்றது. என்ன பேசுவது என்று தெரியாமல் சங்கவி வாயடைத்து அமைதியானாள்.
" சங்கவி என்னாச்சு ஏன் அமைதியா இருக்கீங்க? என்று ரமா அம்மா கேட்டார். எதற்கெடுத்தாலும் கேலியும் கிண்டலும் பேசும் மல்லிகாவே ரமா சொன்னதைக் கேட்டதும் பெட்டி பாம்பு மாதிரி சுருண்டு படுத்து இருந்தாள்.
அந்த இடத்தில் ஒவ்வொருவரும் அவரவர் சிந்தனையில் மூழ்கி இருந்தார்கள். வாய் மட்டும் சொற்கள் மறந்து இருந்ததே தவிர மனம் அதிவேகமாக எண்ணங்களுடன் பேசிக் கொண்டுதான் இருந்தது. நாம் வாழ்க்கையில் திடீரென்று யாரையாவது சந்திப்போம் காரணம் அறியாமல் அவர்களைப் பிடித்துப் போகும், அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே அவர்கள்மீது அன்பு வரும் சந்தர்ப்பவசத்தால். நாம் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆரம்பித்தால் கெட்டவர்களாக இருந்தால் சொல்லாமல் கொள்ளாமல் அவர்களை விட்டு விலகி விடுவோம். பழகியவர்கள் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தால் அவர்களை நெருங்க விடாமல் தாழ்வு மனப்பான்மை பின்னுக்குத் தள்ளும். அவர்களிடம் பழகிய அன்பானது அவர்களிடம் நம்மை முன்னுக்குத் தள்ளும். இப்படியே மனம் சீசா ஆடிக்கொண்டிருக்கும். மனித உறவுகளில் தான் எத்தனை பேதங்கள். மனங்களைப் பார்க்க மறந்தோம். அந்தஸ்தில் ஊஞ்சல் கட்டி ஆகாயத்தில் ஆடுகிறோம். எல்லோருக்கும் நகைச்சுவை, கோபம், சோகம் என்ற உணர்வுகள் உண்டு. இவ்வளவு ஏன் நம்மிடம் பழகும் விலங்குகளைப் பாருங்கள் நாம் அடித்தாலோ திட்டினாலோ அதன் கண்களில் நீர் வழிந்து கொண்டிருக்கும். எப்போது அன்பைப் பெற்று அன்பை கொடுக்கிறோமோ அப்போது உலகம் வசப்படும் என்று நினைத்துக்கொண்டாள் சங்கவி.
வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் மனிதனுக்கும் அவர்கள் உயிர்ப்புடன் இருக்க அன்பு தேவைப்படுகிறது. எல்லா உறவுகளும் இருந்தும் நாம அனாதை பிணமாக போகப்போகிறோம் என்ற உணர்வு ரமாவின் மனதில் கரையானாய் அரித்துக் கொண்டிருந்தது. நீண்ட மௌனத்திற்கு பிறகு ரமாதான் "நான் என் அறைக்குச் சென்று படுக்கிறேன்" என்று மெதுவாக நடந்து அவருடைய அறைக்கு வந்தார்.
மருத்துவமனையில் மல்லிகாவின் உடல் நலம் பெற ஆரம்பித்தது. சங்கவியும் ரமா அம்மாவிடம் சொந்த மகள் மகளைப் போல பழக ஆரம்பித்தாள். அம்மாவின் உடல் நாளுக்கு நாள் நலிய ஆரம்பித்தது. இதைக் கவனித்த சங்கவி ரமா அம்மாவிற்கு தெரியாமல் அவர்களுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவரிடம் அவர்களின் உடல்நிலை பற்றி கேட்பதற்கு அவரை தனியாக பார்த்தாள்.
"வணக்கம் டாக்டர்"
" சொல்லுமா என்ன விஷயமா என்னை பார்க்கணும்னு" கேட்டார் டாக்டர்.
" ரமா அம்மா கேன்சர் நோயாளி இப்ப எப்படி இருக்காங்க"என்று அக்கறையுடன் கேட்டாள் சங்கவி.
" அவங்க இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டு இருக்காங்க" என்று வருத்தமாக சொன்னார் டாக்டர்.
"டாக்டர் ஆண்கள்தான் குடிக்கிறாங்க சிகரெட் பிடிக்கிறார்கள். பாக்கு, புகையிலை போடுறாங்க. அதனால் கேன்சர் வருது. பெண்களுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லையே அவர்களுக்கும் ஏன் கேன்சர் வருகிறது என்று சங்கவி ஆதங்கமாக கேட்டாள். "பெண்கள் மத்தவங்களை கவனித்து,கவனித்து தங்களை கவனிக்கறது இல்லைம்மா, மாதவிடாய் காலங்களில் வரும் பிரச்சனைகளை உடனடியாக மருத்துவரிடம் காட்டுவதும் இல்லை. வேலை வேலைனு சரியா சாப்பிடுவதும் இல்லை. இதெல்லாம் பெண்களுக்கு கேன்சர் வருவதற்கு காரணம். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இவர்களை சேர்த்து இருந்தாங்கன்னா இன்னும் நவீன கருவிகள் அங்கு இருக்கு. வீட்டிற்கு அருகில் இருக்குன்னு இங்கே சேர்த்திருக்காங்க என்று விளக்கமாக சொன்னார் டாக்டர்.
டாக்டரிடம் விடைபெற்ற சங்கவி ஏதோ யோசனையுடன் அங்கிருந்து வந்தாள். மல்லிகாவிடம் "அக்கா ரமா அம்மா பாவமா இருக்காங்க. அவங்களுக்கு யாருமே இல்லை. நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாமா? என்று தயங்கிக் கொண்டே கேட்டாள். மல்லிகாவைப் பொறுத்தவரை குழந்தை நல்லபடியாக பிறக்கும் வரை சங்கவியின் உதவி தேவை. அதனால் சங்கவி என்ன சொன்னாலும் அதுக்கு பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டினாள். "சரி சங்கவி நீ சொன்னா சரியா இருக்கும்" என்றாள்.
எப்படி ரமா அம்மாவை சம்மதிக்க வைப்பது என்ற யோசனையுடன் அம்மாவின் அறைக்குச் சென்றாள் சங்கவி. அங்கே ரமா சுருண்டு படுத்துக் கொண்டிருந்தார்.
" அம்மா இத்தனை நாள் எங்க கூட இருந்தீங்க. இன்னும் இரண்டு நாளில் மல்லிகாவை வீட்டுக்கு அழைச்சிட்டு போக போறோம்" என்று கவலையுடன் சொன்னாள். "எல்லாரும் ஒருநாள் பிரிய தானே போறோம்" என்று ஆறுதல் சொன்னார்.
" அம்மா எனக்கு ஒரு ஆசை ஒரு வாரம் வந்து எங்க கிராமத்துல எங்களோட இருங்கம்மா" என்று அழைத்தாள்.
"சங்கவி என் நிலைமையை பார்த்தும் உன்னால் எப்படி என்னை கூப்பிட முடியுது?" என்று கவலையுடன் கேட்டார் ரமா.
" அம்மா நீங்க நல்லாதான் இருக்கீங்க. டாக்டரிடம் கேட்டேன். இப்போதைக்கு கீமோதெரபி கூட இல்லையாம் ஒரு மாதம் கழித்துதான் தருவாங்களாம் .அதனால் எங்களோட வந்து இருங்க என்று வற்புறுத்தினாள்" சங்கவி.
"சங்கவி நீ வழிப்போக்கன் ஏன் என் பாரத்தை சுமக்கற" என்று அன்பாக சொன்னாள் ரமா.
"அம்மா இந்த உலகில் எல்லாரும் வழிப்போக்கர்கள் தான். வந்தோம் என்றாவது ஒருநாள் போகப்போறோம் இருக்கிற காலம் வரை எல்லாரும் அன்பாக இருப்போம். எங்க கிராமத்துக்கு வாங்கம்மா" என்று வற்புறுத்தி அழைத்தாள் சங்கவி.
ரமாவும் மனுஷி தானே அவருக்கும் ஆசைகள் இருக்கத்தானே செய்யும். சங்கவியின் அன்பில் கொஞ்சநாள் கிராமத்தில் இருக்கலாமா? என யோசித்தார். ரமா தனக்கு சாப்பாடு கொண்டுவரும் ஆளிடம் ஒரு கடிதம் கொடுத்து யாரையோ வரச்சொன்னார்.
(சிறகுகள் படபடக்கும்)